Monday, July 9, 2018

பகவத் கீதை - 1.40 - குல நாசத்தால் , குல தர்மம் அழியும்

பகவத் கீதை - 1.40 - குல நாசத்தால் , குல தர்மம் அழியும் 



कुलक्षये प्रणश्यन्ति कुलधर्माः सनातनाः।
धर्मे नष्टे कुलं कृत्स्नमधर्मोऽभिभवत्युत॥४०॥

குலக்ஷயே ப்ரணஸ்²யந்தி குலத⁴ர்மா : ஸநாதநா :|
த⁴ர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமத⁴ர்மோऽபி⁴ப⁴வத்யுத ||1-40||

குலக்ஷயே = குலம் அழிவதால்

ப்ரணஸ்²யந்தி = அது அழிகிறது (எது?)

குலதர்மா : = குல தர்மம்

ஸநாதநா :| = பண்டைய, புராதான , தொன்று தொட்டு வரும்

த⁴ர்மே  = தர்மம்

நஷ்டே = சிதைந்தால்

குலம் = குலம்

க்ருத்ஸ்நம் = முழுவதும்

அத⁴ர்மோ = அதர்மம்

அபிபவத் = பரவும்

யுத = அதனால், மேலும்,


குலம் அழிவதால், குல தர்மங்கள் அழிகின்றன. குல தர்மங்கள் அழிவதால், அதர்மம் எங்கும் பரவும். (எனவே யுத்தம் வேண்டாம்)

இங்கு இரண்டு விஷயங்களை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

ஒன்று வர்ணாசிரம தர்மம். இன்னொன்று குலம் என்று சொல்லப்படுவது என்ன.

வர்ணாசிரம தர்மம் பற்றி எழுதப் புகுந்தால் அது மிக நீண்டு போய் விடுமோ என்ற அச்சத்தால் அதை இப்போதைக்கு விட்டு விடுகிறேன். (அது பற்றி அறிய விருப்பம் இருந்தால், நீண்ட ஒரு கட்டுரையை வாசிக்கும் பொறுமை இருந்தால் சொல்லுங்கள். தனியாக அது பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்).

இப்போது குலம் என்றால் என்ன என்று சிந்திப்போம்.

ஒரு சமுதாயம் செயல் பட வேண்டும் என்றால், அதில் உள்ள மக்களை ஏதோ ஒரு வகையில் குழுக்களாக பிரித்து, அவர்களுக்கு உள்ள கடமைகள், அந்த கடமைகளை தவறினால் அதற்கு உண்டான தண்டனைகள் என்று வரையறுக்க வேண்டும். இல்லை என்றால், ஒரு சமுதாயத்தை கட்டுப் படுத்த முடியாது.

உதாரணமாக, இன்றைய சூழ்நிலையை எடுத்துக் கொள்வோம்.

மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், கணக்கர்கள் (CA ) என்று பல குழுக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு கடமை இருக்கிறது. அதை சரியாகச் செய்ய வில்லை என்றால் அதற்கு தண்டனை உண்டு.

உதாரணத்துக்கு, மருத்துவ படிப்பே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டால் என்ன ஆகும்.  நாளடைவில், மருத்துவர்களே இல்லாமல் போகும் ஒரு சூழ்நிலை உண்டாகும். அப்புறம், கண்டவனும் நான் தான் மருத்துவர் என்று போலி மருத்துவர்கள் வருவார்கள். தவறான சிகிச்சையால் மக்கள் இறப்பார்கள்.

குலம்  (மருத்துவ குலம் ) அழிவதால், அந்த குலத்துக்கு என்று வைத்த தர்மங்கள் அழியும். தர்மங்கள் அழிந்தால் அதர்மம் தலை தூக்கும்.

எனவே, குலத்தை அழிக்கும் வேலையான இந்த யுத்தத்தை நாம் செய்ய வேண்டாம் என்கிறான்.

சத்ரிய குலம் அழிந்து போகும். பின் நாட்டை யார் நிர்வாகம் பண்ணுவது? எதிரி வந்தால் யார் சண்டை போடுவது?  நாட்டில் நீதி நேர்மையை எவ்வாறு பரிபாலனம் பண்ணுவது?

குல நாசம் செய்யும் இந்த போர் வேண்டாம் என்பது அர்ஜுனனின் வாதம்.

அர்ஜுனன் சொல்வது சரிதானே ?

http://bhagavatgita.blogspot.com/2018/07/140.html




No comments:

Post a Comment