Sunday, June 21, 2015

கீதை - 13.10 - உண்மையை அறியும் முறை

கீதை - 13.10 - உண்மையை அறியும் முறை 


मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी ।
विविक्तदेशसेवित्वमरतिर्जनसंसदि ॥१३- १०॥

மயி சாநந்யயோகே³ந ப⁴க்திரவ்யபி⁴சாரிணீ |
விவிக்ததே³ஸ²ஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி³ || 13- 10||

மயி = என்னில்

சா = மேலும்

அநந்ய யோகேந = வேறு எதிலும் செல்லாத யோகம்

 பக்தி = பக்தியுடன்

அவ்யபி⁴சாரிணீ = அ விபசாரிணி

விவிக்ததேஸ = விவிக்த + தேச = தனி இடங்களை

ஸேவித் = நாடி

அரதி = இன்பம் கொள்ளாமல்

ஜந ஸம்ஸதி = மக்கள் கூட்டங்களில்



பிரிவுபடாத யோகத்துடன், என்னிடம் தவறுதல் இல்லாமல் செலுத்தப்படும் பக்தி , தனியிடங்களை நாடுதல் , மக்கள் கூட்டத்தில் இன்பம் இன்மை.

உண்மையை அறிய வேண்டுமா ?

இதுதான் உண்மை என்று யாரும் மற்றவருக்கு சொல்லித் தந்துவிட முடியாது. ஒவ்வொருவரும், தாங்களே கண்டு பிடிக்க வேண்டும்.

எப்படி கண்டு பிடிப்பது ?

அதற்கு வழி சொல்கிறது கீதை.

முதலாவது,  பிரிவுபடாத யோகம்.  யோகம் என்றாலே ஒன்றாக சேர்ப்பது என்றுதான் பொருள்.  பிரிவுபடாத யோகம் என்றால் மனதை ஒன்றிலேயே நிறுத்துதல். மனமும், வாக்கும், செயலும் ஒன்றாக இருத்தல்.

இந்த மூன்றும் ஒன்று சேர்வது மிக மிக கடினம். நாம் நினைத்துக் கொண்டிருப்போம், "நான் நினைபதைத் தானே நான் சொல்கிறேன் , செய்கிறேன் " என்று.  ஆழ்ந்து கவனித்தால் நாம் எவ்வளவு பிரிந்து கிடக்கிறோம் என்று தெரியும்.

மனம் ஒன்றை நினைக்கும்.

நாக்கு ஒன்றைச் சொல்லும்.

உடல் மற்றொன்றைச் செய்யும்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார்  வள்ளலார்.

கையொன்று செய்ய, விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்வாய்? வினை தீர்த்தவனே!

என்பார் பட்டினத்தார்



இதையே

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

என்று பாடினாள் ஆண்டாள்.

மனிதனால் சிந்தித்து
வாயினால் பாடி
கையினால் மலர் தூவி

மனமும், வாக்கும், உடலும் ஒன்று சேர்ந்த யோகத்தில் என்கிறான் கண்ணன்.

சரி, மூன்றையும் ஒன்று சேர்த்து விடலாம். பிரியாத யோகம் கை கூடலாம். அந்த  யோகத்தை  என்ன செய்வது ? யார் மேல் செலுத்துவது ? எதை மனதினால் நினைப்பது ? வாயால் பாடுவது ? கையினால் அர்ச்சிப்பது ?

என் மேல் பிறழாத பக்தியுடன் என்கிறான்.

இங்கே மிக மிக வலிமையான ஒரு வார்த்தையை உபயோகப் படுத்துகிறான் கண்ணன்.

ஒரு விபச்சாரியைப் போல் இல்லாமல் என்று.

ஏன் ?

விபச்சாரி என்ன செய்கிறாள் ?

அவளின் மனமும் உடலும் ஒன்று சேர்வது இல்லை.  மனம் கிடைக்கப் போகும்  பணத்தில் இருக்கிறது. உடல் ஏதோ செய்து கொண்டு இருக்கிறது.

பக்தி அப்படி இருக்கக் கூடாது.

மேலும், ஒரு விபச்சாரி அற்ப பணத்திற்கு தன் விலை மதிக்க முடியாத தன்மானத்தை விற்கிறாள்.

நாம் அவளை விட எந்த விதத்தில் உயர்வு ?

பணத்திற்காக , நம் வாழ் நாள் பூராவும் ஏதோ ஒரு அலுவலகத்தில் , யாருக்கோ,  எதையோ செய்து  கொண்டிருக்கிறோம். செய்யும் வேலையில் எவ்வளவு தூரம்   மனம் ஒன்றிச் செய்கிறோம்.

மனமும் உடலும் ஒன்றாகச் சேராத எந்த வேலையும் ஒரு விபச்சாரியின் வேலைதான்.

"தனி இடத்தை நாடி" - கூட்டம் மனதை சிதற அடிக்கும். மனதை ஒரு நிலை படுத்த  உதவாது. எனவே, தனிமையை நாடி.

"மக்கள் கூட்டத்தில் இன்பம் கொள்ளாமல்" - ஜனக் கூட்டம் நம்மை ஒவ்வொரு பக்கம்  இழுக்கும். பிள்ளைகள் ஒரு பக்கம், மனைவி/கணவன் ஒரு பக்கம்,  நண்பர்கள் ஒரு பக்கம், உறவு ஒரு பக்கம் என்று நம்மை நாலா பக்கங்களிலும்  இழுத்து அலைகழிக்கும்.

உண்மையைத் தேட வேண்டும் என்றால் இந்த அலைவுகளில் இருந்து விடுபடவேண்டும்.

எனவே மக்கள் கூட்டத்தில் இன்பம் கொள்ளாமல்.

அதற்காக காட்டுப்  போ  என்று சொல்லவில்லை.

மக்களை கண்டு  ஓடி விடு என்று சொல்லவில்லை.

மக்களைத் தேடி நீ ஓடாதே. அவர்கள் வந்தால் மகிழாதே. வரவில்லை என்றால்  துக்கம் கொள்ளாதே.

கூட்டத்தில் பெரிய இன்பம் இல்லை என்று சொல்கிறது கீதை.

அதில் இன்பம் என்று நினைத்தால் அதன் பின்னே மனம் போகும். பின் உண்மையை எங்கே  தேடுவது ?

எவ்வளவு ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள் ?

என் சிற்றறிவுக்கு எட்டியது இவ்வளவுதான். இதை ஆழ்ந்து சிந்தித்தால் இன்னும் பலப் பல  அர்த்தங்கள் புரிபடலாம்.

முயன்று பாருங்கள்.

No comments:

Post a Comment