Saturday, March 5, 2016

கீதை - 14.1 - மீண்டும் சொல்கிறேன்

கீதை - 14.1 - மீண்டும் சொல்கிறேன் 


श्रीभगवानुवाच
परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम् ।
यज्ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गताः ॥१४- १॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
பரம் பூ⁴ய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம் |
யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்³தி⁴மிதோ க³தா: || 14- 1||

ஸ்ரீபகவான் உவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்

பரம் = உயர்ந்த

பூய: = மீண்டும், மேலும், அதிகம்

ப்ரவக்ஷ்யாமி = ப்ர வாக் க்ஷியாமி = சொல்கிறேன்

ஜ்ஞாநாநாம் = ஞானங்களில்

ஜ்ஞாநம் உத்தமம் = உயர்ந்த ஞானத்தை

யஜ்ஜ்ஞாத்வா = அதை உணர்ந்த பின்

முநய: = முனிவர்கள்

ஸர்வே = அனைத்து

பராம்= உயர்ந்த

 ஸித்தி = சித்தியை

இதோ = இங்கிருந்து, இன்றிலிருந்து

கதா: = அடைந்தார்கள்




ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஞானங்களுக்கு எல்லாம் மேலான பரம ஞானத்தை உனக்கு மீண்டும் சொல்கிறேன். . அதை அறிந்து முனிவர்கள் இந்த உலகில் இருந்து உயர்ந்த நிலையை அடைந்தார்கள்.


நாம் எதையும் அப்படியே கேட்பது இல்லை. புதிதாக ஒரு கருத்தைக் கேட்டால், அது நமக்கு ஏற்கனவே இருக்கும் கருத்தோடு ஒத்துப் போனால், அதை ஏற்றுக் கொள்வோம். இல்லை என்றால்,

"இதெல்லாம் கஷ்டம்"

"கேக்குறதுக்கு நல்லா இருக்கு, நடை முறையில் சாத்தியமில்லை"

"அப்படி ஒரு நிலையை அடைந்தால் நல்லது தான், ஆனால் முடியுமானு தெரியல" என்று சந்தேகத்தை எழுப்புவோம்.

"நான் மட்டும் மாறி என்ன செய்ய, எல்லாரும் மாறினால் தான் இது நடக்கும் " என்று கூறி நாம் மாறும் ஒரு சந்தர்பத்தை தள்ளிப் போட்டு விடுவோம். உலகம் மாறட்டும், அப்புறம் நான் மாறுகிறேன் என்று சொல்லி தப்பித்துக் கொள்வோம்.

அது மட்டும் அல்ல, புதிய கருத்துகள் மனதில் அவ்வளவு எளிதில் பதியாது.

மனித மனம் மறக்கும் இயல்பு உடையது.

எனவே, கிருஷ்ணன், "நான் மீண்டும்" சொல்கிறேன் என்று இந்த அத்யாயத்தை ஆரம்பிக்கிறான்.

சொல்வது யார் என்பதல்ல கேள்வி. கேட்பது யார் என்பது முக்கியம்.

கண்ணனே சொன்னாலும் அர்ஜுனனுக்கு மனதில் ஏறவில்லை. அவன் சந்தேகங்கள் அவனை துரத்திக் கொண்டே இருக்கின்றன.


அர்ஜுனன் இத்தனைக்கும் நல்ல மாணவன்.  கூரிய அறிவு கொண்டவன். நல்லவன், வல்லவன்.

கண்ணன் சொல்லிக் கேட்ட அர்ஜுனன் பாடு அப்படி என்றால், நாம் எல்லாம் எந்த மூலை.

நல்ல விஷயங்களை திரும்ப திரும்ப படிக்க வேண்டும். கேட்க வேண்டும். நாளடைவில் அது நமது இயல்பாக மாறிவிடும். அது வரை, திரும்ப திரும்ப அவற்றைக் கேட்பதை, படிப்பதை தவிர வேறு வழி இல்லை.

கீதை போன்ற புத்தகங்கள் ஒரு முறை படித்து முடித்து விட வேண்டிய புத்தகங்கள் அல்ல. திரும்ப திரும்ப படிப்பதன் மூலம் புது புது அர்த்தங்கள், ஆழ்ந்த சிந்தனகைள் அதிலிருந்து நமக்கு தோன்றிக் கொண்டே இருக்கும்.

வாழ் நாள் முழுவதும் படிக்க வேண்டிய புத்தகம் அது.

"இந்த உலகில் இருந்து உயர்ந்த நிலையை அடைந்தார்கள்."

பல மதங்கள், பல மத சம்பந்தப் பட்ட புத்தகங்கள் பொதுவாக சொல்வது என்ன என்றால், அவை சொல்லிய வழியில் நடந்தால் சொர்க்கம் கிடைக்கும், பரம பதம் கிடக்கும், வைகுந்தம் கிடைக்கும், கைலாயம் போகலாம், அடுத்த பிறவியில்  நல்லது நடக்கும் என்று.

ஏன், இந்தப் பிறவியிலேயே நல்லது நடக்காது என்று யாரும் கேட்பது இல்லை. இங்கேயே, இந்தப் பிறவியிலேயே நடக்கும் என்றால், அந்த மதங்கள், அந்த புத்தகங்கள் சொல்வது உண்மையா பொய்யா என்று தெரிந்து விடும். எனவே, யாரும் சரி பார்க்க முடியாத படி, சொர்க்கம், நரகம், மறு பிறவி என்று  சொல்லி விடுகிறார்கள்.

கீதை ஒன்று தான், "இந்தப் பிறவியிலேயே உயர்ந்த கதியை அடைய முடியும்" என்று சொல்கிறது.

அது மட்டும் அல்ல, இதுவரை பல முனிவர்கள் இந்த அறிவைப் பெற்று இந்த பிறவியிலேயே  உயர்ந்த கதியை அடைந்து இருக்கிறார்கள் என்று சொல்கிறது.

ஒருவேளை அது சரி இல்லை என்றால், கீதை என்றோ மறுக்கப் பட்டிருக்கும்.

இது வரை கீதை மறுதலிக்கப் படவில்லை.

எனவே, அது சொல்லியது உண்மை என்று சரி பார்க்கப் பட்டு இருக்கிறது.

"ஞானங்களுக்கு எல்லாம் உயர்ந்த ஞானத்தை உனக்குச் சொல்கிறேன்"

வாழ் நாள் எல்லாம் எதை எதையோ படித்துக் கொண்டிருக்கிறோம். யார் யார் சொல்வதை எல்லாமோ கேட்டுக் கொண்டிருக்கிறோம். யாராவது, எந்த புத்தகமாவது நான் சொல்வது தான் அனைத்திலும் உயர்ந்தது என்று சொல்லி இருக்கிறதா ? இல்லை.

கீதை அப்படி அறுதியிட்டுச் சொல்கிறது.

அப்படி சொல்லவும் ஒரு கம்பீரம் வேண்டும். உறுதி வேண்டும்.

அந்த பலம், கீதையிடம் இருக்கிறது.

இதை உணர்ந்தால் , இந்தப் பிறவியிலேயே உயர்ந்த நிலையை அடைய முடியும் என்றும் உறுதி கூறுகிறது.

அப்படி என்னதான் இருக்கிறது அதில்...

மேலும் பார்ப்போம்.

 







No comments:

Post a Comment