Friday, August 10, 2018

பகவத் கீதை - 2.4 - இவர்களை எப்படி எதிர்ப்பேன் ?

பகவத் கீதை - 2.4 - இவர்களை எப்படி எதிர்ப்பேன் ?




अर्जुन उवाच
कथं भीष्ममहं सङ्ख्ये द्रोणं च मधुसूदन।
इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हावरिसूदन॥४॥

அர்ஜுந உவாச
கத²ம் பீ⁴ஷ்மமஹம் ஸங்க்²யே த்³ரோணம் ச மது⁴ஸூத³ந|
இஷுபி⁴: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூத³ந ||2-4||


அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்

கதம் = எப்படி ?

பீ⁴ஷ்மம் = பீஷ்மர்

அஹம் = நான்

ஸங்க்யே = போரில்

த்³ரோணம் = துரோணர்

ச = மேலும்

மது⁴ஸூத³ந| = மதுசூதனா

இஷுபி⁴: = அம்புகளால்

ப்ரதியோத்ஸ்யாமி = எதிர்த்து போர் புரிவேன்

பூஜார்ஹாவ = பூஜைக்குரியவர்களை

அரிஸூத³ந = அரிசுதனா

அர்ஜுனன் சொல்லுகிறான்:  பூஜைக்குரிய பீஷ்மரையும், துரோணரையும் நான் எப்படி அம்புகளால் எதிர்ப்பேன் ? 

நல்ல பசி.  பகல் எல்லாம் ஒரே வேலை. அசந்து போய் வீடு வந்து சேர்ந்திருப்போம். சூடாக சமையல் பண்ணி பரிமாறி இருக்கிறார்கள். ஆவலோடு சாப்பிட நினைப்பதுதானே முறை. அப்படித்தானே நடக்கும் ? நாம் சாப்பிட ஒரு வாய் வைக்கும் முன், நம் பிள்ளையோ,பேரப் பிள்ளையோ வந்து நம்மிடம் "ஆ ..எனக்கு " என்று கேட்டால் என்ன செய்வோம் ? "இரு எனக்கு பசிக்கிறது. சாப்பிட்டுவிட்டு உனக்குத் தருகிறேன் " என்று சொல்வோமா அல்லது "வாடா என் செல்லம், உனக்கில்லாததா " என்று அவனுக்கு முதலில் ஊட்டி விட்டு பின் நாம் உண்போமா ?


தாய்மார்களுக்கு இது எளிதாகப் புரியும். தான் பசித்து இருந்தாலும், பிள்ளையை பசிக்க விட மாட்டார்கள்.

என்ன ஆயிற்று இங்கே ?

எங்கே போயிற்று பசி ? எங்கே போயிற்று அசதி ?

தான் என்று நினைக்கும் போது இருந்த பசி, ஒரு தாய், தகப்பன், அம்மா என்று  நினைக்கும் போது மறைந்து விடுகிறது. பிள்ளை முதலில் வந்து நிற்கிறான். 

பிள்ளை சாப்பிட்டு, முகம் மலர்வதை பார்க்கும் போது நம் பசி மறந்து போகிறது. 

எதையும் தான் தான் என்று நினைத்தால் , வாழ்க்கை ஒரு மாதிரி இருக்கும். அந்த தான் என்பது மாறி, தகப்பன், தாய், என்ற நிலை வரும் போது வாழ்க்கை வேறு விதமாக இருக்கும். 

அதுவே , குடும்பத் தலைவன் என்று நினைக்கும் போது , சகோதரன், சகோதரி என்று அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டும் என்ற நினைப்பு வரும். நம் சுயநலம் பின்னுக்குப் போய் விடும். 

உண்டா இல்லையா ?

இங்கே அர்ஜுனன் தன்னை முன்னிலைப் படுத்தி யோசிக்கிறான். 

என் தாத்தா, என் ஆசிரியர் என்று நினைக்கிறான். 

ஒரு படி மேலே போய் , நான் என்பது வெறும் தனி மனிதன் அல்ல. நான் இந்த பாண்டவ சேனையின் தலைவன். என்று நினைத்தால், சொந்த உறவுகள் மாறும். ஒரு சேனைத் தளபதியாக நான் செய்ய வேண்டியது என்ன என்று சிந்திப்பான். 

அதையும் கடந்து ஒரு படி மேலே போய் , நான் சத்தியத்தை, தர்மத்தை நிலை நாட்ட வந்திருக்கிறேன். அது தான் என் வேலை. என் கடமை என்று நினைத்தால், தாத்தா மற்றும் ஆசிரியரை கொல்லும் வலி மறையும். பிள்ளைக்கு ஊட்டும் போது நம் பசி மறைவதைப் போல. 

நாம் எப்போதும் நம்மை முன்னிலைப் படுத்தி சிந்தித்தால், அர்ஜுனன் போல குழப்பமே மிஞ்சும். 

"நான் சொல்வதை கேட்கவில்லை"

"எனக்கு ஒரு மரியாதை இல்லை"

"என் வருத்தம் யாருக்கும் புரியவில்லை"

"எனக்கும் ஆசா பாசங்கள் உண்டு "

என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். 

என் சுகம். என் சௌகரியம் என்று உலகம் சுயநல கும்பலாய் மாறி விடும். 

அதை விடுத்து, என் வேலை என்ன, என் கடமை என்ன என்று சிந்திக்கத் தொடங்கினால் , ஒரு புது உலகம் உதயமாகும். 

அந்த கடமை சார்ந்த உலகை கீதை காட்டுகிறது. 

சிந்தித்துப் பாருங்கள் ...உங்கள் பிள்ளைகளுக்கு, கணவன் மற்றும் மனைவிக்கு, குடும்பத்துக்கு, நாட்டுக்கு உங்கள் பங்களிப்பென்ன என்ன என்று. 

அதைத்தான் கீதை சொல்கிறது.

http://bhagavatgita.blogspot.com/2018/08/24.html

No comments:

Post a Comment