Tuesday, March 28, 2017

கீதை - 3.9 - வேள்வியின் பொருட்டு தொழில் செய்

கீதை - 3.9 - வேள்வியின் பொருட்டு தொழில் செய் 


यज्ञार्थात्कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः।
तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर॥९॥

யஜ்ஞார்தாத்கர்மணோந்யத்ர லோகோயம் கர்மபந்தந:|
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர ||3-9||


யஜ்ஞார்தாத் = யக்ஞய + அர்த்த = வேள்வியின் நோக்கத்தோடு 

கர்மண = காரியங்களை

அந்யத்ர = வேறுவிதமாக

லோகா = உலகில்

அயம் = இது

கர்மபந்தந: = கர்மத்துடன் இணைப்பது

ததர்தம் = தத் = அர்த்தம் = அதற்காக

கர்ம = காரியங்களை

கௌந்தேய = கௌந்தேயனே

முக்தஸங்க: = முக்த + சங்க = பற்றினை விடுத்து

ஸமாசர = செய்

வேள்விக்காக செய்யாத மற்ற அனைத்து செயல்களும் மனிதர்க்கு ஒரு விலங்கு ஆகிறது.  அதனால்,குந்தி  மகனே,பற்றை விடுத்து தொழில் செய்து கொண்டிரு 

அது என்ன வேள்வியின் பொருட்டு காரியம் செய்தல். இப்ப எல்லாம் யார் வேள்வி செய்து கொண்டிருக்கிறார்கள். கண்ணன் இருந்த காலத்திலேயே கூட எல்லோரும் , எப்போதும் வேள்வி செய்து கொண்டிருந்தார்களா என்ன.

பின் ஏன் கண்ணன் வேள்வியின் பொருட்டு காரியம் செய்  என்கிறான்.

யங்கியம் என்ற வார்த்தைக்கு அர்ப்பணிப்பு, சுயநலம் இல்லாத என்று பொருள்.

சுயநலம் இல்லாமல், ஒரு அர்ப்பணிப்பு மனதுடன் எந்த காரியத்தையும் செய் என்கிறான்.

இது எல்லாம் நடக்கிற காரியமா ? சுயநலத்துடன் செய்தாலே நம்மை ஏமாற்றி  விடுகிறார்கள். இதில் சுயநலமும் இல்லாவிட்டால் அவ்வளவுதான். இந்த உலகத்தில் வாழ முடியுமா ?

சற்று சிக்கலான கேள்விதான்.

அர்ஜுனன் முன்னால் பெரிய படை  நிற்கிறது. அவனால் அந்த படையை வெல்ல முடியும். இருந்தும் யுத்தம் செய்ய தயங்குகிறான்.

ஏன் ?

அந்த படையில் உள்ளவர்கள் அவனுடைய சொந்தக் காரர்கள் - மாமன், மச்சான், தாத்தா, குல குரு, என்று எல்லோரும் இருக்கிறார்கள்.

"என் சொந்தக்காரர்களை எப்படி கொல்வேன் " என்று  தவிக்கிறான்.

அவர்கள் அர்ஜுனனின் சொந்தக்காரர்களாக இல்லாவிட்டால் அவன் எளிதாக சண்டை இட்டு அவர்கள் வென்றிருப்பான்.

சுயநலம் குறுக்கே நிற்கிறது.

அவன் என்ன செய்ய வேண்டும் ?

நீதிக்காக போராட வேண்டுமா ? அல்லது சொந்த பந்தம் என்று சுயநலத்துக்காக அநீதி நடக்கட்டும் என்று விட்டு விட்டு போய் விட வேண்டுமா ?

நீதிக்காக போராட வேண்டும் என்பது தான்  எல்லோரின் பதிலாகவும் இருக்கும்.

அவன் கடமையைச் செய்ய தடையாக  இருப்பது எது ? அவன் சுயநலம்.

 எனவே,சுயநலம் தவிர்த்து கடமையைச் செய் என்கிறான் கண்ணன்.

சரி, அது அர்ஜுனனுக்கு அந்த இடத்தில் சரியாக இருக்கும். நமக்கு சரி வருமா என்ற கேள்வி  வரும்.

 யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் கடினமாக வேலை செய்து , ஒரு பதவி உயர்வை எதிர்பார்த்து  இருக்கிறீர்கள்.உங்கள் மேலாளர் , தனக்கு பிடித்த ஒருவருக்கு பதவி உயர்வை தந்து விடுகிறார்.

அது சரியா ? இல்லை .

ஏன் சரி இல்லை. அவர் சுயநலமாக செயல் பட்டார். தனக்கு வேண்டியவனுக்கு பதவி உயர்வு  தந்தார். அது உங்களுக்கு வருத்தம்  தருகிறது.

அதே போல் நீங்கள் செய்தால் வேறு யாருக்கோ வருத்தம் வரும்  அல்லவா.எனவே, சுயநலம் தவிர்த்து கடமை செய்ய வேண்டும் என்று தெரிகிறது அல்லவா.

இலஞ்சம் கொடுக்கிறோம். எனக்கு ஒரு நன்மை வேண்டும். மற்றவன் எக்கேடு கெட்டு போனால் என்ன  பணம் கொடுத்து காரியம் செய்து கொள்ளப் பார்க்கிறோம்.

அது சரியா  ? இல்லை.

காரணம் என்ன, நம் சுயநலத்துக்காக மற்றவர்களின் உரிமையை பறிக்கிறோம்.

இப்படி எங்கு பார்த்தாலும் சுயநலத்துடன் மற்றவர்கள் செயல்படும்போது நமக்கு கோபம் வருகிறது. அது போல நாம் செயல் பட்டால் மற்றவர்களுக்கு வருத்தமும் கோபமும் வரும் அல்லவா.

அப்ப என்ன செய்ய வேண்டும் ?

சுயநலம் தவிர்த்து, பற்று அற்று காரியம் செய்ய  வேண்டும்.

Act objectively not subjectively.

காரியத்தில் குறியாக இருக்க வேண்டும். யாருக்கு நன்மை வரும், யாருக்கு கெடுதல் வரும் என்று  பாராமல்,காரியத்தை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

இது பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்க  இருக்கிறோம்.

http://bhagavatgita.blogspot.com/2017/03/39.html




No comments:

Post a Comment