Wednesday, July 13, 2016

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 6

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 6


ஸ்லோகம் 10: "அவன் இருக்கும் போதும், புறப்படும் போதும், குணங்களை சார்ந்து இருக்கும் போதும் அவனை மூடர்கள் காண்பது இல்லை. ஞான த்ரிஷுடி (ஞானக் கண் ) உள்ளவர்களே அவனக் காண்கிறார்கள். "

இன்பமும் துன்பமும் வெளியே இல்லை. இன்பமும் துன்பமும் நமக்குள் இருக்கிறது. அதை மூடர்கள் காண்பது இல்லை. அதை அறிய அறிவு வேண்டும். ஞானம் வேண்டும். இன்பம் வெளியே எங்கோ இருக்கிறது என்றால் அதை எல்லோரும் போய் அடைந்து விடலாமே. துன்பம் வெளியே இருக்கிறது என்றால் அதை விட்டு விலகி விடலாமே. ஏன் முடிவது இல்லை ? ஏன் என்றால் இன்பமும் துன்பமும் நமக்குள்ளே. சிந்தித்துப் பாருங்கள்.

ஸ்லோகம் 11: முயற்சியுடைய யோகிகள் அவனை தங்களுக்குள்ளே காண்கிறார்கள். முயற்சி செய்தாலும், தயாராக இல்லாதவர்கள் அவனை காண மாட்டார்கள். 

யோகிகள் அனைத்தும் தனக்குள்ளே என்று அறிவார்கள். மற்றவர்கள் எவ்வளவுதான் படித்தாலும், கேட்டாலும் அதை அறிய மாட்டார்கள். ஏன் ? ஏன் என்றால் அவர்கள் அறிந்து கொள்ள தயாராக இல்லை. எவ்வளவு நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னாலும் "அதெல்லாம் சரி,  ஆனால் நடை முறைக்கு சரியாக வராது " என்று ஒதுக்கித்த  தள்ளி விட்டு மீண்டும் உண்மையைத் தேடி பயணத்தைக் தொடர்வார்கள். உண்மை கிடைத்தால், "இது சரி தான், ஆனால், நடைமுறைக்கு ஒத்து வராது" என்று தள்ளி விடுவார்கள். அவர்கள் உண்மையை அறியத்  தயாராக இல்லை.

மனிதனுக்கு மூன்று பசி உண்டு.

வயிற்றுப் பசி - உணவு தேடும் பசி.

உடற் பசி - காமம்.

அறிவுப் பசி - ஞானம் தேடும் தவிப்பு. பல பேருக்கு இது வருவது இல்லை. பசி என்றால் , அது தீரும் வரை ஓய்வு ஒழிச்சல் இருக்காது. வேறு எதுவும்  பிரதானமாய் படாது.

சாம்ராஜ்யத்தை விட்டு விட்டு ஓடினான் கௌதம சித்தார்த்தன்.

அத்தனை செல்வத்தையும் உதறிவிட்டு விட்டுப் போனார் பட்டினத்தார்.

அது அறிவுப் பசி.

ஸ்லோகம் 12: சூரியன், சந்திரன், அக்னி இந்த மூன்றில் உள்ள ஒளியும் என்னுடையது என்றே உணர்.


ஆயிரம் தான் புத்தகங்கள் இருந்தாலும், எவ்வளவு பேச்சுகளை கேட்டாலும், அறிவின் ஒளி உள்ளிருந்துதான் வர வேண்டும். வெளியில் உள்ளவை வெளிச்சம் போட்டுக் காட்டலாம். ஆனால், தெளிவு என்பது , ஞானம் என்பது தனக்குள் இருந்து வர வேண்டும். படித்து அறிய முடியாது. கேட்டு தெரிந்து கொள்ள முடியாது. உள்ளுக்குளே தேட வேண்டும். 

ஸ்லோகம் 13: நான் பூமியில் புகுந்து , உயிர்களை என் சக்தியால் தாங்குகிறேன். ரச வடிவான  சோம பாணமாகி மருந்தாக அவைகளை காக்கிறேன்.

உணவு தெய்வீகமானது. உணவு என்பது உயிரையும் உடலையும் சேர்த்து வைக்கும் அமிர்தம். உணவை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கண்ட நேரத்தில் உண்பது, அளவுக்கு அதிகமாக உண்பது, தேவை இல்லாமல் உண்பது என்பதெல்லாம் கூடாது. நமது உள் உணர்வுகளை கூர்மை படுத்தி நம்மை ஞான மார்கத்தில் இட்டுச் செல்ல உணவு கட்டுப்பாடு மிக மிக  அவசியம். உணவு ஞானத்தைத் தூண்டும். உணவு, நோயை போக்கி உயிரை காக்கும். 

ஸ்லோகம் 14: நான் வைசுவாநரனாய், உயிர்களில் உடலை சார்ந்து இருக்கிறேன். ; பிராணன் அபானன் என்பவற்றைக் கொண்டு நான்கு விதமாக உணவை ஜீரனமாக்குகிறேன். 


உணவு எவ்வாறு ஜீரணமாகி உடலோடு சேர்ந்து விடுகிறதோ, அது போல அறிவும் நம்முள் சேர்ந்து ஒன்றோடு ஒன்றாக ஆகி விடுகிறது. நாம் எதையெல்லாம் படிக்கிறோமோ, அறிய முற்படுகிறோமோ நாம் அதுவாகவே ஆகி விடுகிறோம். 

சில பேர், " நீங்கள் சொல்வது எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா அதை எப்படி கடை பிடிப்பது என்று தெரியவில்லை" என்று கூறுகிறாரகள். நான் அவர்களுக்குச் சொல்லுவது எல்லாம் ஒன்றுதான். நீங்கள் ஒன்றும் கடை பிடிக்க வேண்டாம். கீதையை நீங்கள்  வாசிக்கும் போது அது தானாகவே கரைந்து உங்களுக்குள் மறைந்து விடுகிறது.  உங்கள் எண்ணமும் ,செயலையும் கீதை மாற்றும். நீங்கள் ஒரு முயற்சியும் செய்ய வேண்டாம். அடிக்கடி வாசித்துக் கொண்டே இருங்கள். அடிக்கடி உணவு உண்பதைப் போல. நீங்கள் , உங்களை அறியாமலேயே கீதையின் பாதையில்செல்வீர்கள். 

(தொடரும்...)

http://bhagavatgita.blogspot.in/2016/07/15-6.html






No comments:

Post a Comment