Monday, October 29, 2018

பகவத் கீதை - 2.24 - உண்மை

பகவத் கீதை - 2.24 - உண்மை 


अच्छेद्योऽयमदाह्योऽयमक्लेद्योऽशोष्य एव च।
नित्यः सर्वगतः स्थाणुरचलोऽयं सनातनः॥२४॥

அச்சே²த்³யோऽயமதா³ஹ்யோऽயமக்லேத்³யோऽஸோ²ஷ்ய ஏவ ச|
நித்ய: ஸர்வக³த: ஸ்தா²ணுரசலோऽயம் ஸநாதந: ||2-24||

அச்சே²த்³யோ = வெட்ட முடியாது

அயம் = அது

அதாஹ்யோ = எரிக்க முடியாது

அயம் = அது

அக்லேத்³யோ = நனைக்க முடியாது

அஸோ²ஷ்ய = உலர்த்த முடியாது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

நித்ய: = நிரந்தரமான

ஸர்வக³த:= எங்கும் நிறைந்த

ஸ்தா²ணு = உறுதியாக

அலோயம் = நகராத

ஸநாதந: = புராதனமானது

அதை பிளக்க உடையாது. எரிக்க முடியாது. உலர்த்த முடியாது. அது எங்கும் நிறைந்து இருப்பது. அது நகராத ஒன்று. மிகப் பழமையானது. 

இப்படியே சொல்லிக் கொண்டு போனால் இதுக்கு ஒரு முடிவே இல்லையா ? அது எதிலும் சேராது. அதில் இருந்து எதையும் பிரித்து எடுக்க முடியாது. அதை வெட்ட முடியாது. எரிக்க முடியாது. நனைக்க முடியாது. உலர்த்த முடியாது. எங்கும் நிறைந்து இருக்கும். அது நகராது. அது பழமையானது ...என்று இப்படி அடுக்கிக் கொண்டே போனால், நம்மால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.

அப்படி ஒன்று இருக்க முடியுமா என்ற சந்தேகம் வலுக்கும். அதுவும் இன்றைய அறிவியல் படிக்கும் இளைய தலைமுறைக்கு இதெல்லாம் ஏதோ புருடா மாதிரி இருக்கும்.

ஆன்மீகத்தில் ஈடு பட்டவர்கள் கூட, இது என்னது என்று சொல்ல முடியாமல் முழிப்பார்கள். அதெல்லாம் கேட்கக் கூடாது. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முடித்து விடுவார்கள்.

அது சரியான பதில் இல்லை.

நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இந்த மாதிரி குணங்கள் கொண்ட ஒன்று ஒரு பொருளாக இருக்க முடியாது என்று நமக்குத் தெரிகிறது அல்லவா. அது ஒரு பொருளாக இருந்தால் அதை நம்மால் அசைத்துப் பார்க்க முடியும். கையில் எடுக்கலாம். தீயில் போட்டுப் பார்க்கலாம், தண்ணீரில் முக்கி எடுக்கலாம். காயப் போடலாம். ஏதாவது செய்யலாம். இப்படி எதுவுமே செய்ய முடியாது என்றால் அது ஒரு பொருள் அல்ல  என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.

சரி, பொருள் அல்ல என்றால் பின் அது என்ன ? சக்தியா ? சக்தி என்றால் அது ஒரு இடத்தில் இருந்து  இன்னொரு இடத்துக்குப் போகுமே. மின்சாரம் ஒரு இடத்தில் உற்பத்தி செய்து  இன்னொரு இடத்துக்குப் போகிறதே.

பொருளும் இல்லை. சக்தியும் இல்லை (neither matter, nor energy) என்றால் பின் அது என்ன ?

இப்படி யோசித்துப் பார்ப்போம்.

அது ஒரு உண்மை அல்லது தத்துவம் அல்லது செய்தி என்று.

உதாரணமாக, புவி ஈர்ப்பு விசை என்று ஒரு தத்துவம் இருக்கிறது. Law of Gravitation.

இப்போது மேற் சொன்ன அனைத்தையும் அதன் மேல் பொருத்திப் பார்ப்போம்.

அதை வெட்ட முடியாது.
அதை எரிக்க முடியாது.
அதை நனைக்க முடியாது.
அதை உலர்த்த முடியாது.
அதில் இருந்து எதையும் பிரிக்க முடியாது.
அதோடு எதையும் சேர்க்க முடியாது
அது எங்கும் நிறைந்து இருக்கிறது.
அது பழமையானது.
அது நகராதது.

இப்படி அனைத்தும் அந்த தத்துவத்துக்கு பொருந்துகிறது அல்லவா.

புவி ஈர்ப்பு விசை தான் "ஆத்மா" என்று நான் சொல்ல வில்லை.

அது ஒரு உதாரணம்.

அதை இன்னும் விரித்துப் பார்ப்போம்.

எந்த ஒரு உண்மையும் இந்த பட்டியலுக்குள் அடங்கும்.

அதை அறம் என்று சொல்லுங்கள். சத்யம் என்று சொல்லுங்கள். உண்மை என்று சொல்லுங்கள். எப்படி ஆனாலும், இங்கே சொல்லப் பட்ட அனைத்து  குணங்களும்  எந்த உண்மைக்கும், அறிவுக்கும், சத்யத்துக்கும் பொருந்தும்.

அப்படி என்றால் ஏன் இங்கே "அது" என்று சொல்லப் படுவது ஒரு உண்மையை குறிக்கக் கூடாது .

ஆத்மாவை அறிந்தவன் துன்பப் பட மாட்டான் என்று சொல்லுவது, உண்மையை அறிந்தவன் துன்பப் பட மாட்டான் என்று வரும் அல்லவா.

இப்போது அர்ஜுனனின் சிக்கல் என்ன.

சத்தியத்தை நிலை நிறுத்துவதா? அல்லது பாசத்துக்கு இடம் கொடுப்பதா? என்பது தான்.

வாழ்வில் அனைத்து சிக்கலுக்கும் காரணம் உண்மை , சத்யம் எது என்று நாம் அறியாமல்  இருப்பது தான்.

உடல் என்றால் நோய் வரும், மூப்பு வரும், மரணம் வரும். இது நிரந்தர உண்மை. எப்போதும் உள்ளது. மாற்றம் இல்லாதது. இந்த உண்மையை நாம் மறுதலிக்கும் போது   துன்பப் படுகிறோம். உண்மைக்கு எதிராக உலகம் இருக்க வேண்டும் என்று நம் எதிர்பார்ப்பு நமக்கு துன்பத்தைத் தருகிறது.

எனவே, எது உண்மையோ, எது சத்யமோ அதை அறிந்து அதன் வழி சென்றால்  துன்பம் இல்லை.

இது என்ன புது கதையாக இருக்கிறது.

ஆத்மா என்றால் ஏதோ ஜோதி, சக்தி என்றெல்லாம் அல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது வந்து ஆத்மா என்றால் உண்மை, தத்துவம், சத்யம் என்று புதிதாக ஏதோ சொல்கிறாயே. கீதையில் அப்படித்தான் இருக்கிறதா ? மத்த ஸ்லோகங்கள் இதோடு ஒத்துப் போகிறதா ?

பார்ப்போமா ?

https://bhagavatgita.blogspot.com/2018/10/224.html

No comments:

Post a Comment