Tuesday, July 12, 2016

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 5

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 5


ஸ்லோகம் 4 - உலகத்தில் நாம்  அறிந்து கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான ஒன்று எது என்றால் , நம்மை நாமே அறிந்து கொள்வதுதான்.

அது ஏன் முக்கியம் ? நம்மை நாம் அறிவதால் என்ன பெரிதாக நிகழ்ந்து விடப் போகிறது. இத்தனை நாள் என்னை நான் அறியாமல் இருந்து என்ன கெட்டுப் போய் விட்டது ?

நமது அனைத்து துன்பங்களுக்கும் காரணம் நாம் யார் என்று அறியாமல் இருப்பது தான். நமது ஆசைகள், கோபங்கள், வருத்தங்கள், கனவுகள், வெறுப்புகள் அனைத்துக்கும் காரணம் நான் தான். நான் ஏன் ஒன்றின் மேல் ஆசை கொள்கிறேன் ? ஏன் சிலவற்றின் மேல் எனக்கு பயம் வருகிறது ? காரணம் எனக்குச் சொல்லப்பட்ட அறிவு, நான் படித்த புத்தகங்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று பெரிய கூட்டமே நமக்குள் இருந்து ஆராவாரம் பண்ணிக் கொண்டு இருக்கிறது. இவற்றை எல்லாம் தாண்டி, நான் யார் என்று அறிய வேண்டும்.

ஸ்லோகம் 5 - துன்பங்களுக்கு இரண்டு தவறான எண்ணங்கள். ஒன்று நம்மை பற்றியது. இரண்டாவது உலகைப் பற்றியது. தன்னைப் பற்றிய தவறான எண்ணங்களுக்கு அகந்தை என்று பெயர். உலகைப்  பற்றிய தவறான எண்ணங்களுக்கு மயக்கம் என்று பெயர்.

இந்த இரண்டு தவறான எண்ணங்களை விட்டு, பற்று இல்லாமல், சுக துக்கம் என்ற  பாகு பாடுகளை கடந்து தன்னை அறிந்து அதில் நிலைப்பவன்  எந்த  கேட்டையும் அடைய மாட்டான்.



ஸ்லோகம் 6 : தன்னை அறிந்தவன் இன்பத்தை வெளியில் தேட மாட்டான். தனக்குள்ளேயே அவன் இன்பத்தை காண்பான்.

ஸ்லோகம் 7: இந்த உலகம் அனைத்தும் ஒன்றின் கூறே. ஏதோ ஒன்றில் இருந்து  பல்கி பெருகி வந்ததுதான் இந்த உலகம். நாம் அனைவரும்  அந்த ஒன்றில் இருந்து வந்தவர்கள் தான் என்று தோன்றும் போது, நாம் எல்லோரும் ஒரே குடும்பம் என்ற ஞானம் தோன்றும்.

ஸ்லோகம் 8: மனதை எப்போதும் நல்ல விஷயங்களிலேயே செலுத்த வேண்டும்.   தீய எண்ணங்கள் , நாளடைவில் தீய  செயல்களை   செய்யத் தூண்டும். தீய புத்தகங்கள், தீய திரைப் படங்கள், தீய தொலைக்காட்சி தொடர்களை  பார்ப்பது , படிப்பது தவிர்ப்பது நல்லது. நல்லதை வாசிக்க வேண்டும். நல்லவர்களோடு பழக வேண்டும். நல்லதையே நினைக்க வேண்டும்.

"நினைவு நல்லது வேண்டும் "

ஸ்லோகம் 9: நாம் நமது எண்ணங்களால் தூண்டப் பட்டு காரியங்களை செய்கிறோம். எண்ணங்கள் எதனால் தூண்டப் படுகிறது ? புலன்களின் மூலம் நமக்கு உள்ளே செல்லும் செய்திகளால்  எண்ணங்கள் தூண்டப் படுகின்றன. அழகான பெண்ணை கண்கள் பார்த்தால், மனதில் ஒரு பரவசம். இனிப்பை பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறுகிறது. புலன்கள் வழி செய்திகள் உள்ளே போகின்றன.  உள்ளே போன செய்திகள் நம்மை  செலுத்துகின்றன. எனவே, எது உள்ளே போகிறது என்று கவனமாக இருக்க வேண்டும்.

http://bhagavatgita.blogspot.in/2016/07/15-5.html

(தொடரும்)




No comments:

Post a Comment