Monday, June 12, 2017

கீதை - 3.18 - காரியமும் பலனும்

கீதை - 3.18 - காரியமும் பலனும் 


नैव तस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन।
न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रयः॥१८॥

நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஸ்சந|
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்தவ்யபாஸ்ரய: ||3-18||


ந = இல்லை

ஏவ = நிச்சயமாக

தஸ்ய = அவனுடைய

க்ரெத்ன = செயல்களில்

அர்த்த = பலன், செல்வம், நோக்கம்

ந = இல்லை

அ க்ரெத்ன = செயலில்லாமல் இருப்பதிலும்

இஹ = இங்கே

கஸ்சந = எதிலும்

ந = இல்லை

அஸ்ய  = அவன்

ஸர்வபூதேஷு  = அனைத்திலும்

கஸ் சித் = எதிலும்

அர்தவ்யபாஸ்ரய: = பலன்களில் தஞ்சம் புகுவது இல்லை



அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை;
செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை; 
எவ்விதப் பயனையுங் கருதி அவன் எதையும் சார்ந்து நிற்பதில்லை.


கீதையில் மிகவும் குழுப்பவது இந்த பலனின்றி செயலை செய்வது என்ற இந்த சித்தாந்தம் தான். புரிகிற மாதிரி இருக்கும். புரியாத மாதிரி இருக்கும். புரிந்தாலும், இதெல்லாம் நடை முறைக்கு சரி வருமா என்ற சந்தேகம் வரும்.


அந்த சந்தேகங்களும், குழப்பங்களும் ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும்.

முதற் காரணம் , துணை காரணம் என்ற இரண்டு காரணங்கள்.

அது என்ன முதற் காரணம், துணை காரணம் ?

பள்ளியில் சென்று படிக்கிறோம்.

இதில் எது முதல் காரணம் ? துணை காரணம் ?

படித்து பரிட்சையில் நல்ல மதிப்பெண் பெற்று தேற   வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பது துணை காரணம். நிறைய சம்பாதிக்க வேண்டும், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது முதல் காரணம் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், வள்ளுவர் என்ன சொல்கிறார் தெரியுமா , படிப்பதன் முதல் காரணம் இறைவனை தொழுவது என்கிறார். பரீட்சை, மதிப்பெண், வேலை, சம்பளம் எல்லாம் துணைக் காரணங்கள்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

படிப்பதன் பயன் இறைவனை தொழுவது என்கிறார்.

 அதை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பதல்ல விஷயம் இங்கு.  வள்ளுவர் போன்ற பேராசானின் கருத்து பெருவாரியான மக்களின் கருத்தில் இருந்து வேறுபட்டு நிற்கிறது.

நாம் ஏன் வேலை செய்கிறோம் ? ஊதியம் வேண்டும், அதன் மூலம் வாழ்வில் இன்பமாக இருக்க வேண்டும் என்று  நினைக்கிறோம்.

ஊதியம் என்பது பொருளாக இருக்க வேண்டும் என்று இல்லை. புகழ், பதவி,அதிகாரம், செல்வாக்கு, நட்பு,  என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒரு பலனை எதிர்பார்த்து செய்கிறோம்.

பலன் வேண்டும் என்றால், அதை யாராவது தர வேண்டும். அது தானாகவே வந்து விடுவது அல்ல.

அப்படி யாரோ ஒருவர் நமக்குத் தர வேண்டும் என்றால், அவர் நம்மை விட உயர்ந்த இடத்தில்  இருக்க வேண்டும். அவர் தயவு நமக்கு வேண்டும். அவரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அவர் கோப படும்படி நடக்கக் கூடாது. அவரிடம் ஒரு பயம் வேண்டும்.

அவர் அந்த பலனை தராவிட்டால்  அவர் மீது கோபம் வரும்.

வேறு யாராவது அந்த பலனை தட்டிப் பறித்துக் கொள்வார்களோ என்று பயம் வரும்.  

இப்படி நம் சுதந்திரத்தை இழந்து, பயந்து, தயங்கி, மற்றவர்களுக்கு கை கட்டி, பல்லைக் காட்டி வாழும் வாழ்வில் என்ன இன்பம் இருக்க முடியும் ?

மாறாக, என் வேலை இது. இதை நான் செம்மையாகச் செய்வேன். என்னை விட இதை வேறு யாரும் சிறப்பாகச் செய்ய முடியாது.  இந்த வேலையை செய்வதே ஒரு இன்பம். அதுவே அதன் பலன் என்று நினைத்து ஒரு காரியத்தை செய்தால், யாரையும் நாடி நிற்க வேண்டியது இல்லை.

அப்படி செய்யப்பட்ட வேலைக்கு பலன் தானே வரும்.

ஒரு மாணவன் நிதமும் ஒழுங்காக படிக்கிறான், கொடுத்த பயிற்சி எல்லாம் செய்கிறான் என்றால் கட்டாயம் அவனுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

பலனுக்காக ஒரு வேலையை செய்யவே முடியாது. நன்றாக வேலை செய்தால் பலன் கிடைக்கும்.

ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். எனக்கு கோப்பை வேண்டும், கோப்பை வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தால் கோப்பை கிடைக்காது. மாறாக, அதை மறந்து  விட்டு,தினமும் ஒழுங்காக பயிற்சி செய்தால் அவருடைய திறமை கூடி, மெருகேறி கோப்பை கிடைக்கலாம்.

எனவே,  வேலை செய்வதன் முதற் காரணம் அந்த வேலையை செம்மையாகச் செய்வது. துணைக் காரணம் அதன் பலன்.

இப்போது ஸ்லோகத்தை கவனிப்போம்.


அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை;
செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை;
எவ்விதப் பயனையுங் கருதி அவன் எதையும் சார்ந்து நிற்பதில்லை.

அவன் செய்கை செய்வது பலனை நோக்கி அல்ல. பலன் வரும் என்பது அவனுக்குத் தெரியும். சரி, பலன் நோக்கி அல்ல என்றால் அதற்கு ஒன்றும் செய்யாமலேயே இருந்து விடலாம் அல்லவா ? அப்படி இருந்தாலும் அவனுக்கு ஒன்றும் பயன் இல்லை. அவன் , தன் வேலையை , எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்கிறான். 

பலனில் மனம் போகாவிட்டால், காரியத்தில் போகும். காரியம் சிறக்கும். சிறந்த காரியம் அதற்குரிய பலனை கட்டாயம் கொண்டு வந்து சேர்க்கும். எனவே, பலனை பற்றி கவலைப் படுவதை விடுங்கள். நல்லதை, நன்றாகச் செய்யுங்கள். 

நல்லதே நடக்கும். 

No comments:

Post a Comment