Sunday, July 1, 2018

பகவத் கீதை - 1.36 - பாவிகளை கொல்வதால் பாவமே வந்து சேரும்

பகவத் கீதை - 1.36 - பாவிகளை கொல்வதால் பாவமே வந்து சேரும் 



निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन।
पापमेवाश्रयेदस्मान्हत्वैतानाततायिनः॥३६॥

நிஹத்ய தா⁴ர்தராஷ்ட்ராந்ந : கா ப்ரீதி : ஸ்யாஜ்ஜநார்த³ந|
பாபமேவாஸ்²ரயேத³ஸ்மாந்ஹத்வைதாநாததாயிந : ||1-36||

நிஹத்ய = கொன்ற பின்

தார்தராஷ்ட்ராந் = திருதராஷ்ட்ர கும்பலை

ந : = நமக்கு

கா  = என்ன

ப்ரீதி :  = இன்பம்

ஸ்யாஜ் = கிடைக்கும்?

ஜநார்த³ந|  = ஜனார்தனா

பாபம் = பாவம்

எவ = நிச்சயம்

அஸ்²ரயேத் = நம்மைச் சாரும்

அஸ்மாந் = நம்மை

ஹத்வ = கொன்ற பின்

எதன் = இந்த

வைதாநாததாயிந : = பாவிகளை, அக்கிரமக்காரர்களை

இந்த திருதராஷ்ட்ர கூட்டத்தை சேர்ந்தவர்களை கொல்வதன் மூலம் நமக்கு என்ன இன்பம் கிடைக்கும் ? பாவம்தான் வந்து சேரும் , ஜனார்தனா 

முதலில் உற்றார் உறவினர்களை ஏன் கொல்ல வேண்டும் என்றான். இப்போது, பாவிகளை ஏன் கொல்ல வேண்டும் என்கிறான்.

அர்ஜுனனின் குழப்பம் அதிரிகரித்துக் கொண்டே போகிறது.

இந்த குழப்பத்திற்கு எல்லாம் காரணம் என்ன? எது இதன் மூல காரணம்?

தான் யார் என்று அர்ஜுனன் அறிந்து கொள்ளாததே இந்த குழப்பங்கள் அனைத்துக்கும் மூல காரணம்.

அர்ஜுனன் என்பவன் , ஒரு வில் வீரன், ஒரு இராஜா, பாண்டவ சகதோரர்களில் ஒருவன், இன்னாருக்கு மாமா, இன்னொருவருக்கு அப்பா, மற்றும் ஒருவருக்கு  சீடன் என்று என்று தன்னை நினைத்துக் கொள்கிறான்.


உண்மையில் அர்ஜுனன் யார்?

அர்ஜுனனை விடுங்கள். அவன் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். அவன் இப்போது இல்லை. அவன் யார் என்பதை அறிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்.

நீங்கள் யார் என்று கேள்வி கேட்டுப் பாருங்கள்.

இன்னாரின் பிள்ளை, இன்னாரின் கணவன்/மனைவி, இவருக்கு சகோதரன்/சகோதரி, யாருக்கோ அம்மா/அப்பா, வேறு ஒருவருக்கு தாத்தா/பாட்டி  என்று  உங்களை நீங்கள் அடையாளம் காணலாம்.

வேறு ஒருவரின் துணை இன்றி உங்களை இன்னார் என்று உங்களால் அடையாளம்  காண முடியுமா ?

முடியலாம் !

நான் ஒரு ஆண் /பெண், இவ்வளவு உயரம், இன்ன நிறம், இன்ன எடை, நான் படித்தவை  இவை என்று சொல்லலாம்.

அவை சரியா ? உங்கள் எடையும், உயரமும், நிறமும் நிரந்தரமானதா ? மாறிக் கொண்டே இருக்கும்   அவை நீங்களா ?

இல்லை...பின் நீங்கள் யார் ?

வெளி உலகம் உங்களை நிர்ணயம் செய்கிறது. அதைத் தவிர்த்து நீங்கள் யார் ?

சிந்தித்துப் பாருங்கள்.

பாசம், நேசம், பற்று, குடும்பம், உறவு, பந்தம், எல்லாம் எப்படி வருகிறது என்று தெரியும்.

நீங்கள் இவற்றை எல்லாம் கடந்தவர்கள்.

நீங்கள் யாருக்கோ பேரன். அந்தத் தாத்தா இறந்து போனால், நீங்கள் யாருக்கும் பேரன் இல்லை. அதனால் உங்களுக்கு என்ன நேர்ந்தது. உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழ்ந்தது. ஒன்றும் இல்லை. நீங்கள்,நீங்களாகவே இருக்கிறீர்கள். இந்த அடையாளங்கள் உங்களை எந்த விதத்திலும்  பாதிப்பது இல்லை.

அப்படி என்றால், நீங்கள் யார் ?

இதற்கு விடை தெரியாததால், அர்ஜுனன் கிடந்து குழம்புகிறான்.

பாவம், புண்ணியம், உறவு, பகை, இன்பம், துன்பம் என்று கிடந்து அல்லாடுகிறான்.


அவனை அந்த சிக்கலில் இருந்து கண்ணன் விடுவிக்கப் போகிறான்.

உங்களையும் தான்.

http://bhagavatgita.blogspot.com/2018/07/136.html




No comments:

Post a Comment