Wednesday, July 13, 2016

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 7

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 7


ஸ்லோகம் 15: அனைவரின் இதயத்திலும் (உள்ளேயும்) நான் இருக்கிறேன். நினைப்பும், ஞானமும், மறதியும் என்னிடம் இருந்து உருவாகின்றன. வேதங்களில் அறியப்படும் பொருள் நான். வேதத்தை உருவாகியவன் நான். வேதத்தை அறிபவன்  நான்.

நாம் சிறு வயதில் சிலவற்றை அறிந்து கொள்கிறோம். நமக்குச் சொல்லப் படுகிறது. கடவுள், ஆசாரியன், சொர்கம், நரகம், பாவம், புண்ணியம், மறு பிறப்பு, ஆத்மா, கர்ம வினை என்றெல்லாம் ஏதேதோ படிக்கிறோம், யார் யாரோ சொன்னதை கேட்கிறோம். சிறிது காலத்தில் , அது தான் உண்மை , அதைத் தவிர வேறு எதுவும் உண்மை இல்லை என்று சாதிக்கத் தலைப் படுகிறோம். நம்மை போல மற்றவர்களும் இதே போல கேட்டு வளர்ந்து இருக்கலாம் அல்லவா ? அவர்கள் கேட்ட, படித்த உண்மைகள் வேறாக இருக்கலாம் அல்லவா. நாம் அறிந்தது மட்டும் தான் உண்மை என்று எப்படிச் சொல்ல முடியும் ?

மேலும் மேலும் புதிதாக கற்க வேண்டும் என்றால் , பழையனவற்றை மறக்க வேண்டும். நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று அடம் பிடிக்கக் கூடாது. நினைப்பும் , ஞானமும் எப்படி உண்மையை அறிய உதவுகிறதோ அதே போல் மறதியும் தேவை.

அது மட்டும் அல்ல, உண்மை என்பது ஏதோ வேதங்களில், பக்தி பாடல்களில், உபன்யாசங்களில் இருப்பது அல்ல. அப்படி இருந்தால் எல்லோரும்  அதை கண்டு கொள்ள முடியுமே. உண்மை என்பது தனி மனித அனுபவம்.

வேதமும் நானே. வேதத்தை உருவாக்கியவனும் நானே. வேதத்தில் சொல்லப் பட்டவைகளும் நானே.

எல்லாம் நமக்குள் இருக்கிறது. தனி மனித அனுபவமாய். மற்றவர்களின்  அனுபவம் ஒரு போதும் உங்கள் அனுபவமாக முடியாது.

உண்மையை கண்டு அறியும் வழி, வழி அல்லாத வழி. இது வரை யாரும் போகாத வழி. நீங்கள் மட்டுமே போக முடிந்த வழி. தனியாகத்தான் போக வேண்டும்.

இரவல் ஞானங்களை திருப்பி கொடுத்து விடுங்கள்.

உங்கள் ஞானத்தை நீங்களே கண்டு பிடியுங்கள்.



ஸ்லோகம் 16: உலகம் அழியக் கூடியது மற்றும் அழிவில்லாதது என்ற இரண்டு புருஷர்களால் ஆனது. அழியக்கூடியவற்றில் இருந்து விடுதலை பெற்றவனே  அழிவற்றவன் என்று சொல்லப்  படுகிறான்.


 நரை,திரை , மூப்பு என்று வந்தாலும் அவற்றிற்கு கீழே உள்ள நீங்கள்  என்றும் நீங்கள் தான். மாறாதவர். உடல் மாறும். மனம் மாறும். தோற்றம் மாறும். அனைத்தும் மாறினாலும், மாறாத அடிப்படைதான்  நீங்கள். மாறுகின்றவற்றை விட்டு , மாறாத , நிரந்தரமானவற்றை அறிய முற்படுங்கள். 

பெற்றோர், உடன் பிறப்பு, கணவன் , மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள், பெற்ற அறிவு, சேர்த்த செல்வம், சேமித்த ஞாபகங்கள் எல்லாம் மாறும். 

அப்படி என்றால் மாறாதது எது ? ஒன்று மாறுகிறது என்றால், மாறாதது ஒன்று இருக்க வேண்டும். அலை மாறும், கடல் மாறாதது. 

மாறாத ஒன்று எது என்று சிந்தியுங்கள். 

ஸ்லோகம் 17: இவற்றில் இருந்து வேறு பட்டவன் உத்தம புருஷன். மூன்று உலகங்களிலும் அவனே நிரந்தரமானவன், உயர்ந்தவன், பரமாத்மா.

நாம் நம்மை மற்றவர்களை அல்லது மற்றவற்றை வைத்துதான் இனம் காண்கிறோம். இன்னாரின் பிள்ளை, இதை இதை படித்தவன், இங்கே வேலை செய்பவன், இன்னாரின் கணவன்/மனைவி என்று மற்றவற்றின் மூலம் தான் நாம் நம்மை அடையாளம் காண்கிறோம். இப்படி வேறு ஒன்றின் துணை இல்லாமால் என்னை நான் சொல்வது என்றால்  எப்படி சொல்லுவது ? நான் யார் என்று எப்படி சொல்லுவது. இன்ன மதம், இன்ன ஜாதி, இன்ன நாடு, மொழி, என்று பிற ஒன்றின் துணை இல்லாமல் சொல்வது என்றால் நான் என்னை எப்படி சொல்லுவேன் ? அப்படி மற்றவற்றில் இருந்து வேறுபட்டு தனித்து நிற்பவனே உத்தம புருஷன். அவனே நிரந்தரமானவன். உயர்ந்தவனா. பரமாத்மா. 

ஸ்லோகம் 18: நான் மாற்றத்தையும், மாறாதவற்றையும் கடந்து நிற்பதால், இந்த உலகில், வேதங்களில் நான் புருஷோத்தமன் என்று கூறப் படுகிறேன். 

மற்றவற்றின் மூலம் என்னை நான் இனம் கண்டு சொல்லுவது என்றால், மற்றவை மாறும் போது, நானும் மாறுவேன்.  வேறு எதன் துணையும் இல்லாமல் , என்னை நான் கண்டு சொல்ல  முடியும் என்றால் அந்த நானே வேதங்களில் சொல்லப் படும் புருஷோத்தமன். 

முயன்று பாருங்கள் வேறு இதன் துணையும் இல்லாமல் உங்களை நீங்கள் எப்படி இனம் காண  முடியும் என்று ?

(தொடரும்....)

http://bhagavatgita.blogspot.in/2016/07/15-7.html









No comments:

Post a Comment