Sunday, June 25, 2017

கீதை - 16.11 - உண்மையே இவ்வளவுதான்

கீதை - 16.11 - உண்மையே இவ்வளவுதான் 



चिन्तामपरिमेयां च प्रलयान्तामुपाश्रिताः ।
कामोपभोगपरमा एतावदिति निश्चिताः ॥१६- ११॥

சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஸ்ரிதா: |
காமோபபோகபரமா ஏதாவதிதி நிஸ்சிதா: || 16- 11||

சிந்தாமபரிமேயாம் = சித்தம் + அபரிமேயம் =  அளவற்ற சிந்தனைகள்

ச  = மேலும்

ப்ரலயாந்தம் = பிரளய + அந்தம் = பிரளய காலம் வரை 

உபாஸ்ரிதா: |= அடைக்கலம் கொண்டு

காமோபபோக பரமா = ஆசைகளில் திளைப்பது மட்டுமே பிரதானம் என்று

ஏதாவதிதி = இதுவே முடிவென்று

நிஸ்சிதா = நிச்சயித்துக் கொண்டு

பிரளய காலம் வரை, ஆசைகளில் மூழ்கி அவற்றை அனுபவித்தே வாழ்க்கை, அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நிச்சயமாக அவர்கள் (அசுர குணம் கொண்டவர்கள்) நம்பி, அதன்படி செயல் படுகிறார்கள். 

வாழ்க்கை என்பது என்ன ?

ஆசைப் படுவதும், அவற்றை அனுபவிப்பதும் மட்டும் தானா ? அதற்கு மேல் ஏதாவது ஒன்று இருக்கிறதா ?

ஒவ்வொரு கால கட்டத்திலும், ஏதோ ஒன்றின் மேல் ஆசைப் படுகிறோம். அதை அடைய முயற்சி செய்கிறோம். பல சமயம் வெற்றி பெறுகிறோம். சில சமயம் வேண்டியது கிடைப்பது இல்லை.

ஒரு ஆசை நிறைவேறிய பின், அடுத்த ஆசை முளைக்கிறது.

வாழ்க்கை முழுவதுமே ஒரு ஆசையில் இருந்து இன்னொன்றுக்கு தாவுவதாகவே இருக்கிறது.

எந்நேரமும் ஏதோ ஒரு ஆசையால் உந்தப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.

அது தான் வாழ்க்கை என்று நினைக்கிறோம்.

இது எப்போதும் முடியவே முடியாது. பிரளய காலம் வரை , இந்த உலகம் முடியும் வரை இது இப்படித்தான் இருக்கும். ஆசைகளை அனுபவித்து முடிக்க முடியாது.

ஒன்றில் இருந்து ஒன்றாக வந்து கொண்டே இருக்கும்.

இவற்றை துரத்திக் கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையா ?

சிந்திக்க வேண்டும்.

அறிவற்ற மூடர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

ஆசைப்படுவதும், அவற்றை நிறைவேற்ற பாடுபடுவதும், ஒரு ஆசை நிறைவேறிய பின் அடுத்த ஆசைக்கு முயற்சி செய்வதும்...இதுவே வாழ்க்கை என்று நினைக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் தாண்டி , ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவர்கள் நம்புவது இல்லை.

நாம் எப்படியோ ?

No comments:

Post a Comment