Saturday, August 18, 2018

பகவத் கீதை - 2.10 - புன்னகை பூத்த கண்ணன்

பகவத் கீதை - 2.10 - புன்னகை பூத்த கண்ணன் 



तमुवाच हृषीकेशः प्रहसन्निव भारत।
सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः॥१०॥

தமுவாச ஹ்ருஷீகேஸ²: ப்ரஹஸந்நிவ பா⁴ரத|
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே விஷீத³ந்தமித³ம் வச: ||2-10||


தம் = அவனிடம் (அர்ஜுனனிடம்)

உவாச = கூறினான் (கண்ணன்)

ஹ்ருஷீகேஸ²: = ஹிரிஷிகேச

ப்ரஹஸந் = புன்னகை பூத்து

இவ = இவ்வாறு

பா⁴ரத| = பாரத குல தோன்றலே

ஸேநயோ = சேனைகளின்

உப⁴யோர் - இரண்டு

மத்⁴யே = மத்தியில்

விஷீத³ந்தம் = துக்கத்துடன் இருக்கும்

இதம் = இவ்வாறு

வச: = பேசினான்


அப்போது, இரண்டு படைகளுக்கு நடுவில் வருத்தத்துடன் இருந்த அர்ஜூஜனைப் பார்த்து, புன்னகையோடு கண்ணன் இவ்வாறு பேச ஆரம்பித்தான் 

என்ன நிகழ்கிறது இங்கே ?

தனி மனிதன் (அர்ஜுனன்) தான் என்ற அகம்பாவம் அனைத்தையும் விட்டு விட்டு, தான் ஒரு பெரிய ஆள் இல்லை, இந்த உலகில் தான் ஒரு துளி என்று உணர்ந்து, சரண் அடையும் போது , அவனுக்கு உண்மை தரப் படுகிறது 

அர்ஜுனன் தான் பெரிய ஒரு வில்லாளி. ஆற்றல் மிகுந்தவன், அறிவு நிறைந்தவன், பலப் பல வரங்களைப் பெற்றவன் என்று ஆணவத்தோடு இருந்தான். 

அந்த ஆணவம் தான் , உண்மையை அறிய பெரிய தடைக் கல். எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தால் பின் புதிதாக எதையும் தெரிந்து கொள்ள முடியாது. எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்தால், எல்லாமே தெரிந்து கொள்ள முடியும். 

இந்த உடல் தான், தேர். 

இந்த தேரை கொண்டு செல்லும் குதிரைகள், நம் புலன்கள் 

நம் சாமர்த்தியம், அறிவு, செல்வாக்கு என்பதெல்லாம், அர்ஜுனனின் காண்டீவம், அம்பு .

கடைசியில், அனைத்தையும் விடுத்து, முழுவதுமாக சரண் அடைந்து, நீயே சொல் என்று கண்ணனிடம் சரண் அடைந்து விட்டான். 

புலன்களால் செலுத்தப்படும் இந்த உடலினுள் இருக்கும் "நான்" என்ற அகம்பாவம், தன்னை மறந்து சரண் அடையும் போது கீதை என்ற மிகப் பெரிய உண்மையின் தரிசனம் கிடைக்கிறது. 


நானும்தான், கீதை படிக்கிறேன். அதில் அப்படி என்னதான் இருக்கிறது. கண்ணன் சொல்வது சரியா ? அதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கேட்க ஆரம்பித்தால் , நீங்கள் இன்னும் உங்கள் "நான்" என்ற அகம்பாவத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 

கொஞ்ச நேரம் , "நான் பெரியவன். எனக்கு எல்லாம் தெரியும்.  கீதையாவது ஒண்ணாவது,  எனக்குத் தெரியாத ஒன்றா " என்ற உங்கள் எண்ணத்தை சற்றே தள்ளி வைத்து விட்டு , அர்ஜுனன் மாதிரி, உன்னிடம் சரண் என்று தன்  காண்டீவத்தை தரையில் வைத்து விட்டு அமைதியாக அமர்ந்ததைப் போல அமருங்கள். 

உங்களுக்கும் கீதையின் தரிசனம் கிடைக்கும். 

இல்லை, வாதம் தான்  பண்ணுவேன் என்றால், காத்திருக்க வேண்டியது தான். 

அர்ஜுனன் சரண் அடைந்தான் - கீதை கிடைத்தது. 

"நான்" என்ற திரை விலகும் வரை, உண்மையின் தரிசனம் கிடைக்காது. 

திரை விலகினால், கண் முன்னே உண்மை வெளிப்படும். 

உங்கள் இஷ்டம். நான் என்ற எண்ணம் குறுக்கிடாமல் வாசித்தால், கீதை உங்களுக்கும் கிடைக்கும். இல்லை என்றால், ஏதோ ஒன்றை படித்தோம், பொழுது போனது, "வாசிக்க நல்லாத்தான் இருக்கு...நடை முறைக்கு சரி வருமானு தெரியலை" என்ற குழப்பம் மட்டுமே மிஞ்சும். 


என்ன, முடிவு செய்து விட்டீர்களா ? கீதை வேண்டுமா அல்லது பொழுது போக வேண்டுமா என்று....






No comments:

Post a Comment