Wednesday, July 11, 2018

பகவத் கீதை - 1.41 - பெண்கள் கெடுவதால் வர்ணக் குழப்பம் உண்டாகிறது - பாகம் 2

பகவத் கீதை - 1.41 - பெண்கள் கெடுவதால் வர்ணக் குழப்பம் உண்டாகிறது - பாகம் 1



अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः।
स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः॥४१॥

அத⁴ர்மாபி⁴ப⁴வாத்க்ருஷ்ண ப்ரது³ஷ்யந்தி குலஸ்த்ரிய :|
ஸ்த்ரீஷு து³ஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர : ||1-41||

அத⁴ர்மாபிபவாத் = அதர்மம் தலை தூக்கும் போது

க்ருஷ்ண  = கிருஷ்ணா

ப்ரது³ஷ்யந்தி = அவர்கள் கெடுக்கிறார்கள்

குலஸ்த்ரிய :| = குலப் பெண்கள்

ஸ்த்ரீஷு = எப்போது பெண்கள்

து³ஷ்டாஸு  = கெடுகிறார்களோ

வார்ஷ்ணேய = விருஷினி குல தோன்றலே

ஜாயதே = பிறக்கிறது

வர்ணஸங்கர :  = வர்ண குழப்பங்கள் உண்டாகின்றன

கிருஷ்ணா, எப்போது அதர்மம் சூழ்கிறதோ, அப்போது பெண்கள் கெட்டுப் போகிறார்கள். பெண்கள் கெட்டுப் போகும் போது , வர்ண குழப்பம் உண்டாகிறது.

வர்ணாசிரம தர்மத்தை கீதை தூக்கிப் பிடிக்கிறது என்ற குற்றச் சாட்டு இங்கிருந்து எழுகிறது.

வர்ணாசிரம கொள்கை தவறா ? சரியா என்ற விவாதத்திற்குள் போவதற்கு முன், வர்ணாசிரம தர்மம் என்றால் என்ன என்று சிந்திப்போம்.

ஒன்றை சரியாக அறிந்து கொள்ளாமலே அதை எவ்வாறு சரியா தவறா என்று எடை போடுவது ?  பலர் செய்கிறார்கள். அது பிழை.

சமுதாயத்தை ஒரு கட்டு கோப்பாக நடத்த நினைத்த நம் முன்னோர்கள், இதை எப்படிச் செய்யலாம் என்று சிந்தித்தார்கள்.

தனி மனிதனை உயர்த்த வேண்டும். அது எந்த வழி முறையாக இருந்தாலும், ஒரு  மனிதனை ஒவ்வொரு கால கட்டத்திலும் அவனை வழி நடத்த வேண்டும். அவனை ஒரு உயர் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இது ஒரு தேவை. தனி மனிதனை விட்டு விட்டு ஒரு வழி முறை கொண்டு வர முடியாது.

சரி, தனி மனித முன்னேற்றம் மட்டும் போதுமா ? நாடும், வீடும், இந்த சமுதாயமும் எக்கேடு கெட்டும் போகட்டும் என்று விட்டு விடலாமா ? தனி மனித சுதந்திரத்துக்கு ஒரு எல்லை உண்டா ? யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமா ?

முடியாது.

தனி மனிதனும் முக்கியம். சமுதாயமும் முக்கியம். இந்த இரண்டையும் சேர்த்து ஒரு வழி முறை செய்ய வேண்டும் என்று சிந்தித்து உருவாக்கியதுதான் இந்த  வர்ணாசிரம தர்மம்.

உலகில் , எந்த மூலையிலும் இப்படி ஒரு கோட்பாடை சிந்தித்துக் கூட பார்த்தது இல்லை யாரும்.

ஒரு மிகப் பெரிய கோட்பாடு. சில பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த அளவு சிந்தித்து இருக்கிறார்கள் என்றால், அவர்கள் அறிவின் ஆழத்தை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.


அப்படி என்ன பெரிய தத்துவம் இது என்று கேட்கிறீர்களா? பெரிய விஷயம் தான்.  விரிவாக நாளை பார்ப்போம்.

http://bhagavatgita.blogspot.com/2018/07/141-1.html



---------------------------- பாகம் 2 -------------------------------------------------------------------------

தனிமனிதனையும் முன்னேற்ற வேண்டும்; அதே சமயம் அவன் கட்டுக்கு அடங்காமல் போய் விடக் கூடாது.  அது ஒரு புறம் இருக்க, சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும். அதே சமயம் சமுதாய முன்னேற்றம் தனி மனிதனை  அளவுக்கு மீறி பாதிக்கக் கூடாது.

இந்த இரண்டையும்  சமன் செய்து எப்படி ஒரு கோட்பாட்டை உருவாக்குவது?

அதன் விடைதான் வர்ணாசிரமம்.

முதலில் தனி மனிதனை எடுத்துக் கொள்வோம்.

அவனின் வாழ்க்கையை நான்காக பிரித்தார்கள். ஒவ்வொரு பிரிவுக்கும் சில  கடமைகள், சில சலுகைகள் என்று விதி செய்தார்கள்.


முதல் பகுதி  - பிரம்மச்சரியம் - மாணவப் பருவம். படிப்பது ஒன்றுதான் கடமை. மற்ற பொறுப்புகள் கிடையாது. நன்றாகப்  படித்து, வாழ்வில் பொருள் சம்பாதிக்க  தன்னை தயார் செய்து கொள்ள வேண்டிய பருவம் என்று இதை  நிர்ணயம் செய்தார்கள்.

இரண்டாவது பகுதி - கிரகச்சரியம் - அதாவது  குடும்ப வாழ்க்கை. திருமணம் செய்து கொண்டு , மனைவி,கணவன், குழந்தைகள் என்று குடும்பமாக வாழ்வது. சமுதாய பொறுப்புகள் உண்டு. விருந்தினர்களை உபசரிப்பது,  வரி கொடுப்பது,  பெற்றோரை பேணுவது, பிள்ளைகளை சரியான படி வளர்ப்பது, என்று பல கடமைகள் உண்டு.

மூன்றாவது பகுதி  -  வனப்ரஸ்தம்  - அதாவது ஓய்வு பெறுவது. பொறுப்புகளை கொஞ்சம்  கொஞ்சமாக பிள்ளைகளிடம் , மருமகளிடம் ஒப்படைத்து விட்டு  ஒதுங்கி இருப்பது. அவர்கள் நடத்தட்டும் என்று தள்ளி நின்று  பார்ப்பது. யோசனை கேட்டால் சொல்லுவது. தானாக போய் அதைச் செய்,இதைச் செய்  என்று அதிகாரம் பண்ணுவது கிடையாது.

நான்காவது பகுதி - சந்நியாசம் - அதாவது அனைத்தையும் துறந்து வாழ்வது. பற்றில்லாமல்  இருப்பது.

ஒவ்வொன்றையும் பற்றி  விரிவாக சிந்தித்தால் நாள் பல ஆகும்.

இப்படி தனிமனிதனின் வாழ்க்கையை ஒழுங்கு படுத்தினார்கள்.  இதற்கு ஆசிரமம் என்று பெயர்.

சரி, தனி மனிதன் மட்டுமே ஒரு குடும்பம், சமுதாயம், நாடு ஆகி விட முடியாதே.  அவனுக்கு சில சமுதாய கடமைகள் இருக்கிறதே. அதை எப்படி  செய்வது? அதை எப்படி வரையறுப்பது.

தனி மனித திறமைகளை , சமுதாய முன்னேற்றத்திற்கு எப்படி பயன் படுத்துவது ?

தனி மனித திறமைகளை நான்கு வகையாகப் பிரித்தார்கள்.

சிலருக்கு உடல் உழைப்பில் ஆர்வம் அதிகம் இருக்கும். பொருள்களை கையாள்வது, இயந்திரங்களை இயக்குவது, கட்டிடம் கட்டுவது, விளையாட்டு என்று உடலில் மூலம் செய்யும் வேலையில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

சிலருக்கு,  வியாபாரம் செய்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். எதை வாங்குவது, எங்கு வாங்குவது, யாரிடம் விற்பது, எப்படி விற்பது என்பதில் ஆர்வமும் திறமையும் இருக்கும்.

சிலருக்கு, நீதி, நேர்மை, ஒழுங்கு என்று இவற்றை பராமரிப்பதில் ஆர்வம் இருக்கும். அநியாயத்தை கண்டால் சகிக்க மாட்டார்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு துடிப்பு இருக்கும்.

சிலருக்கு, படிப்பதில், சிந்திப்பதில், பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

இது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு சமுதாயம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும் ?

முதலில் உற்பத்தி செய்ய வேண்டும். உணவு, உடை, இருக்க இடம், அதற்கு வேண்டிய  இரும்பு, சிமெண்ட், கட்டை, கண்ணாடி போன்றவை, போக்குவரத்து, மருந்து என்று பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். உற்பத்தி இல்லாமல் உயிர் வாழ முடியாது. இது முதல் தேவை. (Production )

அடுத்தது, உற்பத்தி செய்த பொருளை வேண்டிய இடத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டும். எங்கே கச்சாப் பொருள் (raw material ) கிடைக்கிறதோ அங்கு தான் உற்பத்தி செய்ய முடியும். கடற் கரையில் தான் உப்பு உற்பத்தி செய்ய முடியும். ஆனால், மலை மேல் இருப்பவனுக்கும் உப்பு தேவையாக இருக்கிறது. எனவே, உற்பத்தி செய்த பொருளை விநியோகம் செய்ய வேண்டும். (distribution and logistics ).

சரி உற்பத்தி செய்தாகி விட்டது, விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்தாகி விட்டது , போதுமா என்றால் முடியாது.  கள்ளர் பயம், மற்ற நாட்டு காரன் படை எடுத்து வந்து நம் பொருள்களை கொள்ளை அடித்துச் சென்று விடலாம், வலியவன் , எளியவனை அடித்து பொருள்களை பிடுங்கிக் கொள்ளலாம். எனவே, இவை சரியாக நடக்கிறதா என்று நிர்வாகம் பண்ண வேண்டும். இது மூன்றாவது தேவை (administration ).

சரி உற்பத்தி, விநியோகம், நிர்வாகம் செய்தாகி விட்டது. போதுமா என்றால் போதாது. இந்த மூன்று துறைகளையும் மேம்படுத்த வேண்டும். புதுப் புது முறைகளை கொண்டு வர வேண்டும். புது ஆயுதங்கள், புதிய நிர்வாக முறை, புதிய உற்பத்தி செய்யும் முறை என்று அனைத்து துறைகளையும் முன்னேற்ற வேண்டும். அதற்கு ஆராய்ச்சி தேவை. இது நான்காவது. (Research and Development ).

உற்பத்தி, விநியோகம், நிர்வாகம், ஆராய்ச்சி.

Production, distribution, administration , Research and Developement.

சரி, இந்த நான்கு சமுதாயத் தேவைகளை எப்படி தனிமனித தேவைகளோடு பொறுத்துவது ?

உடல் உழைப்பில் ஆர்வம் உள்ளவர்களை உற்பத்தி செய்ய விட வேண்டும்.

விநியோகத்தில் ஆர்வம் உள்ளவர்களை விநியோகம் செய்ய விட வேண்டும்.

மேற்பார்வை பார்ப்பது, செயல்களை ஒழுங்கு படுத்துவது, நீதி நேர்மை இவற்றில் ஆர்வம் உள்ளவர்களை நிர்வாகம் செய்ய விட வேண்டும்.

படிப்பு, சிந்தனை, என்று அதில் ஆர்வம் உள்ளவர்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

இதற்கு பெயர் கொடுப்பதில் வந்தது சிக்கல்.

உற்பத்தி செய்பவர்களை சூத்திரன் என்று குறிப்பிட்டார்கள். அவன் தான் சூத்திரதாரி. அனைத்துக்கும் அடிப்படை. அவன் உற்பத்தி செய்யாவிட்டால் அனைத்தும் உறைந்து நின்று போய் விடும். உணவு, உடை, இருப்பிடம், போக்கு வரத்து, மருந்து என்று ஒன்றும் இருக்காது.

விநியோகம் செய்பவர்களை வைசியர்கள் என்று அழைத்தார்கள்.

நிர்வாகம் செய்பவர்களை க்ஷத்ரியர்கள் என்று அழைத்தார்கள்.

படிப்பு, சிந்தனை , ஆராய்ச்சி என்று இருப்பவர்களை பிராமணர்கள் என்று அழைத்தார்கள்.

இது வர்ணம்.

நான்கு வர்ணம்.

நான்கு ஆசிரமம்.

எந்த ஒரு மனிதனும் இந்த 4 x 4 கட்டத்துக்குள் வந்தே ஆக வேண்டும்.

இப்படி தனி மனிதனையும், சமுதாயத்தையும் ஒழுங்கு படுத்தி, இந்த ஒவ்வொரு கட்டத்துக்கும் விதி செய்தார்கள்.

சூத்திரன் - பிரமச்சாரி என்றால் என்ன செய்ய வேண்டும்.

பிராம்மணன் - கிரஹஸ்தன் என்றால் என்ன செய்ய வேண்டும்

என்று ஒவ்வொன்றுக்கும் விதை முறைகள் செய்து வைத்தார்கள்.

இதுவே வர்ணாசிரம தர்மம் ..

இது நாளடைவில் குழம்பிப் போனது. மனிதன் நல்ல விஷயங்களை எப்படி தன் சுயநலத்துக்காக மாற்றி போடுகிறானோ, அப்படியே இந்த வர்ணாசிரம தர்மமும் குலைந்து போனது.

அதற்குள் நாம் போக வேண்டாம்.

புரிந்து கொண்டால் போதும்.

உயரிய நோக்கில் ஆரம்பிக்கப் பட்ட ஒன்று, நாளடைவில் சிதிலமடைந்து சீரழிந்து போனது.

மீண்டும் கீதைக்கு வருவோம்.

அர்ஜுனன் சொல்கிறான்,

"கிருஷ்ணா, எப்போது அதர்மம் சூழ்கிறதோ, அப்போது பெண்கள் கெட்டுப் போகிறார்கள். பெண்கள் கெட்டுப் போகும் போது , வர்ண குழப்பம் உண்டாகிறது."

அதர்மம் தலை தூக்கும் போது, க்ஷத்ரியர்கள் போராடுவார்கள். பல க்ஷத்திரியர்கள் மாண்டு போவார்கள். க்ஷத்திரிய பெண்கள் அதிகமாகவும், ஷத்ரிய ஆண்கள் குறைவாகவும் இருப்பார்கள். எனவே, ஷத்ரிய பெண்கள் மற்ற குலத்தில் திருமணம் செய்யத் தலைப் படுவார்கள். வர்ண குழப்பம் உண்டாகும். 

சமுதாய கட்டு கோப்பு கலையும் (social structure ). 

அது மட்டும் அல்ல, போர் என்று வந்தால், அப்பாவி மக்களும் கொல்லப் படுவார்கள். பெண்கள் சிறை பிடிக்கப் படுவார்கள். மான பங்கப் படுத்தப் படுவார்கள். தகப்பன் இல்லாத பிள்ளைகள் உருவாகும். இது வர்ண குழப்பத்தை உண்டாக்கும் என்கிறான். 

போர் என்பது ஒரு காலத்துக்குள் முடிவது இல்லை. இன்னும் வரப் போகும் பலப் பல சந்ததிகளை  அது பாதிக்கும். 

எனவே , போர் வேண்டாம் என்கிறான் அர்ஜுனன். 

ஆழமான வாதம். மறுக்க முடியாத வாதம். ஆணித்தரமான வாதங்கள்.

கண்ணன் என்னதான் சொல்லப் போகிறான் என்று நாம் ஆவலோடு காத்து இருக்கிறோம். 

அர்ஜுனன் தன் தரப்பு வாதங்களை இன்னும் முடித்தபாடில்லை.

என்னும் என்னதான் சொல்லப் போகிறான் , அர்ஜுனன்?

bhagavatgita.blogspot.com/2018/07/141-2.html

2 comments:

  1. நன்றி...இப்போது உள்ள காலகட்டத்தில் இந்த வருணாசிரம தர்மத்தை சிலர் தவறாக உபயோகிக்கின்றனர்... அரசியல் ஆதாயத்திற்காக... இப்போது ஒருவர் எனக்கு எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க இது போதுமானது.

    ReplyDelete
  2. இதைப் புரிந்து நடந்தால் வாழ்க்கை சுலபமாகும். ஆனந்தம் நிறைந்ததாகும். இது ஒருவனால் மட்டும் போதாது. சமூகமே புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் ஒருவன் புரிந்து மற்றவரும் புரிந்து கொள்ளும் நிலை வர வேண்டும்.

    ReplyDelete