Friday, March 31, 2017

கீதை - 3.11 - மனதுக்குப் பிடித்ததை செய்யுங்கள்

கீதை - 3.11 -  மனதுக்குப் பிடித்ததை செய்யுங்கள் 


देवान्भावयतानेन ते देवा भावयन्तु वः।
परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ॥११॥

தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:|
பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத ||3-11||


தேவாந் = தேவர்கள் , தெய்வீகத் தன்மை

பாவயதா = வெளிப்படும்படி

அநேந = அதன் மூலம்

தே = அவர்கள்

தேவா = தேவர்கள், தெய்வீக தன்மை

பாவயந்து =    செயல் பட்டு

வ: = உங்களுக்கு

பரஸ்பரம் = ஒருவர்க்கு ஒருவர்

பாவயந்த: = உதவி

ஸ்ரேய: = உயர்நிலை, சிறப்பு நிலை

பரம = இறுதி நிலை, உன்னத நிலை

வாப்ஸ்யத = வாய்க்கப் பெறுவீர்கள்

||3-11||

இதனால் நீங்கள் தேவர்க்ளை பற்றி எண்ணுங்கள். அவர்கள் உங்களை எண்ணுவார்கள். இதன் மூலம் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி உயர்ந்த நிலையை அடைய முடியும். 

அது என்ன நீங்கள் தேவர்களை நினையுங்கள், தேவர்கள் உங்களை நினைப்பார்கள் ? யார் அந்த தேவர்கள். அவர்கள் எப்படி நமக்கு உதவி செய்வார்கள்.

தேவர்கள் என்று இங்கே கூறப்படுவது தெய்வீகத் தன்மை.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை, ஆற்றல் ஒளிந்து இருக்கிறது. Potential என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.


பெரும்பாலானவர்கள் ஏதோ படித்தோம், ஏதோ ஒரு வேலை கிடைத்தது செய்கிறோம். சம்பளம் வருகிறது. அதன் மூலம் குடும்பம் நடக்கிறது என்று வாழ்க்கை நகர்ந்து விடுகிறது.

கீதை ஒரு மாற்று வழியை சொல்கிறது.

முதலில் உங்களின் திறமை, ஆற்றல், ஆவல் இதில் இருக்கிறது என்று கண்டு பிடியுங்கள்.

"தேவர்களை எண்ணிப் பாருங்கள் "

திறமை எது என்று கண்டு பிடித்தவுடன் அந்தத் திறமையை பயன்படுத்துங்கள்.

எப்போது உங்கள் திறமை, ஆற்றலை நீங்கள் பயன் படுத்த ஆரம்பிக்கிறீர்களோ அப்போதே நீங்கள் ஒரு உற்சாகத்தை அடைவீர்கள். அது சுகமா இருக்கும். அதை மேலும் மேலும் வளர்க்க முனைவீர்கள்.

அப்படி உற்சாகமாக செய்யும் வேலையில் சம்பளம் என்ன, பதவி உயர்வு என்ன என்றெல்லாம் பார்க்க தோணாது. நல்லா செய்யணுமே, சீக்கிரம் செய்யணுமே, எப்படியாவது இதை செய்து முடிக்க வேண்டுமே என்ற ஆர்வமே மேலோங்கி நிற்கும்.

அப்படிப்பட்ட வேலை செய்வதை நீங்கள் இன்பமாக உணர்வீர்கள்.

"கடமையை செய், பலனை எதிர் பார்க்காதே " என்று சொன்னால் எல்லோரும் முகம் சுளிப்பார்கள். இதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை. ரொம்ப கஷ்டம், நடை முறைக்கு ஒத்து வராது என்று.

ஆனால், நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு ரொம்ப பிடித்து போய் விட்டால் , அந்த வேலையே அந்த வேலையின் பலன் தான்.

நிறைய பேர் hobby என்று வைத்திருப்பார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடித்தது. அதை செய்ய அவர்கள் சம்பளம் , பணம் எல்லாம் எதிர் பார்ப்பது இல்லை. புகைப்படம் பிடிப்பது, தோட்ட வேலை செய்வது, பாடுவது என்று பல இருக்கும்.

அதையே முழுநேர வேலையாக செய்யத் தொடங்கினால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும்.

உங்களுக்குள் இருக்கும் திறமையை, ஆற்றலை நினையுங்கள்.

அந்த ஆற்றல் உங்களை உயர்த்தும். நீங்கள் அந்த ஆற்றலை வளர்ப்பீர்கள்.  அது உங்களை  உயர்ந்த இடத்துக்கு இட்டுச் செல்லும்.

பலன் இரண்டாம் பட்சமாகும்.  வாழ்க்கை இனிமையாகும்.

சிந்தித்துப் பாருங்கள்.


No comments:

Post a Comment