Saturday, June 24, 2017

கீதை - 16.10 - அரக்க குணங்கள்

கீதை - 16.10 - அரக்க குணங்கள் 


काममाश्रित्य दुष्पूरं दम्भमानमदान्विताः ।
मोहाद्‌गृहीत्वासद्ग्राहान्प्रवर्तन्तेऽशुचिव्रताः ॥१६- १०॥

காமமாஸ்ரித்ய துஷ்பூரம் தம்பமாநமதாந்விதா: |
மோஹாத் க்ருஹீத்வாஸத்க்ராஹாந் ப்ரவர்தந்தே ஸுசிவ்ரதா: || 16- 10||


காமம் = ஆசை

அஸ்ரித்ய = வயப்பட்டு

துஷ்பூரம் = நிறைவேறாமல்

தம்ப = ஏமாற்றி, டாம்பீகமாக

மாந = தவறான பெருமையுடன்

மதாந்விதா:=  சேர்த்துக் கொண்டு

மோஹாத் = மயக்கம் கொண்டு

க்ருஹீத்வா = அவற்றை அடைந்த பின் 

அஸத் = சத்யம் அல்லாத

கிரஹாந் = ஏற்று

ப்ரவர்தந்தே =செய்ய ஆரம்பிக்கிறார்கள்

அஸுசி வ்ரதா:  = சுத்தம் இல்லாத அந்த செயல்களை (விரதம்) || 16- 10||


நிறைவேற முடியாத ஆசைகளுடன் , படோபடமும் (டாம்பீகம்), கர்வம், மயக்கம் நிறைந்தவராய் , குழப்பத்தில் பொய்யான கொள்கைகளை கொண்டு சுத்தம் இல்லாத முடிவுகளுடன் அவர்கள் செயல் படுகிறார்கள்.

அரக்க குணம் கொண்டவர்களையும் , நல்லவர்களையும் கீதை இனம் காட்டுகிறது.

எதற்கு ? அதை தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் ?

அரக்கர்கள் எப்படி இருந்தால் நமக்கு என்ன ?

அரக்கர்கள் என்றால் எதோ காட்டில் , கரிய பெரிய உருவத்துடன், கோரமான பற்களுடன் இருப்பார்கள் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.

நாம் தான் அரக்கர்கள். நாம் தான் தேவர்களும் கூட.

அரக்க குணமும், தெய்வீக குணமும் நமக்குள்ளே இருக்கின்றன.

இந்த குணம் மேலோங்கி நிற்கிறதோ, அதுவாக நாம் ஆகிறோம்.

அரக்க குணம் மேலோங்கி நின்றால், அரக்கனாக மாறுகிறோம்.

தெய்வ குணம் மேலோங்கி நின்றால், தெய்வமாக மாறுகிறோம்.

குணம் நாடி, குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் என்பார் வள்ளுவர்.

குணமும், குற்றமும் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.  இரண்டும் இல்லாத ஆள் யாருமே இல்லை.


சரி, இதில் எது அரக்க குணம் (கெட்ட குணம் ) என்று எப்படி கண்டு கொள்வது ? கண்டு கொண்டால், அவற்றை குறைக்க முயலலாம்.

அதற்குத்தான் கீதை உதவி கரம் நீட்டுகிறது.

அரக்க குணம் எவை என்று பட்டியல் இடுகிறது.

நிறைவேற முடியாத அல்லது நிறைவேற கூடாத ஆசைகள் - ஆசை படுவது தவறல்ல. ஆசைகளின் எல்லைகளை அறிய வேண்டும். எல்லை தாண்டும் போது ஆசை பேராசையாகி, தவறான ஆசையாக மாறி விடுகிறது.

ரம்பை, மேனகை, திலோத்தமை என்ற தேவர் உலக பெண்கள் எல்லாம் இராவணனின் காலடியில் கிடந்தார்கள். அவர்களை விட்டு விட்டு சீதையை விரும்பினான் இராவணன். அது தவறான ஆசை. அது அரக்க குணம்.

படோபடம் , டாம்பீகம் - என்னிடம் எல்லாம் இருக்கிறது என்ற தற்பெருமை. அடக்கம் இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொண்டு செல்வது.

கர்வம் = என்னை விட்டால் யார், நான் தான் உயர்ந்தவன் , என்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை, என்னால் முடியாது எதுவும் இல்லை என்ற கர்வம்.

மயக்கம் = எது சரி , எது தவறு என்று அறியாமல் குழம்புவது. நல்லது / கெட்டது , சரி/தவறு என்று தெரியாமல் காரியங்களை செய்வது.

மற்றவர்கள் சொன்னாலும் மண்டையில் ஏறாது.

உண்மை இல்லாதவற்றை உண்மை என்று நினைத்து பின் பற்றுவார்கள். சத்தியத்தை விட்டு விட்டு அசத்தியத்தின் பின்னால் போவார்கள். தவறான வழியில் போவார்கள். சூது, களவு, முயற்சி இன்மை, சோம்பல் போன்ற வழிகளில் செல்வார்கள்.

இவை அரக்கர்களின் குணம்.

நம்மிடமும் கொஞ்சம் இவை எல்லாம் இருக்கலாம்.

இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால், அவற்றை மாற்ற முயற்சி செய்யுங்கள். அரக்க குணம் தேய தேய தெய்வீக குணங்கள் நிறையும்.

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.

என்பார் மணிவாசகர்.

நெறியல்லாத நெறியில் செல்லக் கூடாது.


தமிழ் கிழவி இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போனாள்

வழியே ஏகுக

என்று.

கெட்ட குணங்களை விடுத்து, நல்ல குணங்களை கொண்டு, நல்ல வழியில் செல்வோம். 

No comments:

Post a Comment