Sunday, August 19, 2018

பகவத் கீதை - 2.11 - யாருக்காகவும் வருந்தத் தேவை இல்லை

பகவத் கீதை - 2.11 - யாருக்காகவும் வருந்தத் தேவை இல்லை 



श्रीभगवानुवाच अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे।
गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डिताः॥११॥

ஸ்ரீப⁴க³வாநுவாச அஸோ²ச்யாநந்வஸோ²சஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதா³ம்ஸ்²ச பா⁴ஷஸே|
க³தாஸூநக³தாஸூம்ஸ்²ச நாநுஸோ²சந்தி பண்டி³தா: ||2-11||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்

அஸோ²ச்யந் = வருந்தாதே

அநந்வஸோ²சஸ் = வருந்துபவனே

த்வம் = நீ

ப்ரஜ்ஞா = ப்ர + ஞானம் = உயர்ந்த ஞானம்

வாதா³ம் = வாதம், சொற்கள்

ச = மேலும்

பா⁴ஷஸே| = நீ சொல்கிறாய்


கதாஸூந் = மூச்சு விடுபவர்கள் போய் விட்டார்கள் (இறந்தவர்கள்)

ந = இல்லை

கதாஸூம்ஸ் = மூச்சு விடுபவர்கள்

ச = மேலும்

நா = இல்லை

அநுஸோ²சந்தி = வருத்தம்

பண்டி³தா:  = ஞானிகளுக்கு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: யாருக்காக வருத்தப் பட வேண்டாமோ அவர்களுக்காக நீ வருந்துகிறாய். இறந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் ஞானிகள் வருந்த மாட்டார்கள். 


பதின்மூன்று வருடங்கள் பாண்டவர்கள் காட்டில் இருந்தார்கள். கண்ணன் அவர்களுக்கு அப்போது கீதையை சொல்லி இருக்கலாம். ஒரு அவசரமும் இல்லாமல், நிறுத்தி நிதானமாக சொல்லி இருக்கலாம். அர்ஜுனனுக்கு மட்டும் அல்ல, எல்லோருக்கும் சொல்லி இருக்கலாம். அங்கெல்லாம் சொல்லவில்லை. போர் முனையில், சங்குகள் முழங்கிய பின், சண்டை தொடங்கும் இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?


உயர்ந்த உண்மைகளை அறிந்து கொள்ள ஒரு மன நிலை வேண்டும். ஒரு தாகம் வேண்டும்.  ஒரு தவிப்பு வேண்டும். ஏதோ காட்டில் பொழுது போகவில்லை. "நீ கீதை சொல்லு, நாங்க கேட்கிறோம்" என்று கேட்டால், அதில் ஒரு பலனும் இருக்காது.



இரண்டாவது, மனிதன் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறான்.  எல்லாம்  தெரிந்தவனுக்கு எதைச் சொல்வது? எப்படி சொல்வது? கோப்பை காலியானால் அல்லவா அதில் மேலும் எதையாவது ஊற்ற முடியும்.



அர்ஜுனன், "எனக்கு ஒன்றும் தெரியாது. உன் சரண். நான் உன் சீடன். எனக்கு கட்டளை இடு" என்ற நிலை வந்தபின் தான் அவனுக்கு கீதை தரப் பட்டது. அந்த பக்குவம் வர வேண்டும்.


கண்ணன் கீதை சொன்னபோது , அந்த போர்க்களத்தில் பலர் இருந்திருப்பார்கள். அவர்களுக்கும், கண்ணன் சொன்னது கேட்டிருக்கும். இருந்தும் பயன் இல்லை. கற்பூரம் சுமந்த கழுதையாக அவர்கள் இருந்திருப்பார்கள்.



நாம் அப்படி இருக்கக் கூடாது. அர்ஜுனனாக இருந்து, அந்த தாகத்தோடு, அந்தத் தவிப்போடு, அந்த சரணாகதி மனதோடு  கீதையை உணர வேண்டும்.


சரி, இந்த சுலோகத்துக்கு வருவோம்.


கண்ணன் சொல்கிறான், "யாருக்காக வருந்தத் தேவை இல்லையோ, அவர்களுக்காக நீ வருந்துகிறாய். ஞானிகள் இறந்தவர்களுக்காகவும், இருப்பவர்களுக்காகவும்  வருந்துவது இல்லை " என்று.


நமக்கு மிக வேண்டியவர்கள், நம்மோடு அன்பாக இருந்தவர்கள், உறவாக இருந்தவர்கள், நெருக்கமாக இருந்தவர்கள் இறந்து போனால் நாம் வருந்துகிறோம். அழுகிறோம். அவர்கள் போய் விட்ட சோகத்தில் தவிக்கிறோம்.


நாம் எதற்காக வருந்துகிறோம்?


இறந்து போனவர்களுக்காகவா ? அவர்கள் தான் இறந்த போய் விட்டார்களே? அவர்களுக்கு ஒரு வலியும் இல்லை. துன்பமும் இல்லை. அவர்களுக்காக நாம் எப்படி வருந்த முடியும்?


சரி, அவர்களுக்காக இல்லை, அவர்கள் நம்மிடம் இல்லையே என்று வருந்துகிறோம். சரி தானே ? அவர்கள் இருந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று நினைத்து வருந்துகிறோம்.




அப்படி என்றால், வருத்தம் அவர்கள் பொருட்டு அல்ல. நமக்கு கிடைக்காத ஒரு இன்பத்தைப் பற்றி. அது ஒரு சுயநலமான விஷயம். எனக்கு ஒன்று கிடைக்கவில்லை.அதற்காக நான் வருந்துகிறேன். இது மற்றவர்கள் சார்ந்த விஷயம் இல்லை. என் இழப்பு, என் வருத்தம்.


ஒருவர் இருக்கும் போது வருந்தத் தேவை இல்லை.


அவர்கள் இறந்த பின் அவர்களுக்காக வருந்துவதில் அர்த்தம் இல்லை.


பின், நம் வருத்தத்துக்கு காரணம், நம் சொந்த இழப்பு.


நாம் இறந்தவர்களுக்காகவும், இருப்பவர்களுக்காகவும் வருந்துவது இல்லை. நமக்காக வருந்துகிறோம். நம் சந்தோஷ இழப்புக்காக வருந்துகிறோம்.


வாழ்க்கையை சற்றே தள்ளி நின்று பார்த்தால் இது புரியும்.


சில புதிய உறவுகள் வந்தன. சில பழைய உறவுகள் சென்றன. இது நடந்து கொண்டே தானே இருக்கிறது.  இதற்காக மனம் உடைந்து உட்கார வேண்டுமா ?


அது மட்டும் அல்ல.


நாம் மற்றவர்களை எப்படி பார்க்கிறோம்?


உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும் பல படிமானங்கள் உண்டு.


தூரத்தில் ஒரு உருவத்தைப் பார்க்கிறேன்.


அது பெண் என்று தெரிகிறது. அது கண் என்ற புலன் சொல்லும் படிமம்.


சற்று அருகில் வரும்போது , அட இது என் தாய் என்று தெரிகிறது. அது மனம் என்பது சொல்லும் படிமம். தாய் என்றால், அவள் அன்பு, அவள் அரவணைப்பு எல்லாம் கூடவே வருகிறது. எனக்கு தாயாக இருப்பவள் இன்னொருவருக்கு தாரமாக இருக்கலாம், இன்னொருவருக்கு மகளாக இருக்கலாம். உறவு என்ற படிமம் மனம் சார்ந்தது.


பெண் என்றால் என்ன, தாய் என்றால் என்ன...சில பல செல்களின் தொகுப்பு.  நரம்பு, எலும்பு, சதை, இதயம், மூளை என்ற பலவற்றின் தொகுப்பு என்பது அறிவு தரும் படிமம்.


யாரோ ஒரு பெண் இறந்து போனால் துக்கம் இல்லை. தாய் இறந்து போனால் துக்கம்.


ஏன் ?  மனம் தாய் பற்றிய பழைய சிந்தனைகளை கொண்டு வருகிறது. அந்த பழைய உறவின் தொடர்ச்சி எதிர்காலத்தில் இருக்காதே என்று வருந்துகிறது.


துக்கம் என்பது இப்போது இல்லை.  இறந்த காலத்தில் நடந்தது எதிர் காலத்தில் இருக்காதே என்ற எண்ணம் தான் துக்கம். வருத்தம். இல்லையா ?


இது சரியா ?


இறந்த காலம் சென்று விட்டது. எதிர் காலம் வரவே இல்லை. இரண்டுமே இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றைப் பற்றி கவலைப் படலாமா ?


கண்ணன் இன்னும் ஆழமாகப் போகிறான்.


முதல் ஸ்லோகத்திலேயே மடை திறந்தார் போல கொட்டுகிறது, அறிவின் பிரவாகம்.


ஆழ்ந்து சிந்தியுங்கள். கீதையை உள்ளுக்குள் இறங்க விடுங்கள். வாதம் பண்ணி வெளியே நிறுத்தாதீர்கள்.



முழுவதும் படித்த பின், வாதம் பண்ணலாம். அப்போதும்  உங்கள் வாதம் உயிரோடு இருந்தால்.



http://bhagavatgita.blogspot.com/2018/08/211.html

No comments:

Post a Comment