Monday, August 6, 2018

பகவத் கீதை - 2.3 - மன தளர்ச்சியை விடு

பகவத் கீதை - 2.3 - மன தளர்ச்சியை விடு 



क्लैब्यं मा स्म गमः पार्थ नैतत्त्वय्युपपद्यते।
क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप॥३॥

க்லைப்³யம் மா ஸ்ம க³ம: பார்த² நைதத்த்வய்யுபபத்³யதே|
க்ஷுத்³ரம் ஹ்ருத³ய தௌ³ர்ப³ல்யம் த்யக்த்வோத்திஷ்ட² பரந்தப ||2-3||

க்லைப்³யம் = ஆண்மையற்ற

மா ஸ்ம = இல்லாத

க³ம: = நீ சென்ற

பார்த² = பார்த்த

ந =  இல்லை

ஏதத் = இந்த

த்வய் = உன்னிடம்


யுபபத்³யதே| = பொருந்தியது ?

க்ஷுத்³ரம் = கீழான

ஹ்ருத³ய = மன

தௌ³ர்ப³ல்யம் = தளர்ச்சி

த்யக்த்வ =  கைவிட்டபின்

உத்திஷ்ட = எழுந்து நில்

பரந்தப = எதிரிகளை அழிப்பவனே


அர்ஜுனா, இப்படி ஆண்மையற்று நிற்காதே.  இது உனக்கு ஏற்றது அல்ல. 
தாழ்வான மனத் தளர்ச்சியை விட்டு எழுந்து நில்.  பகைவரை அழிப்பவனே 

மன தளர்ச்சியே நமது முன்னேற்றத்துக்கு தடைக்கல் என்று முந்தைய ஸ்லோகத்தில் பார்த்தோம். முன்னேற்றம் மட்டும் அல்ல, நாம் நமது முழு சக்தியை (potential ) அடைய தடையாய் இருப்பது இந்த மன தளர்ச்சி தான்.

கண்ணன் பல விஷயங்களை இங்கு உணர்த்துகிறான்.

முதலில், இந்த மன தளர்ச்சியானது கீழானது. அதில் பெருமை பட ஒன்றும் இல்லை. சிலர், தங்களுக்கு உள்ள குறைகளையே பெரிய நல்ல விஷயம் போல் சொல்லிக் கொண்டு திரிவார்கள். "எனக்கு அடிக்கடி depression வரும்", "எனக்கு எதை கண்டாலும் பயம், ஒரு பதட்டம் " என்று பெருமையாக சொல்லுவார்கள். இதில் பெருமை ஒன்றும் இல்லை. கொஞ்சம் பரிதாபம் வேண்டுமானால் கிடைக்கலாம். இது மிகவும் கீழான ஒன்று ஒன்று என்று தெரிந்து கொண்டு அதை கை விட வேண்டும்.

சரி, சொல்லுவது எளிது. எப்படி கை விடுவது ? பழகிப் போச்சே. "என்னால் முடியலையே " என்று சொல்லியே பழகிப் போச்சே. எப்படி அதை விட்டு விலகுவது.

கீதை வழி காட்டுகிறது.

முதலில் நீங்கள் இது வரை சாதித்தவற்றை பற்றி எண்ணிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் திரும்பிப் பாருங்கள்.  எவ்வளவோ தடைகளை கடந்து வந்திருக்கிறீர்கள். எவ்வளவோ போராடி வந்து இருக்கிறீர்கள். நீங்கள் இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும், அது ஒன்றும் எளிதில் அடையக் கூடியது அல்ல. உங்கள் சாதனைகளை பட்டியல் போடுங்கள். தன்னம்பிக்கை வரும். இவ்வளவு செய்த என்னால், இதை செய்ய முடியாதா என்று ஒரு உத்வேகம் பிறக்கும்.

கண்ணன் சொல்கிறான் "பகைவர்களை அழிப்பவனே " என்று. அர்ஜுனா , நினைத்துப் பார், இது வரை எவ்வளவு பகைவர்களை நீ அழித்திருக்கிறாய். இது என்ன உனக்கு பிரமாதம் என்று.

அர்ஜுனனுக்கு பக்கத்தில் கண்ணன் இருந்தான். நமக்கு பக்கத்தில் யார் இருக்கிறார்கள் இப்படி சொல்ல ?

யாரும் இல்லை. ஆனால், கீதை இருக்கிறது. அதைப் படித்து அதில் இருந்து நாம்  அறிந்து கொள்ளலாம்.

மனச் சோர்வை நீக்க, சிறந்த வழி, இது வரை சாதித்தவற்றை பற்றி எண்ணிப் பார்ப்பது. எப்படி செய்தோம்,  எப்படி போராடினோம், எப்படி வென்றோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைத்துப் பார்க்க பார்க்க நமக்குள் ஒரு தன்னம்பிக்கை தோன்றும்.

மனச் சோர்வு வந்து விட்டால், நம் சாதனைகளை நாமே அசை போட்டுப் பார்க்க வேண்டும். அதோடு நின்று விடக் கூடாது. செயலில் இறங்க வேண்டும்.

"இப்படி ஆண்மையற்று நிற்காதே"  என்கிறான் கண்ணன்.

ஆண்மை என்பது இங்கே ஆளுமையை குறிக்கும்.  சும்மா நிற்காதே. நீ எவ்வளவோ செய்தவன். இதையும் செய்யலாம், காரியத்தில் இறங்கு என்கிறான். யோசித்துக் கொண்டே இருந்தால் , யோசித்துக் கொண்டே இருக்கலாம். காரியத்தில் இறங்கி மள  மள என்று வேலையை தொடர வேண்டும்.

எனவே மனச் சோர்வை போக்க கீதை காட்டும் வழி


- முதலில் அது (மனச் சோர்வு) ஓர் நோய் என்று அறிய வேண்டும். அதை விட்டு விலக விரும்ப வேண்டும்.

- இரண்டாவது, நமது நல்ல குணங்களை, நமது சாதனைகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

- மூன்றாவது, காரியத்தில் இறங்க வேண்டும்.

சரி என்று படுகிறதா ?

http://bhagavatgita.blogspot.com/2018/08/23.html

No comments:

Post a Comment