Friday, August 17, 2018

பகவத் கீதை - 2.9 - அமைதியாக அமர்ந்தான்

பகவத் கீதை - 2.9 - அமைதியாக அமர்ந்தான் 


सञ्जय उवाच
एवमुक्त्वा हृषीकेशं गुडाकेशः परन्तपः।
न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह॥९॥

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸ²ம் கு³டா³கேஸ²: பரந்தப:|
ந யோத்ஸ்ய இதி கோ³விந்த³முக்த்வா தூஷ்ணீம் ப³பூ⁴வ ஹ ||2-9||

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்

ஏவம் = இவ்வாறு

உக்த்வா = (அர்ஜுனன்) சொன்ன பின்

ஹ்ருஷீகேஸ²ம் = ரிஷிகேசன் என்ற கண்ணன்

கு³டா³கேஸ²: = தூக்கத்தை வென்ற

பரந்தப:| = எதிரிகளை அழிக்கும்

ந = இல்லை

யோத்ஸ்ய = சண்டை இடுதல்

இதி = இந்த

கோ³விந்த = கோவிந்தா

உக்த்வா = கூறிய பின்

தூஷ்ணீம் = அமைதியாக

ப³பூ⁴வ = அமர்ந்தான்

ஹ = உறுதியாக

சஞ்ஜயன் சொல்லுகிறான்:  பகைவர்களை எரிக்கும் ஆற்றல் பெட்ரா அர்ஜுனன், கண்ணனைப் பார்த்து "நான் இனி போர் புரிய மாட்டேன் " என்று சொல்லி விட்டு , அமைதியாக அமர்ந்து விட்டான் 

எவ்வளவோ கேள்விகள் கேட்டான் அர்ஜுனன். உறவினர்களை கொல்லலாமா ? கொன்ற பின் வரும்  இன்பம் ஒரு இன்பமா ? இதற்கு பதில் நாம் இறந்தால் அதுவே நல்லது அல்லவா ? என்றெல்லாம் கேட்டான்.

கண்ணன் பதில் சொல்லவே இல்லை. அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

குழப்பத்தில் உள்ளவர்களை முழுவதும் பேச விட வேண்டும். நடுவில் புகுந்து பதில்  சொல்ல ஆரம்பித்தால் அவர்கள் முதலில் இருந்து ஆரம்பித்து விடுவார்கள். அல்லது, நான் அப்படி சொல்லவில்லை என்று முன்னால் சொன்னதுக்கு வேறு விளக்கம் தர ஆரம்பித்து விடுவார்கள். முடிவில்லாமல் போய் கொண்டே இருக்கும்.

அவர்கள் தங்கள் மனதை மொத்தமாக வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்.

அர்ஜுனன் என்னென்னவோ சொல்லிப் பார்த்தான். அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டான்.

சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான்.

முடிவில், இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று அமைதியாக அமர்ந்து விட்டான்.

அது மட்டும் அல்ல, முந்தைய ஸ்லோகத்தில் "நான் உன்னை சரண் அடைகிறேன். என்னை உன் சீடனாக ஏற்றுக் கொள் . நான் என்ன செய்ய வேண்டும்  என்று எனக்கு கட்டளை இடு " என்று சொன்ன அர்ஜுனன், இனிமேல்  தன்னால் ஆவது ஒன்றும் இல்லை என்று அறிந்து தன்னை முழுவதுமாக  கண்ணனிடம் ஒப்படைத்து விடுகிறான்.

"நன்றே செய்வாய், பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே " என்று மணிவாசகர் சொன்னது போல் , இனி கண்ணன் சொல்வதை கேட்பது என்று முடிவுக்கு வந்து விட்டான்.


சரணாகதியின் மிக முக்கிய அங்கம்....யாரையாவது முழுமையாக நம்ப வேண்டும். நம்பிய பின் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும்.

மாணிக்க வாசகர் சொல்வர் , "இறைவா, நான் உன் பொருள். நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள். வைத்துக் கொள் . இல்லை என்றால் விற்று விடு. இல்லை என்றால் அடமானம் வை. என்ன வேண்டுமானாலும் செய்" என்று விட்டு விட்டார். 

இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை;' என்னின் அல்லால்,
விருந்தினனேனை, விடுதி கண்டாய்? மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.

அர்ஜுனன் புலம்பல் முடிந்தது, ஒரு வழியாக.

கண்ணன் பேச ஆரம்பிக்கப் போகிறான்.

கீதையின் சாரம் தொடங்கப் போகிறது.

கேட்போம்.

http://bhagavatgita.blogspot.com/2018/08/29.html

No comments:

Post a Comment