Monday, June 8, 2015

கீதை - 13.5 - இந்த உலகம் எவ்வாறு உருவானது ?

கீதை - 13.5 - இந்த உலகம் எவ்வாறு உருவானது ? 


महाभूतान्यहंकारो बुद्धिरव्यक्तमेव च ।
इन्द्रियाणि दशैकं च पञ्च चेन्द्रियगोचराः ॥१३- ५॥

மஹாபூ⁴தாந்யஹங்காரோ பு³த்³தி⁴ரவ்யக்தமேவ ச |
இந்த்³ரியாணி த³ஸை²கம் ச பஞ்ச சேந்த்³ரியகோ³சரா: || 13- 5||

மஹா =  பெரிய அல்லது அடிப்படையான

பூதாந் = பூதங்கள் (elements )

அஹங்காரோ = "கர்" என்றால் சமஸ்க்ரிதத்தில் செய். கரோ செய்தல், செய்பவன். அஹங்காரோ செய்யும் நான். அல்லது, நான் என்ற எண்ணம். 

புத்தி = அறிவு 

அவ்யக்தம் = தெரியாத, புலனாகத, வெளிப்படாத 

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

இந்த்ரியாணி = புலன்கள்

தஸ = பத்து

ஏகம் = ஒன்று

ச = மேலும்

பஞ்ச = ஐந்து

சே= மேலும்

இந்த்³ரியகோ³சரா: = இந்திரியங்கள் செயல் படும் இடம். கர் என்றால் செய்தல். கோகர செய்யும் இடம்.

மகா பூதங்கள், அகங்காரம், புத்தி, அனுபவம் அல்லது வாசனை (அவ்யக்தம்), பதினோரு புலன்கள் , புலன்கள் வெளிப்படும் இடங்கள் ஐந்து. 

 நான்  என்பது என்ன ? நான் யார் ? நான் எவ்வாறு உருவாகிறேன் ? என்பது பற்றி மிக விரிவாக கண்ணன் சொல்ல ஆரம்பிக்கிறான்.

அறியப்படும் பொருள், அறியும் நான், அறியும் அறிவு இந்த மூன்றின் தன்மை பற்றி சொல்லத் தொடங்குகிறான்.

முதலில் க்ஷேத்ரம் அல்லது அறியப்படும் புற உலகம் எவ்வாறு உருவானது என்று விளக்குகிறான்.

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், உலகம் நமக்கு வெளியே தனியே இயங்குகிறது என்று. நாம் இல்லாவிட்டாலும் இந்த உலகம் இருக்கும் என்று. எனக்கு முன்னால் இந்த உலகம் இருந்தது. எனக்குப் பிறகும் இந்த உலகம் இருக்கும் என்று நாம் நினைக்கிறோம்.

அப்படி அல்ல. இந்த உலகமே நம்மை வைத்துத்தான் என்று என்கிறான் கண்ணன். அறியும் நான் இல்லை என்றால் இந்த உலகம் இல்லை.

இந்த உலகம் என்பது வெளியில் உள்ள பொருள்களும், மனிதர்களும் நம் அனுபவமும் சேர்ந்த ஒரு கலவைதான் இந்த உலகம்.

எப்படி என்று பார்ப்போம்.

க்ஷேத்ரம் அல்லது புற உலகம் எதனால் ஆனது ?

மகா பூதங்கள் = நீர், நெருப்பு, ஆகாயம், பூமி, வெளி (அல்லது ஆகாயம்) என்ற இந்த ஐந்து அடிப்படையான பொருள்களால் ஆனது. இவையும், இவற்றின் கலவையுமே இந்த உலகம். அது மட்டும் அல்ல

அஹங்காரம் = நான். இந்த உலகம் உருவாக "நான்" என்ற நானும் ஒரு காரணி.

புத்தி = எனது அறிவு

அவ்யகதம் = வெளிப்படாத, புலனாகாத ஒன்று. எது வெளிப்படாத, புலனாகாத ஒன்று ? நம் அனுபவம். இதை வாசனை என்று சொல்லுகிறார்கள். நமது சேர்த்து வைக்கப்பட்ட அனுவமும் இந்த உலகை உருவாக்க காரணமாக இருக்கிறது.

அழாகான மலைச் சாரல். பச்சை பசேல் என்று எங்கும் பசுமை. தூரத்தில் மேகம் கீழிறங்கி மலையை முத்தமிட்டுச் செல்வதை காண முடிகிறது. குளிர் எலும்பு வரை எட்டிப் பார்க்கிறது. சிலிர்கிறோம். அந்த மேகம் நம் அடி வயிற்றில் மிதப்பதைப் போல உணர்கிறோம். ஆனால், அந்த ஊரிலேயே இருக்கும் ஒருவன், அதைப் பற்றி ஒன்றும் கவலைப் படாமல் தன் வேலை, பிரச்சனை என்று ஓடிக் கொண்டிருக்கிறான். ஒரே வானம், ஒரே மலை, ஒரே மேகம் நமக்கு சிலிர்கிறது அவனுக்கு ஒன்றுமே செய்வது இல்லை. ஏன் ? அனுபவம். நாமே அந்த ஊரில் சில வருடங்கள் தங்கி இருந்தால் நமக்கும் சலிப்பு ஏற்படத்தான் செய்யும்.

இரதி போல இருந்த இராட்சசி போன்ற மனைவியாகத் தெரியக் காரணம் அனுபவம். எது உண்மை ? இரதியா ? இராட்சசியா ? இரண்டும்தான். உலகம் நம் அனுபவத்தால் மாறுபடுகிறது.

புலன்கள் = புலன்கள் உலகை மாற்றுகின்றன. பஞ்சு மெத்தை போன்ற ஆசனம் , மூல வியாதி நெருப்பாகத் தெரிகிறது. நம் புலன்கள் உலகை நமக்குத் தெரிவிகின்றன. புலன்களைத் தாண்டி நம்மால் உலகை புரிந்து கொள்ள முடியாது. கண் இல்லாதவனுக்கு நிறம் என்ற ஒன்றே இல்லை. அவன் உலகில் நிறம் இல்லை. நமக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன. இவற்றைத் தாண்டி நமக்கு ஒன்றும் தெரியாது. குருடனுக்கு நான்கு புலன்கள் தான் இருக்கின்றன. ஆறாவது புலன் என்று ஒன்று இருந்தால் இந்த உலகம் நமக்கு வேறு மாதிரி இருக்கும். ஒரு வேளை வேற்று கிரகத்தில்  இருந்து ஒரு ஜீவராசி பத்து புலன்களோடு வந்தால், அந்த ஜீவராசி நம் உலகை வேறு மாதிரி அறியும். அது எப்படி அறிகிறது என்று நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. நாம் எப்படி  நிறங்களை அறிந்து கொள்கிறோம் என்று குருடனால் புரிந்து கொள்ள முடியாதோ அது போல.  எனவே, புலன்களைத் தாண்டி உலகம் இல்லை.

பத்து - அது என்ன பத்து - புலன்கள் ஐந்து, அவை அறியும் அறிவு பத்து.
கண்
காது
மூக்கு
நாக்கு
தோல்

என்ற ஐந்து புலன்கள்.

அவை அறியும்

வடிவம்
ஒலி
மணம்
சுவை
தொடு உணர்ச்சி

என்ற ஐந்தும் சேர்ந்து பத்து.

அது அல்லாமல்

கண், காது , மூக்கு, நாக்கு, தோல், கால், கை, சப்தம்  பிறப்புறுப்பு, ஆசன உறுப்பு என்று பத்து கணக்கு சொல்லுவார்கள்.

ஏகம் = ஒன்று. ஒன்று என்பது மனம். புலன்கள் செய்திகளை அனுப்பினாலும் அவற்றை அறிவு அறிந்து சொன்னாலும் அவற்றை அனுபவிப்பது மனம்தான்.

இவை அனைத்தும் சேர்ந்ததுதான் க்ஷேத்ரம் என்ற இந்த உலகம்.

இது மட்டும் அல்ல

மேலும் கண்ணன் சொல்கிறான்....

No comments:

Post a Comment