Tuesday, October 2, 2018

பகவத் கீதை - 2.21 - கொல்வதும் , கொல்விப்பதும்

பகவத் கீதை  -  2.21 -  கொல்வதும் , கொல்விப்பதும் 



वेदाविनाशिनं नित्यं य एनमजमव्ययम्।
कथं स पुरुषः पार्थ कं घातयति हन्ति कम्॥२१॥

வேதா³விநாஸி²நம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்|
கத²ம் ஸ புருஷ: பார்த² கம் கா⁴தயதி ஹந்தி கம் ||2-21||

வேத = அறிந்தவன் (வித்தை, அதில் இருந்து வேதம், அதில் இருந்து வேதா)

அவிநாஸிநம் = நாஸி என்றால் நசிப்பது, அழிவது. அவி + நாஸி என்றால் அழியாதது

நித்யம் = நிரந்தரமானது

ய = அவன்

ஏநம் = இது

அஜம் = பிறக்காதது

அவ்யயம் = மாறாதது

கதம் = எவ்வாறு

ஸ = அவன்

புருஷ: = ஆள், அவன், செய்பவன்

பார்த = பார்த்தனே

கம் = எவன்

காதயதி = கொல்பவன்

ஹந்தி = கொலை செய்வது

 கம் = யார்

பிறக்காததும், என்றும் நிரந்தரமாக உள்ளதும், அழிவற்றதும் ஆன அதை கொல்பவன் யார், கொலை செய்பவன் யார் ?


கண்ணன் என்ன சொல்ல வருகிறான்? ஆத்மா அழியாதது. எனவே யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கொலை செய்து கொள்ளலாமா ? அர்ஜுனனுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதியா ? யாராவது ஒருவன் கொலை செய்து விட்டால், அவன் கீதையை மேற்கோள் காட்டலாம். "பார் கண்ணனே சொல்லி இருக்கிறான்...ஆத்மா அழியாயாதது. அதை யாராலும் கொல்ல முடியாது....உடல் எப்படியும் அழியும். எனவே அதை கொல்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நான் கொல்லவும் இல்லை. அவன் கொல்லப் படவும் இல்லை" என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா ?

கீதை கொலையை நியாயப் படுத்துகிறதா ?

இல்லை. இந்த ஸ்லோகத்தை அப்படி பார்க்கக் கூடாது.

நம்மிடம் உள்ள மிகப் பெரிய பயம் மரண பயம்.

மரண பயத்தின் அடி நாதம் எது. அந்த பயத்தின் மூல காரணம் என்ன?

மாற்றம். ஒவ்வொரு மரணத்திலும் ஏதோ ஒரு பெரிய மாற்றம் வருகிறது. அது நமது மரணமாக இருந்தாலும் சரி, அல்லது நெருங்கியவர் மரணமாக இருந்தாலும் சரி.

இறந்தவரின் புகைப்படத்தை பார்த்து அவரின் நினைவை தொடர்கிறோம். அவர் இறந்த தினத்தை நினைவில் வைத்து கொண்டாடுகிறோம். அவர் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறோம். மீண்டும் மீண்டும் அவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு கற்பனையில் மகிழ்கிறோம்.

மற்றவர்கள் நம்மை விட்டு விட்டுப் போகக் கூடாது.

நாமும் மற்றவர்களை விட்டு விட்டுப் போகக் கூடாது.

புகைப் படம் எடுத்துக் கொள்கிறோம். ஏன்?

நமக்குப் பின்னும் நம் உருவம், நம் நினைவு மற்றவர்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்ற ஆசை. மற்றவர்கள் நம்மை மறந்து விடக் கூடாது என்ற ஆதங்கம். நீங்கள் நம்ப மாட்டீர்கள். உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள். சிறு பிள்ளைகளை படம் எடுக்க கூப்பிட்டால் , வரமாட்டேன் என்று ஓடுவார்கள். அதே சமயம் பெரியவர்கள் அளவுக்கு அதிகமாக அதில் ஆர்வம் காட்டுவார்கள். ஏன், மரண பயம்.

புகழ் வேண்டும் என்று மனிதன் ஏன் அலைகிறான்? தான் இறந்த பிறகும் மற்றவர்கள் நினைவில் தான் வாழ வேண்டும் என்ற ஆசை.

கல்வெட்டு. சிலை. புகழ். புகைப்படம். எல்லாம் சாஸ்வதம் தேடி அலைவதின் வெளிப்பாடு.

இந்த பயமும், ஆசையும் நாம் இந்த உடல் தான் நாம் என்று நினைத்துக் கொள்வதால்.

என்று நாம் என்பது இந்த உடல் இல்லை என்ற எண்ணம் வருகிறதோ, மரண பயம் நம்மை விட்டு ஓடிவிடும்.

பயமும் இல்லை. ஆசையும் இல்லை.

வாழ்க்கை மிக மிக சுகமாக எளிதாக இருக்கும்.

ஆனால், நான் என்பது இந்த உடல் இல்லை என்றால் பின் வேறு என்ன என்ற கேள்வி வரும்.

ஆத்மா என்று எளிதாகச் சொல்லி விடலாம்.

ஆனால், அது என்ன என்று விளக்குவது சாதாரண காரியம் இல்லை.

அந்த விளக்கத்தின் முதல் படி, இந்த சுலோகம்.

"அது பிறப்பது இல்லை. இறப்பது இல்லை. அநாதியானது. அதை கொல்ல முடியாது. அது கொல்வதும் இல்லை".

ஒண்ணும் புரியவில்லை அல்லவா ?

எனக்கும் தான். கண்ணனையே மேலும் கேட்போம் விளங்கும்படி.

http://bhagavatgita.blogspot.com/2018/10/221.html

No comments:

Post a Comment