Sunday, March 26, 2017

கீதை - 3.6 - அறிவும் புலனும்

கீதை - 3.6 - அறிவும் புலனும் 


कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन्।
इन्द्रियार्थान्विमूढात्मा मिथ्याचारः स उच्यते॥६॥

கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்|
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே ||3-6||

கர்மேந்த்ரியாணி = இந்திரியங்களால் (புலன்கள் மூலம்) செய்யப்படும் காரியங்களை

ஸம்யம்ய = நிறுத்தி விட்டு, கட்டுப் படுத்தி விட்டு

ய = அவன்

ஆஸ்தே = இருக்கிறனானோ

மநஸா = மனதில்

ஸ்மரந் = நினைத்துக் கொண்டு

இந்த்ரியார்தாந் = புலன் இன்பங்களை

விமூடாத்மா = மூட ஆத்மா.

மித்யாசார: = களவொழுக்கம் உள்ளவன்

ஸ = அவன்

உச்யதே = சொல்லப் படுகிறான்

மனதை கட்டுப்படுத்தாமல் , புலன்களை மட்டும் கட்டுப் படுத்துபவன் , பொய் ஒழுக்கம் கொண்டவன் ஆவான். 

நாம் நிறைய படிக்கிறோம். படித்தவர்கள் சொல்வதை கேட்கிறோம். நாம் படிப்பது, கேட்பது எல்லாம் சரியாக இருக்கிறது என்று நம் அறிவு சொல்கிறது. அதை நடைமுறையில் செயல் படுத்த வேண்டும் என்று முயற்சி செய்வோம். ஆனால், முடியாது.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

பென்னாசை கூடாது, மனைவியைத் தவிர வேறு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்று நம் அற நூல்கள் கூறுகின்றன. நாமும் கட்டுப் பாட்டுடன் இருக்க வேண்டும் என்று நினைப்போம்.  அப்படி இருக்கும் போது தெருவில் ஒரு அழகான பெண் போனால், மனம் அவள் பின்னால் போகிறது.

சரி, அது வேண்டாம், சில பேர், நான் அப்படி எல்லாம் இல்லை என்று வாதிக்கக் கூடும்.

உணவு கட்டுப்பாடு. மருத்துவர் சொல்லி இருப்பார் இனிப்பு, எண்ணெய் பலகாரங்களை  தவிர்க்க வேண்டும் என்று. நாமும் சரி என்று இருப்போம்.  வீட்டில் ஒரு  வடை போட்டால், ஒரு லட்டு செய்தால் முதல் ஆளாக போய் நிற்போம்.

ஏன் ?

மனம் கட்டுப் படவில்லை.

மனம் கட்டுப்படாதவரை புலன்களை கட்டுப்படுத்துவது என்பது நடக்காத காரியம். அப்படி கட்டுப் படுத்தி விட்டேன் என்று சொன்னால் அது பொய் என்று கீதை சொல்கிறது.

களவொழுக்கம் என்கிறது.

வெளி உலகுக்கு வேண்டுமானால் துறவி, சாமியார் என்று சொல்லிக் கொள்ளலாம். உள்ளுக்குள் அவன் அனைத்துக்கும் ஆசைப் படுவான். மனம் அரித்துக் கொண்டே இருக்கும். சரியான சமயத்தில் தவறு நிகழும்.

சரி தவறு என்ற ஞானம் எவ்வளவுதான் இருந்தாலும், மனிதன் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு தவறு செய்வான்.

செயலில் தவறு நிகழ்வதை தவிர்க்க வேண்டும் என்றால் அறிவு மட்டும் போதாது.

ஞானம் மட்டுமே நல்ல வழியில் செலுத்தாது . உலகில் நடக்கும் பெரும்பாலான தவறுகள் தெரிந்தே  செய்வதுதான். களவும், சூதும், கொலையும், மேலும் பல வன் கொடுமைகளும் அவை தவறென்று தெரியாமலா செய்கிறார்கள்.

எனவே, கர்ம மார்க்கம் சரியாக இருக்க வேண்டும் என்றால் ஞானம் மட்டும் போதாது.

வெறும் அறிவால் வாழ்க்கை முழுமை பெறாது.

பின், என்னதான் செய்வது ?


No comments:

Post a Comment