Tuesday, September 18, 2018

பகவத் கீதை - 2.17 - அழிக்க முடியாதது

பகவத் கீதை - 2.17 - அழிக்க முடியாதது 


अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम्।
विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति॥१७॥

அவிநாஸி² து தத்³வித்³தி⁴ யேந ஸர்வமித³ம் ததம்|
விநாஸ²மவ்யயஸ்யாஸ்ய ந கஸ்²சித்கர்துமர்ஹதி ||2-17||

அவிநாஸி = நாசி, நாசம், அவி + நாசம் = அழிக்க முடியாதது

து = ஆனால்

தத்= அது

வித்³தி= நீ உணர்வாய்

யேந = அதன் மூலம்

ஸர்வம் = அனைத்தும்

இதம் = இது

ததம் = பரந்து பட்ட, வியாபித்துள்ள


விநாஸம் = அழியும்

அவ்யயஸ்யா = மாறாத

அஸ்ய = அதன்

ந = இல்லை

கஸ்²சித் = அவன்

கர்தும் = செய்பவன்

அர்ஹதி  = இயலும் , முடியும்


எங்கும் நிறைந்த அந்தப் பொருள் அழிவற்றது என்று அறிந்து கொள். அது கெடாதது. அதை யாராலும் அழிக்க முடியாது. 

உலகிலேயே பெரிய பயம் மரண பயம். நாம் இறந்து போவோமோ என்ற பயம். நம்மைச் சார்ந்தவர்கள் இறந்து போவார்களோ என்ற பயம்.  மரண பயத்தை வெல்வது என்பது சாதாரண காரியம் இல்லை.

மரணம் என்பது என்ன ?

மரணம் என்பதன் உண்மையான பொருள் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். உங்களை பொறுத்தவரை மரணம் என்றால் என்ன ?

தொடர்பு விட்டுப் போதல், தொடர்பு மறைந்து போதல், இருப்பது இல்லாது போதல்...இவை தானே மரணம் ?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

வீட்டில் பெண்கள் நகை வைத்து இருப்பார்கள். வளையல், சங்கிலி, மோதிரம், ஒட்டியாணம் என்று பலவிதமான நகைகள் இருக்கும். வாங்கி பல காலம் ஆன பின், அவை பழசாகப் போய் விடும். மார்க்கெட்டில் புதிது புதிதாக நகைகள் வந்து இருக்கும். புதுப் புது வடிவத்தில் வந்து இருக்கும். பழைய நகைகளை  அழித்து விட்டு புது நகைகள் செய்வார்கள். புதுப் பொலிவோடு, புது மெருகோடு இருக்கும்.

பழைய நகை மறைந்து போய் விட்டது. புது நகை வந்து விட்டது.

நகையை அழித்துச் செய்தற்காக எந்த பெண்ணும் அழுவது இல்லை.

ஐயோ அந்த பழைய நகை போய் விட்டதே என்று யாரும் வருந்துவது இல்லை.

நகை அழியும். தங்கம் அழிவது இல்லை.

பானை, சட்டி, குடம் அழியும். அது செய்யப்பட்ட களி மண் அழிவது இல்லை.

அலை அழியும். கடல் அழிவது இல்லை.

தோற்றங்கள் மாறும். அதன் அடியில் உள்ள அந்த ஒன்று அழிவது இல்லை.

அது சாஸ்வதமானது. அதை யாரும் அழிக்க முடியாது.

மோதிரத்தை அழித்து வளையல் செய்யலாம்.

ஆனால் மோதிரம் செய்யப்பட்ட தங்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

வடிவங்கள் பலவாக இருக்கும் போதே நாம் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். இந்த பல வடிவங்கள் ஏதோ ஒன்றில் இருந்து செய்யப்பட்டது என்று. அந்த ஏதோ ஒன்று அழிவற்றது.

பீஷ்மராக, த்ரோணாராக, துரியோதனனாக விளங்கும் இந்த வடிவங்களுக்கு அடி நாதமாக இருக்கும் அது அழிவற்றது. அதை எந்த அர்ஜுனனாலும் அழிக்க முடியாது.

அழிகின்ற வடிவங்கள் உண்மை இல்லை.

இன்று இருக்கும் என் வடிவம் நேற்று இல்லை. இது நாளை இருக்காது. நேற்று இல்லாத ஒன்று, இன்று எங்கிருந்து வந்தது. இன்று இருக்கும் ஒன்று நாளை எப்படி இல்லாமல் போகும் ?

நிஜம் என்றால் அது நிலைத்து நிற்கும். நிஜம் இல்லாதது தோன்றுவது போல தோன்றி மறைவது போல மறையும். அது உண்மை இல்லை.

வடிவங்களைத் தாண்டி அதன் உண்மையை அறிய வேண்டும். அதுவே மிக உயரிய ஞானம்.

புற வடிவங்களை கடந்து செல்ல வேண்டும்.

அலை தாண்டி கடல் காண்பவன் அறிஞன்.

தோற்றங்களின் மறைவு மரணம் இல்லை.

தோற்றங்களுக்கு பின்னால் இருக்கும் அதற்கு மரணம் என்பதே இல்லை.

இதை அறிந்தவனுக்கு மரண பயம் இருக்காது.

கீதை இதைப் பற்றி இன்னும் விரிவாக சொல்ல இருக்கிறது. மேலும் சிந்திப்போம்.

http://bhagavatgita.blogspot.com/2018/09/217.html

No comments:

Post a Comment