Monday, March 20, 2017

கீதை - 3.1 - ஞானமா ? கர்மமா ?

கீதை - 3.1 - ஞானமா ? கர்மமா ? 


अर्जुन उवाच
ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन।
तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव॥१॥

அர்ஜுந உவாச
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா பு³த்³தி⁴ர்ஜநார்த³ந| 
தத்கிம் கர்மணி கோ⁴ரே மாம் நியோஜயஸி கேஸ²வ ||3-1||

அர்ஜுந உவாச = அர்ஜுன் கேட்கிறான்

ஜ்யாயஸீ  = உயர்ந்தவனே

சேத் = அப்படியானால்

கர்மணா = காரியம் செய்வதுதான்

தே = உன்

மத = எண்ணம் என்றால்

 புத்தி = புத்தி, ஞானம், அறிவு

ஜனார்த்தன = ஜனார்தனனே

தத் = அது

கிம் = ஏன்

கர்மணி  = கர்மம் செய்வதில்

கோரே = கோரமான

மாம் = நீ

நியோஜயஸி =என்னை ஈடுபடுத்துகிறாய்

கேஸ²வ = கேசவா

அர்ஜுனன் சொல்கிறான், கேசவா, ஞானம் தான் உயர்ந்தது என்றால் இந்த கோராமன காரியத்தை செய்ய ஏன் என்னை தூண்டுகிறாய் ?

உண்மை தெரிந்தவனுக்கும், தெரியாதவனுக்கும் இடையில் உள்ள தூரம் மிக மிக அதிகம்.

மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள தூரம்.

சொல்வதை புரிந்து கொள்ள முடியாத சீடன் இருக்கும் சங்கடம் உலகில் எல்லா ஞானிகளுக்கும் இருந்தது.

குரு சொல்ல வந்ததை புரிந்து கொள்ளும் சீடர்களை பெற்ற ஆசிரியர்கள் மிகச் சிலரே.

இயேசு நாதர் தன் சீடர்களைப் பார்த்து "உங்களுக்கு துன்பம் செய்தவர்களை மன்னியுங்கள்" என்றார்

சீடர்கள் புரிந்து கொள்ளவில்லை.

அவர்கள் இயேசுவிடம் திருப்பி கேட்டார்கள் "எத்தனை முறை நாங்கள் மன்னிக்க வேண்டும் " என்று

இயேசு சங்கடப் பட்டிருப்பார் ...இந்த சீடர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று ..."ஏழு முறை மன்னியுங்கள் " என்றார்.

சீடர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை "ஏழு முறை போதுமா " என்று கேட்டார்கள்.  ஏன்றால்   எட்டாவது முறை துன்பம் செய்தால் எதிரியை மன்னிக்காமல் அடி பின்னி விடலாம், முந்தைய ஏழு முறைக்கும் சேர்த்து என்பது அவர்கள் எண்ணம்

இயேசு "ஏழு முறை மட்டுமல்ல...ஏழ் எழுபது முறை மன்னியுங்கள் " என்றார்.

புத்தர் அந்த விதத்தில் மிக அதிர்ஷ்டசாலி.

ஒரு நாள் புத்தர் பிரசங்கம் செய்ய வந்து அமர்ந்து இருந்தார். அப்போது அவருடைய பிரதம சீடர்  மகா கஷ்யப் என்பவரும் அருகில் இருந்தார்.

புத்தர் அங்கிருந்த ஒரு தாமரை மலரை எடுத்து கஷ்யப்பிடம் தந்தார்.

அதை பெற்றுக் கொண்ட கஷ்யப் ஒரு புன்னகை பூத்தார்.

அதை கண்ட புத்தரும் ஒரு புன்முறுவல் பூத்தார்.

புத்தர் சொல்ல வந்ததை கஷ்யப் சொல்லாமலேயே புரிந்து கொண்டார்.

இங்கே கிருஷ்ணன் 72 ஸ்லோகங்கள் சொன்னான்...அர்ஜுனன் புரிந்து கொள்ளவில்லை....

ஞானம் தான் சிறந்தது என்றால், பின் ஏன் இந்த யுத்தம் செய்யச் சொல்கிறாய் என்று முதல்  அத்யாயத்தில்  முதலில் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்கிறான்.

பரவாயில்லை, சந்தேகம் இருக்கும் போது மீண்டும் கேட்கிறானே...சில பேர் புரியாவிட்டாலும் புரிந்த  மாதிரி தலையை ஆட்டிக் கொண்டு போய் விடுவார்கள்..அந்தபுரம்   போய் தங்கள் மனதுக்கு தோன்றியதை செய்வார்கள்...கேட்டால்   இதுதான்  ஆசிரியர் சொன்னார், ஆசாரியர் சொன்னார் என்று சொல்லி விடுவார்கள்.

மதம் என்பதே புரியாதவர்கள், தெரியாதவர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் ஒரு இயக்கம் தானே.

நல்ல மாணவனாக, அர்ஜுனன் புரியாததை ஒத்துக் கொண்டு மீண்டும் கேள்வி கேட்கிரான்.

மிகப் பொறுமையாக கிருஷ்ணன் பதில் சொல்கிறான்....மாணவனின் மேல் அன்பும் அக்கறையும்   உள்ள ஆசிரியனாக....

என்ன சொன்னான் என்பதை நாமும் கேட்போம் .....

ஞானம் என்பது வேறு, கர்மம் என்பது வேறு என்று பலபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஒன்று ஞான மார்கத்தில் செல்ல வேண்டும். படிப்பது, கேட்பது, அறிவை விருத்தி செய்து கொள்வது என்பது முடியாவிட்டால் கர்ம மார்கத்தில் செல்ல வேண்டும் என்று கீதை சொல்வதாக  பலர் உரை செய்வார்கள்.

ஞானம், பக்தி, கர்மம் என்ற மூன்று வழியை கண்ணன் சொல்வதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

அது சரியல்ல என்பது என் எண்ணம்.

ஒரே ஒரு மார்க்கம்தான் உண்டு என்பது என் எண்ணம்.

அறிவு இல்லாத கர்மம் ஆபத்தில் போய் முடியும்.

குரங்கு கையில் வாளை கொடுத்து தன்னை பாதுகாக்கும்படி ஒரு இராஜா சொன்னானாம். அரசன் அசந்து தூங்கும்போது , அவன் கழுத்தில் ஒரு ஈ அமர்ந்தது.

குரங்குக்கு வந்ததே கோபம். கண்ட இடத்தில் அமரும் ஈயே , நீ அரசன் கழுத்தில் அமரலாமா  என்று , கையில் கிடைத்த வாளால் ஓங்கி ஒரு போடு போட்டது.

அரசன் தலை துண்டாகி இறந்து போனான்.

ஞானம் இல்லாத கர்மத்தால்  ஆபத்துதான் விளையும்.

சரி நிறைய படித்து ஞானம் இருக்கிறது. ஒரு செயலும் எல்லை, அன்பு இல்லை, கருணை இல்லை என்றால் அந்த ஞானத்தால் என்ன பயன்.

கற்றதனால் ஆய பயன் என் கொல்  வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார் வள்ளுவர். ஞானம் இருந்து என்ன பயன், பக்தி இல்லை என்றால் என்று கேட்கிறார். ஞானம் மட்டுமே முடிவு அல்ல.

ஞானத்தில் இருந்து விளையும் கர்மமே உயர்ந்தது.

தெளிவான ஞானம் பிறக்கும் போது , அதில் இருந்தே கர்மமும் விளைகிறது.

ஞானம் வேறு கர்மம் வேறு அல்ல.

தெளிந்த சிந்தனையின் , அறிவின் விளைவே கர்மம்.

அந்த கர்மமே , மீண்டும் மீண்டும் பிறவிக்கு வழி வகுக்காத கர்மம். அதுவே பற்றற்ற கர்மம்.

நான் செய்கிறேன், எனக்காக செய்கிறேன், யாரோ சொல்லி செய்கிறேன், உணர்ச்சிகளால் உந்தப்பட்டு செய்கிறேன் என்று ஞானம் இல்லாதவன் காரியங்களை  செய்கிறான். அதன் வெற்றி தோல்வி அவனை பாதிக்கிறது.

ஞானத்தின் உச்சியில் இருப்பவன்  செய்யும் காரியம் அவன் வேறு, ஞானம் வேறு, கர்மம் வேறு என்று இல்லாமல் செய்வான்.

அங்கே கர்மம் மட்டும்தான் நிகழ்கிறது.

செய்பவனும் இல்லை. செய்யப் படுவதும் இல்லை. செயல் மட்டுமே இருக்கிறது.

அதில் வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை.

ஞானம் என்ற விதையில் இருந்து கர்மம் என்ற செயல் விளைகிறது.

மரம் வேறு , விதை வேறல்ல. மரமும் விதையும் ஒன்றுதானே.


ஞானத்தையும் கர்மத்தையும் பிரிக்கும் போது தான் குழப்பம் வருகிறது.

கீதையை முழுவதுமாக படித்தால் தெரியும் - ஒரு அத்தியாயத்தில் கண்ணன் ஞானமே  உயர்தது என்பான். இன்னொன்றில் கர்மமே உயர்தது என்பான். இன்னொன்றில்,, இது இரண்டும் இல்லை, பக்தியே எளிய வழி என்பான். படிப்பவர்கள்  குழம்பிப் போவார்கள்.

அர்ஜுனன் கேட்கிறான், ஞானம் உயர்ந்தது என்றால் ஏன் என்னை இந்த யுத்தத்தை செய்யச் சொல்கிறாய் என்று.

அதற்கு கண்ணன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.


No comments:

Post a Comment