Tuesday, March 21, 2017

கீதை - 3.2 - எது நன்மை தருமோ அதை உறுதியாகச் சொல்

கீதை - 3.2 - எது நன்மை தருமோ அதை உறுதியாகச் சொல்



व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे।
तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्॥२॥

வ்யாமிஸ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே|
ததேகம் வத நிஸ்சித்ய யேந ஸ்ரேயோஹமாப்நுயாம் ||3-2||


வ்யாமிஸ்ரேண = கலந்து, குழப்பமான

ஏவ = நிச்சயமாக

வாக்யேந  = வாக்கினால், உன் பேச்சால்

புத்திம் = என் புத்தியானது

மோஹயஸீவ = பேதலிக்கிறது

மே = என்

தத் = அந்த

ஏகம்தே = ஒன்றை மட்டும்

வத = பேச்சு

நிஸ்சித்ய = நிச்சயமான

யேந = அதனால்

ஸ்ரேயோ = உறுதியான, உயர்வான

அஹம்ஹ = நான்

அப்நுயாம்  = நான் அடைவேன்

அதையும் இதையும் கலந்து நீ சொல்வதானால் என் புத்தி குழம்புகிறது. எது எனக்கு நன்மை தருமோ அதை மட்டும் எனக்கு உறுதியாகச் சொல்


பொதுவாக மனிதர்கள், சொல்லுவதை கேட்பது இல்லை. தங்களுக்கு எது வேண்டுமோ, எது சரி என்று படுகிறதோ அதுதான் சொல்லப்பட்டதாக கேட்கிறார்கள்.

People hear what they want to hear என்று சொல்லுவார்களே, அது மாதிரி.

தங்களுக்கு பிடித்தது, சரி என்று படுவதைத் தவிர வேறு ஏதாவது சொன்னால், ஒன்று அதை கண்டு கொள்வது இல்லை...அல்லது என்ன இது ஒரே குழப்பமாக இருக்கிறதே என்று தவிப்பார்கள்.

இங்கே குழப்பத்திற்கு ஒரு அவசியமும் இல்லை.

கிருஷ்ணன் கடமையை செய்யாதே என்றோ, கர்மத்தில் ஈடு படாதே என்றோ சொல்லவில்லை.

பலன் கருதாமல் காரியம் செய் என்று தான் சொன்னான்.

உன் கடமையை, ஸ்வதர்மத்தை கை விடாதே என்று சொன்னான்.

உலகத்தின் இயற்கை பற்றி சொன்னான்.

பின் எங்கும் நிறைந்திருக்கும், மாற்றம் இலாத ஒன்றைப் பற்றி சொன்னன்.

அறிவின் மூலம் புலன்களை எப்படி கையாள்வது என்று கூறினான்.

இதில் குழப்பம் வர வழியில்லை. இருந்தாலும், அர்ஜுனன் குழம்புகிறான்.

திட சித்தம் உயர்ந்தது என்று கூறினாயே, அப்படி என்றால் எதற்கு வேலை செய்ய வேண்டும் ? அறிவு மட்டும் போதுமே. உழைப்பு எதற்கு என்று.

கர்மம் ஏன் செய்ய வேண்டும் ? ஞானம் தான் உயர்ந்தது என்றால் பேசாமல் நாள் பூராவும் படிப்பது, படித்தவர்கள் சொல்வதை கேட்பது என்று இருந்து விடலாமே. ஏன் கடமைகளை செய்ய வேண்டும் என்பது அர்ஜுனனின் கேள்வி.

நம் கேள்வியும் கூடத்தான்.

வாழ்க்கை என்பது எல்லாம் கலந்ததுதான். ஒன்று மட்டும் இருக்கட்டும், இன்னொன்று வேண்டாம் என்று சொல்ல முடியாது.

ஒரு முழுமையான மனிதனாக இருக்க வேண்டும் என்றால் ஞானமும் வேண்டும்,  நாட்படி கடமைகளையும் செய்ய வேண்டும், அதில் ஒரு அன்பும் அர்ப்பணிப்பும், பக்தியும் வேண்டும்.

பின் ஒரு இடத்தில் கண்ணன் சொல்லுவான் - குதிரைகளுக்கு நான் கொள்ளு தருகிறேன், தண்ணீர் வைக்கிறேன் என்று. ஏன் ? அவனிடம் இல்லாத ஞானமா  ? தேரோட்டி என்ற கடமையை கையில் எடுத்து விட்டால் அதை முழுமையாகச் செய்ய வேண்டும்.

அதில் சிக்கல்கள் வரும். முரண்கள் வரும்.  சட்டத்தோடு மோத வேண்டி வரும், அறத்தோடு மோத வேண்டி வரும்,  அன்பும் பாசமும் குறுக்கிடும்.

எது வந்தாலும் கடமையை செய்தே ஆக வேண்டும்.

உங்கள் கடமைகள் என்னென்ன என்று சிந்தியுங்கள். அவற்றில் எத்தனை நீங்கள் மிக ஒழுங்காகச் செய்கிறீர்கள் என்றும் சிந்தியுங்கள்.

மாணவனாய், ஆசிரியனாய், தகப்பனாக, தாயாக, பிள்ளையாக, குடிமகனாக, கணவனாக, மனைவியாக எத்தனை கடமைகள்...

எத்தனை சரியாக செய்தோம், எத்தனை சரியாக செய்யவிலை என்று சிந்தியுங்கள்.

பல சிக்கல்கள் , கடமையை சரியாக செய்யாமல் இருப்பதில் இருந்து தான் தொடங்குகிறது.




No comments:

Post a Comment