Monday, June 15, 2015

கீதை - 13.9 - அதீதப் பற்றை விடு

கீதை - 13.9 - அதீதப் பற்றை விடு

असक्तिरनभिष्वङ्गः पुत्रदारगृहादिषु ।
नित्यं च समचित्तत्वमिष्टानिष्टोपपत्तिषु ॥१३- ९॥

அஸக்திரநபி⁴ஷ்வங்க³: புத்ரதா³ரக்³ருஹாதி³ஷு |
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு || 13- 9||


அஸக்தி = பற்று இல்லாமல்


அநபி⁴ஷ்வங்க³ = தன்னுடைது என்று கருதாமல்

புத்ர = புதல்வர்களையும்

தா³ர = மனைவியையும்

க்ருஹாதி³ஷு  = வீட்டினையும்

நித்யம் = எப்போதும்

 ச = மேலும்
 ஸமசித்தத்ம் = சம சித்தத்துடன்

இஷ்டா = விரும்பியது

நிஷ்டோப = விரும்பாதது

பத்திஷு = அடையும்போது

பற்றுதல் இன்றி, 
மகனையும் மனைவியையும், வீட்டையும் தன்னுடையது என்று கருதாமல் 
விரும்பியதோ, விரும்பாததோ எது வந்தாலும் சம சித்தத்துடன்.

இன்பம் வேண்டும் என்று அனைத்து உயிர்களும் விரும்புகின்றன.

ஆனாலும் துன்பம் கூடவே வருகிறது .

துன்பத்தை யார் கேட்டார்கள்?

யாரும் கேட்காமல் இருக்கும்போது துன்பம் ஏன் வருகிறது. எல்லோரும் கேட்கும்போதும்  இன்பம் ஏன் வர மறுக்கிறது. அப்படியே வந்தாலும் கொஞ்ச நாள் இருந்து விட்டு ஓடி விடுகிறதே ஏன் ?

துன்பத்திற்கு காரணம் என்ன ?

வெளியில் உள்ள பொருள்கள், மனிதர்கள் ...இவைகள் தானே துன்பத்திற்கு காரணம் ? நாமே நமக்கு துன்பம் செய்து கொள்ள மாட்டோம் அல்லவா ? துன்பம் வெளியில் இருந்து வருகிறது என்று அறிய முடிகிறது.

எதெது துன்பம் தரும் ?

ஒவ்வொருத்தருக்கு , ஒவ்வொன்று துன்பம் தரும்.

சற்று ஆழ்ந்து யோசித்தால் துன்பம் அந்த பொருள்களிலோ , மனிதர்களிலோ அல்ல, அவற்றோடு நமக்கு இருக்கும் தொடர்பால் துன்பம் வருகிறது என்று புரியும்.

எப்படி என்று பார்ப்போம்....

இனிப்பு துன்பமா ? லட்டு துன்பமா ? இல்லை. நாம் அதை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது , அது துன்பம் தருகிறது. அளவோடு இருந்தால் துன்பம் இல்லை.  எப்போது இனிப்பை உண்ணக் கூடாதோ, அப்போது அதை உண்டால் துன்பம் வருகிறது.

மனைவி, மக்கள், வீடு, வாசல் - இவற்றோடு அளவுக்கு அதிகமான பற்று இருந்தால் துன்பம் வருகிறது.

பற்றே வேண்டாம் என்று சொல்லவில்லை. 

அநபிஷ்வங்க என்றால் அளவுக்கு அதிகமான பற்று.

நமக்கு வெளியில் இருப்பவை அவைகளுக்கு என்று ஆசா பாசங்கள், விருப்பு வெறுப்பு, என்பவை கொண்டிருக்கும். நாம் எவ்வளவுதான் முயன்றாலும் அவை நூற்றுக்கு நூறு நம்மோடு ஒத்து போகாது.

நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறார்களே
என்னை புரிந்து கொள்ளவில்லையே
எனக்கு மரியாதை இல்லையே

என்று வருந்துவதில் பலன் இல்லை.

அவர்கள் நம்மில் இருந்து தனிப்பட்டவர்கள். அவர்கள் அல்லது அவைகள் மேல் அளவுக்கு அதிகமான பற்று  வைப்பது துன்பம் தரும்.

இவற்றின் மேல் மிதமான பற்று ஒரு க்ஷேத்ரஞனுக்கு தேவை.

இவற்றின் மேல் அளவு கடந்த பற்று இருந்தால்  உண்மை (க்ஷேத்ரம்) எது என்று அறிய முடியாது .

ஒன்று, இதற்கே நேரம் சரியாகப் போய் விடும்.

இரண்டாவது, இந்த பற்று அறிவை மயக்கும்.

விட்டு விடுதலையாகி நிற்போம், அந்த சிட்டுக் குருவியைப் போல....

பற்று குறையும்போது அறிவில் தெளிவு பிறக்கும்.

சரி, அறிவு தெளிந்த பின் என்ன செய்வது ?

அடுத்து அதைப் பற்றி கண்ணன் சொல்கிறான்.






No comments:

Post a Comment