Saturday, September 15, 2018

பகவத் கீதை - 2.16 - எது உண்மை?

பகவத் கீதை - 2.16 - எது உண்மை?


नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः।
उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदर्शिभिः॥१६॥

நாஸதோ வித்³யதே பா⁴வோ நாபா⁴வோ வித்³யதே ஸத:|
உப⁴யோரபி த்³ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வத³ர்ஸி²பி⁴: ||2-16||

ந = இல்லை

அஸதோ = சத் என்றால் உள்ளது. அ+சத்து என்றால் இல்லாதது

வித்³யதே = உள்ளது

பா⁴வோ = இருப்பது

ந = இல்லை

அபாவோ = இல்லாதது

வித்³யதே = அது

ஸத:|  = உண்மையில்

உப⁴யோ = இரண்டிலும்

அபி = அது அன்றி

த்³ருஷ்டோ = பார்த்தல், அறிதல்

அந்த  = அந்தம், முடிவு, இறுதி

து = ஆனால்

அநயோ = அந்த இரண்டில்

தத்த்வத³ர்ஸி²பி⁴:= தத்துவம் + அர்சிபி = தத்துவத்தை அறிந்தவர்கள். உண்மையை அறிந்தவர்கள்.


இதற்கு முன் இல்லாதது உண்மையாகாது. உண்மையானது இனிமேல் இல்லாமல் போகாது. ஞானிகள் இந்த இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை அறிவார்கள். 


என்னவோ கண்ணன் பெரிய விஷயத்தைச் சொல்லப் போகிறான் என்று பார்த்தால், பழையபடி குழப்புகிறானே. இல்லாதது உண்மையானது. உண்மையானது இல்லாமல் போகாது என்று. அப்படினா என்ன அர்த்தம்? தல சுத்ற  மாதிரி இருக்கா ?

கீதையில் எவ்வளவோ முக்கியமான, ஆழமான ஸ்லோகங்கள் இருக்கின்றன. நீங்கள் இந்த ஒரு ஸ்லோகத்தை முழுமையாக அறிந்து கொண்டால், முழு கீதையையும் அறிந்து கொண்டவர்கள் ஆவீர்கள்.

அவ்வளவு அர்த்தம் செறிந்த ஸ்லோகம்.

இந்த சுலோகத்தின் உள்ளே ஒரு மிகப் பெரிய உண்மை புதைந்து கிடக்கிறது.

எது இல்லாமல் இருந்ததோ, அது உண்மையாகாது. எது உண்மையோ, அது இல்லாமல் போகாது.

இது சுலோகம்.

மூன்று காலங்களை எடுத்துக் கொள்வோம்.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்.

நாம் நிகழ் காலத்தில் எவ்வளவோ பார்க்கிறோம். கேட்கிறோம். தொட்டு உணர்கிறோம். நம் புலன்கள் இந்த உலகை நிகழ் காலத்தில் அனுபவிக்கிறது. நம்மைப் பொறுத்தவரை இதுதான் நிஜம். யதார்த்தம். உண்மை எல்லாம்.

என் மனைவி, கணவன், பிள்ளைகள், நான் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள், உறவுகள் எல்லாம் நிகழ் காலத்தில் நிகழ்கின்றன. நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, அவை தான் உண்மை.

சரி தானே ? அதில் சந்தேகம் இல்லையே. கடந்த காலம் இப்போது இல்லை. எதிர் காலம் இனி மேல் வரப் போவது.  இறந்த காலமும், எதிர் காலமும் கற்பனையில் உள்ளவை. நிகழ் காலம் மட்டும்தான் நிஜம்.

சரி தானே ?

இல்லை என்கிறது கீதை.

எது இல்லாமல் இருந்ததோ, எது இல்லாமல் இருக்கப் போகிறதோ, அது ஒரு போதும் உண்மையாக இருக்காது.

எது இறந்த காலத்தில் இல்லாமல் இருந்து, எதிர் காலத்திலும் இல்லாமல் போகப் போகிறதோ, அது நிகழ் காலத்திலும் இருக்க வாய்ப்பில்லை.

இறந்த காலத்திலும், எதிர் காலத்திலும் இல்லை என்றால், நிகழ் காலத்தில் மட்டும் எப்படி இருக்கும் ?

இன்னும் சற்று ஆழமாக யோசிப்போம்.

தெருவில், இருட்டில் ஒரு கயிறு கிடக்கிறது. அதை பாம்பு என்று நினைக்கிறோம். சற்று அருகில் சென்று உற்று பார்த்த பின், அது பாம்பு அல்ல ஒரு கயிறு என்று அறிகிறோம்.

சற்று முன் வரை (இறந்த காலத்தில்) பாம்பு இருந்தது. அது கயிறு என்று அறிந்த பின், எதிர் காலத்தில் அந்த பாம்பு இல்லை, கயிறு மட்டும் தான் இருக்கிறது.  எனவே, பாம்பு என்பது உண்மை இல்லை என்று தெரிகிறது அல்லவா ?

அது மட்டும் அல்ல, கயிறு என்பது எதிர் காலத்தில் இருக்கிறது. அது இறந்த காலத்தில் இல்லை. இறந்த காலத்தில் நம்முடைய உண்மை என்பது அது ஒரு பாம்பு என்பதே. எனவே, கயிறு என்பதும் உண்மை இல்லை. இப்போது கயிறு என்று நினைக்கிறோம். இன்னும் சற்று அருகில் சென்று, வெளிச்சம் அடித்துப் பார்த்தால் அது ஒரு வேளை துணியாக இருக்கலாம், அல்லது உதிர்ந்த மாலையாக இருக்கலாம். தெரியாது. எது கடந்த காலத்தில் இல்லையோ, அது நிஜமாக இருக்க முடியாது.

எது இல்லாமல் இருந்ததோ, அது உண்மை இல்லை.

எது இல்லாமல் இருக்கப் போகிறதோ, அதுவும் உண்மை இல்லை.

எது உண்மை என்றால், அது இறந்த காலத்திலும் இருக்க வேண்டும், எதிர் காலத்திலும் இருக்க வேண்டும்.  அதுவே உண்மை. அதுவே நிரந்தரமானது.

கனவு காண்கிறோம். புலி துரத்துவது போல பயங்கர கனவு. புலி நம் மேல் பாய்கிறது. அந்த இறுதி நொடியில் நாம் விழித்துக் கொள்கிறோம். வியர்த்து கொட்டுகிறது. நெஞ்சு பட பட என்று அடித்துக் கொள்கிறது.

அந்த புலி நிஜமில்லை. ஏன் ?

நாம் படுக்கப் போகும் போது அந்த புலி இல்லை. நாம் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டவுடன் , அந்த புலி இல்லை.

அந்தப் புலி நிகழ் காலத்தில் இருந்தது. ஆனால், அது இறந்த காலத்திலும் இல்லை, எதிர் காலத்திலும் இல்லை. எனவே அது நிஜம் இல்லை.

நிகழ் காலத்தில் இருப்பது எல்லாம் நிஜம் அல்ல.

இந்த கனவு, கயிறு, பாம்பு எல்லாம் பழைய கதை. அதெல்லாம் சரி, அதுக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் ?

நாம் குழந்தையாக இருந்தோம். இப்போது குழந்தையாக இல்லை. எதிர் காலத்தில் குழந்தையாக இருக்கப் போவது இல்லை. இப்போது உங்களைப் பார்த்து நீங்கள் குழந்தையா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்லுவீர்கள். "ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தீர்களே , இப்போது எப்படி இல்லாமல் போவீர்கள் " என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள் ?

"ஆமாம் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தேன். அது ஒரு கால கட்டம். அதற்காக எப்போதுமே குழந்தையாகவே இருக்க முடியுமா. அது அந்தக் காலம். இப்போது நான் ஒரு நடு வயது ஆண் / பெண் . அது தான் உண்மை " என்று சொல்லுவீர்கள் அல்லவா ?

இப்போது நடு வயதில் இருக்கிறோம்.  இது உண்மையா ? இதுவும் உண்மை இல்லை.

இதுவும்  மாறும். இல்லையா.

அப்படி எது மாறிக் கொண்டே இருக்கிறதோ, அது உண்மையானது அல்ல.

குழந்தை, இளைஞன், வயோதிகன் என்ற மூன்று கட்டத்திலும் மாறாமல் இருப்பது எது ?

உடல் மாறுகிறது. எனவே அது உண்மை இல்லை.

அறிவு மாறுகிறது. அதுவும் உண்மை இல்லை.

மனம் மாறுகிறது. எனவே அதுவும் உண்மை இல்லை.

பின், அனைத்து நிலைகளிலும் மாறாமல் இருப்பது எது ? அதுதான் உண்மை.

"நான்" குழந்தையாக இருந்தேன். "நான்" இளைஞனாக இருக்கிறேன். "நான்" வயோதிகனாக மாறுவேன் என்று சொல்லும் போது, அந்த "நான் " யார் ?

இத்தனை மாற்றத்திலும் மாறாமல் இருக்கும் அந்த நான் யார் ?

அலை எழுகிறது, வீழ்கிறது. அது உண்மை இல்லை. அதற்கு அடியில் இருக்கும் கடல் உண்மை.

குழந்தை, இளைஞன், வயோதிகன் என்ற இந்த எழும், விழும் அலையின் அடியில் இருக்கும் அந்த  கடல் எது ?

மாறிக் கொண்டே இருக்கும் உடல், அறிவு, மனம் என்ற மாற்றத்தின் அடியில் அதை தாங்கிப் பிடிக்கும் அந்த ஒன்று எது ?

பாம்போ, கயிறோ, துணியோ, மாலையோ ...இந்த அனைத்துக்கும் அடியில் ஏதோ ஒன்று இருக்கிறதே , அது எது. அதுவே உண்மை.

பொய்யாயின வெல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானமாய்  நின்று மிளிர்கின்ற மெய் சுடரே

என்பார் மணிவாசகர்.

பொய் எல்லாம் போய் விட்டால், எது நிற்கிறதோ, அதுவே மெய்.

அது தான் மெய் ஞானம் என்று சுடர். தீபம். ஜோதி.

ஒளி வீசும் அந்த அறிவு. மெய் உணர்வு.

கணவன்/மனைவி என்பவர்கள் திருமணத்துக்கு முன் இல்லை, திருமணத்துக்குப் பின் இருக்கிறார்கள். முன் இல்லாத ஒன்று உண்மை அல்ல.

பிள்ளைகள் , பிறக்கும் முன் இல்லாமல் இருந்தார்கள். பின் வந்தார்கள். அதுவும் உண்மை இல்லை.

அனைத்து அனுபவங்களும் அப்படியே. தோன்றி மறைவன . உண்மை இல்லை.

எது உண்மை ?

அனுபவங்களை அறியும் , உணரும் அந்தத் தன்னுணர்வு (Consiousness, awareness ) அது தான் உண்மை.

உறவுகளை, உணர்வுகளை, அனுபவங்களை அறியும் அந்த மெய் ஞானம் , அது மட்டும் தான் உண்மை.

இதை ஆழமாக பதிவு செய்து   கொள்ளுங்கள். இதைப் பற்றி மேலும் சிந்திக்க இருக்கிறோம்.

போக்கும் வரவும் புணர்வுமில்லா புண்ணியனே .....(திருவாசகம்)

http://bhagavatgita.blogspot.com/2018/09/216.html













No comments:

Post a Comment