Tuesday, July 3, 2018

பகவத் கீதை - 1.37 - சுற்றத்தாரை கொன்றபின் என்ன இன்பம் ?

 பகவத் கீதை - 1.37 - சுற்றத்தாரை கொன்றபின் என்ன இன்பம் ?



तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान्स्वबान्धवान्।
स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव॥३७॥

தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தா⁴ர்தராஷ்ட்ராந்ஸ்வபா³ந்த⁴வாந்|
ஸ்வஜநம் ஹி கத²ம் ஹத்வா ஸுகி²ந : ஸ்யாம மாத⁴வ ||1-37||

தஸ்மாந்  = அதனால்

ந = இல்லை

அர்ஹா = உடமை உள்ளவன்

வயம் = நாம்

ஹந்தும் = கொல்வதால்

தார்தராஷ்ட்ராந் = திருதராஷ்ட்ர கூட்டத்தினரை

ஸ்வபா³ந்த⁴வாந்  =  உறவினர்களோடு இருப்பவர்

ஸ்வஜநம் = சுற்றத்தார்

ஹி = நம்மால்

கத²ம் = எப்படி, எவ்வாறு

ஹத்வா = கொன்றபின்

ஸுகி²ந : = சுகமாக

ஸ்யாம  = நம்மால்

மாத⁴வ = மாதவா

எனவே, உறவினர்களான திருதராஷ்ட்ர கூட்டத்தாரை கொல்வது சரி அல்ல. உறவினர்களை கொன்றபின் நாம் எவ்வாறு இன்புற்றிருக்க முடியும் ?

அலுவலகத்தில் ஒரு வேலை இருக்கிறது. அவசரமான வேலை. இன்றே முடிக்க வேண்டும். மணியோ 6 ஆகி விட்டது. இன்னும் ஒரு இரண்டு மணி நேரம் உட்கார்ந்தால் முடித்து விடலாம். ஆனால், மனைவியையும் பிள்ளைகளையும் சினிமாவுக்கு கூட்டிக் கொண்டு போவதாக சொல்லி இருக்கிறோம். அனுமதி சீட்டும் (டிக்கெட்) வாங்கி ஆகி விட்டது. வீட்டுக்குப் போனால், வேலை கெடும். வேலையைப்  பார்த்தால், வீட்டில், மனைவி பிள்ளைகளோடு சினிமாவுக்கு செல்லும் சுகம் கெடும். எதை விடுவது ?

பரீட்சைக்கு இன்னும் 10 நாள் தான் இருக்கிறது. படித்து முடிக்க வேண்டியதுவை நிறைய இருக்கின்றன. நண்பர்கள் ஊர் சுற்ற கூப்பிடுகிறார்கள். எதை செய்வது, எதை விடுவது ?

தவறு செய்த உறவினர்களை தண்டிப்பது கடினம். விட்டு விட்டால் , எல்லோரும் ஒன்றாக இருக்கலாம். அது இன்பம்.  போர் செய்வது கடமை. ஆனால், கடமையை செய்வதால், நிச்சயம் இன்பம் வராது. நிறைய பேர் இறந்து போவார்கள். கடமையை செய்யாமல் விட்டு விடலாமா ?

இது அர்ஜுனனின் குழப்பம் மட்டும் அல்ல. நம் அனைவரின் குழப்பமும் கூட.

கடமையை செய்வதால் கட்டாயம் இன்பம் வராது என்று தெரிந்தால், அதை செய்யத்தான் வேண்டுமா ?

கடமையை செய்யாமல் விட்டு விட்டால் என்ன குடி முழுகி போகி விடும் ?

ஒரு ஆள், ஒரு முறை கடமை தவறினால் குடி முழுகிப் போகாது. ஆனால், அதுவே ஒரு நடைமுறையாகி விட்டால் ? எல்லோரும் தத்தமது இன்பத்திற்காக கடமையில் இருந்து நழுவ ஆரம்பித்தால் , குடி முழுகித்தான் போய் விடும்.

நாடே நாசமாகப் போய் விடும்.

சரி, அர்ஜுனன் இவ்வளவு கவலைப் படுகிறானே , போனால் போகட்டும் என்று அர்ஜுனனை விட்டு விட்டால், கண்ணனே சொன்னான், அர்ஜூனன் கடமையை விட்டு விட்டான், நாமும் அப்படியே செய்யலாம் என்று காலம் காலமாக எல்லோரும் கடமை தவறத் தலைப்படுவார்கள்.

இன்பமோ, துன்பமோ, இலாபமோ நட்டமோ, சுகமோ துக்கமோ, கடமையைச் செய்தே ஆக வேண்டும்  கீதை சொல்கிறது.

நம்மை நம்பி ஒரு வேலையை கொடுத்தால், அதை எப்பாடு பட்டாவது செய்தே தீர வேண்டும்.

இதுதான் கீதை சொல்ல வரும் தலையாய செய்தி.

அரசின் கடமை, பெற்றோரின் கடமை, ஆசிரியர்களின் கடமை, பிள்ளைகளின் கடமை, கணவன் மனைவியின் கடமை என்று எல்லோருக்கும் கடமைகள் இருக்கிறது.

கடமையில் இருந்து வழுவி அதை செய்யாமல் இருப்பது ஒரு புறம் இருக்கட்டும். பலருக்கு தங்கள் கடமை என்ன என்றே தெரியாது. தெரிந்தால் அல்லவா செய்ய.

தனி மனித சுதந்திரம் பெரிதாகப் போய் விட்டது. தனி மனித கடமைகளை பற்றி யாரும் பேசுவது இல்லை.

Statute of Liberty இருக்கிறது.

Statue of Responsibility இல்லை.

கீதை போன்ற ஆழ்ந்த கருத்துகளை கொண்ட பொக்கிஷங்களை விட்டு விட்டோம். அனுபவிக்கிறோம்.

http://bhagavatgita.blogspot.com/2018/07/137.html

No comments:

Post a Comment