Friday, July 13, 2018

பகவத் கீதை - 1.42 குலத்தார்க்கும் , அதை அழித்தவர்களுக்கும்

பகவத் கீதை - 1.42  குலத்தார்க்கும் , அதை அழித்தவர்களுக்கும் 


सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च।
पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रियाः॥४२॥

ஸங்கரோ நரகாயைவ குலக்⁴நாநாம் குலஸ்ய ச|
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோ³த³கக்ரியா : ||1-42||


ஸங்கரோ = குழப்பத்தால்

நரகாயை = நரகமே

எவ = நிச்சயமாக

குலக்நாநாம் = குலத்தை அழிப்பவர்களுக்கும்

குலஸ்ய  = குலத்தில் உள்ளவர்களுக்கும்

ச= மேலும்

பதந்தி = வாழ்கிறார்கள்

பிதரோ  = முன்னோர்கள்

ஹி = அதனால்

யேஷாம் = இதன்படி

லுப்தா  = விட்டுப் போகிறது

பிண்டோ³த³க = பிண்டம் அளிக்கும்

க்ரியா = காரியம்


இப்படி வரும் வர்ண குழப்பத்தால், குலத்தில் உள்ளவர்களுக்கும், அதை அழிப்பவர்களுக்கும் நரகமே கிட்டும். மேலும், பிதுர்களுக்கு கிடைக்கும் பிண்டமும் நீரும் கிடைக்காமல் போகும். 


போரால் விளையும் தீமைகளை அர்ஜுனன் அடுக்கிக் கொண்டே போகிறான். இந்தத் தலைமுறை மட்டும் அல்ல, வருகின்ற தலைமுறைகள் மட்டும் அல்ல, முன்பு இருந்த தலைமுறைகளும் பாதிக்கப் படும் என்கிறான்.

இன்று இவற்றைப் படிக்கும் இளைய தலைமுறைகள், இது என்ன பிதுருக்கள், பிண்டம் என்று. இதுக்கெல்லாம் ஒரு அறிவியல் பூர்வமான நிரூபணம் ஏதாவது இருக்கிறதா? இறந்த முன்னோர்கள் , எங்கோ ஆகாயத்தில் இருக்கிறார்கள், இங்கே தரும் சோறும் நீரும் அங்கே எப்படி போகும் என்று கேள்வி கேட்கலாம். கேட்க வேண்டும்.

அந்த கேள்விக்கு பின்னால் வருவோம்.

நாம் , நம் வாழ்க்கையை சரியான படி கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? எப்படி வாழ்க்கையை நெறிப் படுத்துவது. எது சரி , எது தவறு என்று நமக்கு யார் சொல்லுவார்கள்? யாரை நாம் நம்புவது?

வாழ்க்கை சிறக்க வேண்டும் என்றால், முதலில் தேவை ஒழுக்கம்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் , ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்

என்பார் வள்ளுவர்.

சரி, ஒழுக்கம் என்றால் என்ன ?

ஒழுக்கம் என்ற சொல் ஒழுகுதல் என்ற சொல்லில் இருந்து வந்தது.

நீர், மேல் இருந்து கீழே ஒழுகும்.  கீழ் இருந்து மேலே போகாது .

நம் முன்னோர்கள் காட்டிய வழியில் செல்வது ஒழுக்கம். அவர்கள் காட்டிய நல் வழியில் செல்வது ஒழுக்கம்.

நம் முன்னேற்றத்தில், நம் உயர்வில் நம் தாய் தந்தையரை விட யாருக்கு அக்கறை இருக்க முடியும்.  அவர்கள் நமக்காக எவ்வளவோ தியாகங்கள் செய்து இருக்கிறார்கள். கஷ்டப் பட்டு இருக்கிறார்கள். நம் நன்மைக்காக எவ்வளவோ சொல்லி இருக்கிறார்கள். செய்து இருக்கிறார்கள். அல்லும் பகலும் நாம் நன்றாக இருக்க வேண்டும் சிந்தித்தவர்கள் அவர்கள்.

அவர்கள் இருக்கும் வரை, சொல்லாலும், செயலாலும் வழி காட்டிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இறந்த பின், அவர்கள் சொன்னதை, நமக்குச் செய்ததை நாம் நினைவூட்டிக் கொள்ள  உதவும் ஒரு சடங்கு இந்த பிண்டம் வைப்பது, எள் நீர் இரைப்பது எல்லாம்.

இது அவர்களுக்குப் போகிறதோ இல்லையோ, அவர்கள் நினைவு, அவர்கள் காட்டிய   வழி, அவர்கள் சொல்லிய நல்ல சிந்தனைகள் மீண்டும் மீண்டும் வந்து நமக்கு வழி காட்டும்.

அதற்காக செய்யப்பட்ட ஒரு வழி என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

போரினால், யார் நம் முன்னோர், அவர் நமக்கு என்ன சொன்னார் என்பதெல்லாம் விடுபட்டுப் போகும். வழி கட்டுதல் இல்லாமல் வருங்கால தலை முறை தவிக்கும் என்பது அர்ஜுனனின் வாதம் என்பது என் சிந்தனை.

இதற்கு வேறு வித வியாக்கியானங்கள் இருக்கலாம். இருக்கின்றன. அவற்றையும் படித்துப் பாருங்கள்.

எது உங்களுக்கு உதவியாக இருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

என்ன? சரிதானே?

http://bhagavatgita.blogspot.com/2018/07/142.html



No comments:

Post a Comment