Friday, September 28, 2018

பகவத் கீதை - 2.20 - நிரந்தரமான ஒன்று

பகவத் கீதை - 2.20 - நிரந்தரமான ஒன்று 


न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वा भविता वा न भूयः।
अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे॥२०॥

ந ஜாயதே ம்ரியதே வா கதா³சிந்நாயம் பூ⁴த்வா ப⁴விதா வா ந பூ⁴ய:|
அஜோ நித்ய: ஸா²ஸ்²வதோऽயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஸ²ரீரே ||2-20||

ந = இல்லை

ஜாயதே = பிறப்பது

ம்ரியதே = இறப்பது

வா = மாறாக

கதா³சிந் = எப்போதும்

ந = இல்லை

அயம் = அவன்

பூ⁴த்வா = தோன்றிய பின்

ப⁴விதா= நிலைத்து இருத்தல்

வா = மேலும்

ந = இல்லை

பூ⁴ய:| = மறுபடியும்

அஜோ = பிறப்பது இல்லை

நித்ய: = நிரந்தரமான

ஸா²ஸ்²வத = அநாதியான

அயம் = அவன்

புராணோ  = பழமையானது

ந = இல்லை

ஹந்யதே = கொல்லப் படுவது

ஹந்யமாநே = கொல்வதும்

ஸ²ரீரே = உடல்

அவன் பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. கொல்வதும் இல்லை. கொல்லப் படுவதும் இல்லை. அவன் பழமையானவன். என்றும் நிரந்தரமாக இருப்பவன். உடல் அழியும் போது இவன் அழிவது இல்லை. 


இதெல்லாம் பல முறை கேட்டாச்சு , கேட்டாச்சு. ஆத்மா அழியாது, பிறக்காது, கொல்லாது, கொல்லப் படாது என்று எத்தனை முறை கேட்பது. நடை முறை வாழ்க்கையில் நாம் உடல்களோடுதானே உறவு கொள்கிறோம். ஆத்மா எங்கே வந்தது ?  யாராவது இறந்து போனால் துக்கம் வரத்தானே செய்கிறது? நெருங்கியவர்களுக்கு உடம்பு சரி இல்லை என்றால், "உடம்பு தானே சரி இல்லை, ஆத்மாவுக்கு ஒன்றும் இல்லை" என்று இருக்க முடியுமா ? இதெல்லாம் கேட்க நல்லா இருக்கும், தத்துவ விசாரம் எல்லாம் சரி...நடை முறையில் இதனால் என்ன பயன்?

இது சரி தானா ?

நடை முறையில், அன்றாட வாழ்வில் நாம் ஆத்மாவை உணர்வது இல்லையா?

தெருவில் போகும் போது, செருப்பின் வார் அறுந்து போகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன சொல்லுவோம் "எனக்கு வார் அறுந்து போய் விட்டது " என்று சொல்வோமா "என்னுடய செருப்பின் வார் அறுந்து போய் விட்டது " என்று சொல்வோமா ?

வீட்டில் உள்ள கிரைண்டர் இல் ஒரு நட்டு (nut ) கொஞ்சம் லூசாக இருந்தால் என்ன சொல்லுவோம்?  எனக்கு நட்டு கழண்டு விட்டது என்று சொல்லுவோமா அல்லது இந்த கிரைண்டருக்கு ஒரு நட்டு கழண்டு விட்டது என்று சொல்லுவோமா ?

நாம் வேறு, நாம் உபயோகப் படுத்தும் பொருள்கள் வேறு என்று தெரிகிறது அல்லவா ?

எனக்கு பங்ச்சர் ஆகி விட்டது என்று சொல்லுவது இல்லை, என்னுடைய கார் வரும் வழியில் பங்ச்சர் ஆகி விட்டது என்று சொல்லுவோம்.

சரி. அதனால் என்ன ?


நமக்கு வரும் துன்பங்களுக்கு பெரிய காரணம் நாம் எதை அனுபவிக்கிறோமோ, அதை நாமாகவே நாம் பாவித்துக்  கொள்வதுதான்.

அது என்ன அனுபவிப்பது, பாவிப்பது ?

சொல்கிறேன்.

நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ?

இந்தியன், இந்து/கிறித்துவன் /முஸ்லீம், தென் இந்தியன்/ வட இந்தியன்,  செட்டியார்/முதலியார்/பெந்த கோஸ்தே என்று ஏதாவது சொல்லுவோம் அல்லவா ?


நீங்கள் இந்தியான ?

நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள். அவ்வளவு தான். இந்தியாவின் நிலம், நீர், காற்று, அது தரும் வசதிகளை அனுபவிக்கிறீர்கள். இந்த அனுபவிக்கப் படும் பொருள் சிறிது சிறிதாக உங்களோடு கலந்து விடுகிறது. "நான் இந்தியன்" என்று ஆகி விடுகிறது. வெளியில் இருக்கும் இந்தியாவோடு நீங்கள் ஒன்றாக ஆகி விடுகிறீர்கள்.

நீங்கள் இந்துவா ?

இந்து மத கோட்பாடுகளை கடை பிடிக்கிறீர்கள். சாலை விதிகளை கடை பிடிப்பது போல. வருமான வரி விதிகளை கடை பிடிப்பது போல. சாலை விதிகளை கடை பிடிப்பதால் யாராவது "நான் ஒரு சாலை" என்று சொல்லக் கேட்டு இருக்கிறீர்களா ? அப்படியே சொன்னாலும் நீங்கள் என்ன அப்படி சொல்பவரை பற்றி என்ன நினைப்பீர்கள் ?

ஆனால், ஒரு மத கோட்பாடுகளை கடை பிடிப்பவர்கள் அந்த மதமாகாவே மாறி விடுகிறார். நான் இந்து, முஸ்லீம், கிறித்துவன்  என்று ஆகி விடுகிறார்.

சாலை விதிகள் அடங்கிய புத்தகத்தை ஒருவர் எரித்தால் உங்களுக்கு கோபம் வராது. ஆனால், உங்கள் முன்னால் ஒருவர் கீதையையோ, குரானையோ, பைபிளையோ எரித்தால் உங்களுக்கு இரத்தம் கொதிக்கிறது.

ஏன் ? எதை நீங்கள் அனுபவிக்கிறீர்களோ, அதையே நீங்களாக நீங்கள் கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

சரி. அப்படி நினைத்துக் கொண்டால் என்ன கெட்டு போய்  விட்டது ? அதனால் என்ன துன்பம் வந்து விடும் ?

நான் ஒரு இந்துவாகவோ, இந்தியனாகவோ இருப்பதால் என்ன சிக்கல் ?

நீங்கள் இந்தியன் என்றால், பாக்கிஸ்தான்காரன் மேல் கோபம் வருகிறது. அவனோடு சண்டை போட இராணுவத்தை வளர்கிறீர்கள்.

நீங்கள் இந்து என்றால், முஸ்லீம் மேல் வெறுப்பு வருகிறது. உங்களுக்கு வரமால் இருக்கலாம். ஒரு முஸ்லிமுக்கு உங்கள் மேல் வெறுப்பு வரலாம் அல்லவா , நீங்கள் இந்துவாக இருப்பதால் ?

இப்படி எதையெல்லாம் நீங்கள் உங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கிறீர்களோ, அது அல்லாத மற்றவற்றில் இருந்து நீங்கள் அந்நியப் பட்டு போகிறீர்கள். அவற்றோடு முரண்படுகிறீர்கள். அவற்றோடு சண்டை போட தயாராக இருக்கிறீர்கள்.

இது ஒரு நிலை.

அடுத்தது, நீங்கள் செய்யும் வேலை. நான் ஒரு டாக்டர், என்ஜினீயர் என்று வேலையோடு நீங்கள் உங்களை ஐக்கிய படுத்திக் கொள்கிறீர்கள்.

இதையும் அடுத்த நிலை, பொருள்களோடு உங்களை தொடர்பு கொடுத்திக் கொண்டு துன்பப் படுவது.

உதாரணமாக, பேனா என்பது எழுதுவதற்கு ஒரு கருவி. அவ்வளவு தான். அது தொலைந்து போனால், இன்னொன்று வாங்கிக் கொள்ளலாம். அதை விட்டு விட்டு  "நான் ஆசை ஆசையாக வைத்திருந்த பேனா தொலைந்து போய் விட்டது " என்று வருந்துபவர்களை காணலாம்.

பேனா என்பது ஒரு உதாரணம் தான்.

நாய் குட்டி, செருப்பு, செல் போன், வீடு, நிலம், என்று உங்கள் பிடிமானம் எதன் மீதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அடுத்த படி,

உறவுகள். பிள்ளை, கணவன், மனைவி, என்று. அவர்களோடு உங்களை நீங்கள் ஐக்கியப் படுத்திக் கொள்வதால் எவ்வளவு துயரம் ?

சரி, அதுக்காக எல்லாரையும் விட்டு விட்டு சாமியாராகப் போக முடியுமா ?

வேண்டாம்,  உறவுகளை இரசியுங்கள். அனுபவியுங்கள். ஆனால், அவைதான் நான், அவை இல்லாமல் நான் இல்லை, அவர்கள் இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை என்று அவற்றை உங்களுக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு வருந்தாதீர்கள்.

சற்று சிரமம் தான்.


முடியாவிட்டால் ஒன்று பண்ணுங்கள். உறவுகள் பிரியும் போது வரும் துன்பத்திற்கு காரணம் உறவினர் அல்ல, நீங்கள் அல்ல, நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட மாய சங்கிலி என்று அறிந்து கொள்ளுங்கள் போதும். துன்பம் குறையும்.

அடுத்தது, இவை எல்லாவற்றையும் விட நுண்ணியமானது, இந்த உடல். உங்கள் உடலை நீங்களாகவே நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் இந்த உடலா ? இந்த உடல் தான் நீங்கள் என்றால், ஐந்து வயதில் இருந்த உடலும், இப்போது உள்ள உடலும் ஒன்றா ?

அதை விடுங்கள்.


நீங்கள் உங்கள் உடல் சம்பந்தமாக பேசும் பேச்சுகளை பாருங்கள். நீங்களே ஒத்துக் கொள்வீர்கள், நீங்கள் என்பது இந்த உடல் இல்லை என்று.

உங்களுக்கு தலை வலி என்று வைத்துக் கொள்வோம். மருத்துவரிடம் போகிறீர்கள்.

என்ன சொல்வீர்கள் ?

டாக்டர் எனக்கு தலை வலிக்கிறது என்றுதானே சொல்வீர்கள் ?

எனக்கு தலை வலிக்கிறது என்றால் அதில் உள்ள எனக்கு என்பது யார் ?

என் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இரண்டு நாள் விடுப்பு வேண்டும் என்று   கேட்கிறோம். என் உடல் என்றால், நான் வேறு , என் உடல் வேறு என்று தெரிகிறது அல்லவா ? என் money purse என்றால், நான் வேறு, என் money purse  வேறு என்று தெரிகிறது அல்லவா ?

என் தலை வலிக்கிறது, என் உடல் , என் பேனா, என் கணவன், என் மனைவி, என் வீடு என்று சொல்லும் போது நான் வேறு என் பேனா வேறு, என் கணவன் வேறு, என் மனைவி வேறு என்று தெரிகிறது அல்லவா ?

அதே போல், நீங்கள் வேறு , உங்கள் உடல் என்பது வேறு.

ஆனால், நாம் , நம் உடல் தான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது மட்டும் அல்ல, மற்றவர்களும் அவர்கள் உடல் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அனுபவிப்பவது நீங்கள். அனுபவிக்கப் படுவது உடல். இந்த உடல் மூலம் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். ஆனால், இந்த உடல் தான் நான் என்று நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள்.

இந்த அனுபவிப்பவன், அனுபவிக்கப் படுவது இரண்டுக்கும் உள்ள தொடர்பு தான் துன்பங்களுக்கு மூல காரணம்.

புரிகிறது தானே ?

இருந்தும் அடிக்கடி மறந்து விடுகிறோம். அது தான் சிக்கல்.

இந்த உடல் பிறக்கும், வளரும். மூப்பு அடையும். நோய்வாய் படும், இறக்கும். இது உடலின் இயல்பு.

நான் என்பது இந்த உடல் இல்லை என்றால், இந்த உடலை இயக்கம் அதற்கு இந்த பிறப்பு, இறப்பு, மூப்பு என்பதெல்லாம் இல்லை.


இதை வேறு ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம்.

மின்சாரம் இருக்கிறது. அது டிவி யில் போனால் படம் தெரிகிறது, பல்பில் போனால் வெளிச்சம் வருகிறது, microwave இல் போனால் உணவு சூடாகிறது....இப்படி எந்த பொருளில் செல்கிறதோ அதை செயல் படுத்துகிறது.

பொருள்கள் அழியும். பல்பு பியூஸ் ஆகி விடும். மாற்றிவிடலாம்.

மின்சாரம் அழியாது. அதற்கு தோற்றமும் இல்லை, அழிவும் இல்லை. மூப்பும் இல்லை, பிணியும் இல்லை. அது ஒரு சக்தி. அவ்வளவுதான்.

தண்ணீர் மேலிருந்து கீழே விழுகிறது. விழும் போது turbine ஐ சுற்றுகிறது. அது டையனமோவை  சுற்றுகிறது. அதில் இருந்து மின்சாரம் வருகிறது.

நீரில் இருந்து மின்சாரத்தை எடுத்து விட்டால் நீரில் ஒன்றும் குறைவது இல்லை. அது அப்படியேதான் இருக்கிறது.

வீட்டில் பல்பில் ஒளி தந்து விட்டு அந்த மின்சாரம் எங்கே போகிறது ? எங்கும் போவது இல்லை.  ஒளியாக மாறியது. அவ்வளவுதான்.

அது போல ஒரு சக்தி எனக்குள் இருந்து என்னை எழுத வைக்கிறது. உங்களுக்குள் இருந்து இதை வாசிக்க வைக்கிறது.

ஒவ்வொரு கருவியில் மின்சாரம் ஒவ்வொரு வேலையை செய்விப்பது போல.

நீங்கள் அந்த மின்சாரம் போல. எப்படி வேண்டுமானாலும் நீங்கள் பரிணமிக்கலாம்.

சிந்தியுங்கள்.

http://bhagavatgita.blogspot.com/2018/09/220.html



No comments:

Post a Comment