Wednesday, September 26, 2018

பகவத் கீதை - 2.19 - அறியாத இருவர்

பகவத் கீதை - 2.19 - அறியாத இருவர் 



य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम्।
उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते॥१९॥

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்²சைநம் மந்யதே ஹதம்|
உபௌ⁴ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே ||2-19||

ய = அவன்

ஏநம் = இந்த

வேத்தி = அறிபவன் (அறிவதாக நினைப்பவன்)

ஹந்தாரம் = கொலை செய்வதாக

ய = அவன்

ஸ்அ = மேலும்

ஏநம் = இந்த

மந்யதே = நினைக்கிறான்

ஹதம்| = கொன்றதாக

உபௌ = இருவரும்

தௌ = இரண்டு

ந = இல்லை

விஜாநீதோ = அறிவது

ந = இல்லை

அயம் = அவன்

ஹந்தி= கொல்லப் படுவது

ந = இல்லை

ஹந்யதே = கொல்வதும்

எவன் ஒருவன் தான் கொல்வதாகவும் அல்லது கொல்லப் படுவதாகவும் நினைக்கிறானோ, அவர்கள் இருவரும் ஒன்றும் அறியாதவர்கள். அவன் கொல்வதும் இல்லம், கொலை செய்யப் படுவதும் இல்லை. 

குழந்தைகள் சோப்பு குமிழ் (bubble ) விட்டு விளையாடும். அந்தக் குமிழ் வண்ண மயமாக மிதக்கும். அவர்கள் ஓடிச் சென்று அதை தொடுவார்கள். அந்த குமிழ் சட்டென்று வெடித்து மறையும்.

முதலில் சோப்புத் தண்ணீராக இருந்தது, பின் சோப்பு குமிழாக மாறியது, தொட்டவுடன் மீண்டும் சிறு நீர் திவலைகளாக சிதறி மறைகிறது.

நீர் மீண்டும் நீராக மாறியது. நடுவில் ஒரு வண்ண மய விளையாட்டு. சோப்புக் குமிழை யாராவது கொன்று விட்டேன் என்று சொல்லுவார்களா?

ஒரு நிமிடம் நீங்கள் அந்த சோப்புக் குமிழாக உங்களை நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களை அந்த சோப்புக் குமிழ் என்று நினைக்கும் வரை, அந்த குமிழ் வெடித்துச் சிதறும் போது , நீங்கள் கொலை செய்யப்பட்டதாகவே நினைப்பீர்கள். மாறாக, நீங்கள் உங்களை அந்த தண்ணீர் என்று நினைத்தால் , கொலை குமிழ் வெடிக்கும் போது கொலை நடந்ததாக நினைக்க மாட்டீர்கள். நான் தண்ணீராக இருந்தேன், இப்போது மீண்டும் தண்ணீராக இருக்கிறேன். நடுவில் கொஞ்சம் வடிவம் மாறினேன் என்று நினைப்பீர்கள் அல்லவா.

உண்மையில் நீங்கள் யார் ?

தண்ணீரா அல்லது சோப்புக் குமிழா ?

சோப்புக் குமிழ் என்று நினைத்தால் உங்களுக்கு பிறப்பும் இறப்பும் உண்டு.

தண்ணீர் என்று நினைத்தால் உங்களுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.

நீங்கள் யார் என்று அறிவது தான் இங்கே சிக்கல்.

சோப்புக் குமிழுக்குத் தெரியாது தான் தண்ணீர் என்று.

யார்? நானா ? தண்ணீரா ? இல்லவே இல்லை. பார் நான் எவ்வளவு வண்ண மயமாக இருக்கிறேன். எப்படி காற்றில் மிதக்கிறேன். என்னைப் போல் எத்தனை சோப்பு குமிழ்கள் காற்றில் மிதக்கின்றன. நாங்கள் எல்லாம் ஒரு இரகம் . தண்ணீராம் தண்ணீர். அப்படி என்றால் என்ன ? அது எங்கே இருக்கிறது. அது இப்படி உருண்டையாக இருக்குமா, வண்ண மயமாக இருக்குமா ? காற்றில் மிதக்குமா ?

என்றெல்லாம் கேட்கும்.

கேட்கிறீர்கள்.

நீங்கள்  இந்த உடல் இல்லை என்று ஒரு நிமிடம் யோசித்துத் தான் பாருங்களேன்.

வாழ்க்கை தத்துவம் அனைத்தும் மாறும்.

உங்களை, உங்களுக்கு அறிமுகப் படுத்துவதுதான் கீதையின் வேலை.

எப்படி என்று மேலும் சிந்திக்க இருக்கிறோம்.

http://bhagavatgita.blogspot.com/2018/09/219.html

No comments:

Post a Comment