Sunday, May 24, 2015

கீதை - 12.17 - அனுபவங்களின் உச்சம், தன்னை தான் அறிவது

கீதை - 12.17 - அனுபவங்களின் உச்சம், தன்னை தான் அறிவது  


यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति ।
शुभाशुभपरित्यागी भक्तिमान्यः स मे प्रियः ॥१२- १७॥

யோ ந ஹ்ருஷ்யதி ந த்³வேஷ்டி ந ஸோ²சதி ந காங்க்ஷதி |
ஸு²பா⁴ஸு²ப⁴பரித்யாகீ³ ப⁴க்திமாந்ய: ஸ மே ப்ரிய: || 12- 17||

யோ = எவன்

ந ஹ்ருஷ்யதி = மகிழ்வது (களிப்புடன் கூடிய மகிழ்வு) இல்லையோ

 ந த்வேஷ்டி = வெறுப்பு கொள்வது இல்லையோ

 ந ஸோசதி =  வருந்துவது இல்லையோ

 ந காங்க்ஷதி  = ஆசை கொள்வது இல்லையோ

ஸு²பா⁴ஸு²ப⁴பரித்யாகீ = சுப + அசுப + பரித்யாகி = நல்லதையும் கெட்டதையும் துறந்து

 பக்திமாந் = பக்தி கொண்டவன்

ய: ஸ = அவன்

மே = எனக்கு

ப்ரிய:  = பிரியமானவன்

ஆனந்த களிப்பும், பகையும் இன்றி,
துயரமும்  ஆசையும் இன்றி  
நன்மையும் , தீமையும் துறந்த பக்தனே எனக்கு இனியவன் 

இதைப் படிக்கும் போது ஏதோ உப்பு சப்பு அற்ற வாழ்கையை கீதை உபதேசிக்கிறதோ என்று  நமக்குத் தோன்றும். மகிழ்ச்சியும் இல்லை, துன்பமும் இல்லை,  பகையும் இல்லை, ஆசையும் இல்லை, நன்மையையும் தீமையும் இல்லை  என்றால் பின் என்னதான் இருக்கிறது வாழ்வில் என்று கேட்கத் தோன்றும்.

அப்படி ஒரு வாழ்வு தேவையா ? அதில் என்ன சுகம் இருக்க முடியும் ?

சற்று சிந்திப்போம்.

இன்பம், துன்பம், நன்மை , தீமை, என்ற இவை எல்லாம் ஆசை என்ற புள்ளியை  சுத்தி சுத்தி வருகின்றன.

ஆசை நிறைவேறினால் இன்பம், நன்மை .
ஆசை நிறைவேறாவிட்டால் துன்பம், தீமை.
ஆசைக்கு தடையாணவற்றின் மேல் வெறுப்பு, கோபம், பகை.
ஆசைக்கு துணையானவற்றின் மேல் நட்பு, அன்பு.

இப்படி எல்லாம் ஆசையைச் சுற்றியே வருகின்றன.

ஆசையை வெல்வது எப்படி ?

ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசையை வென்றால் துன்பத்தை வெல்லலாம் என்று  சொல்வது எளிது. செய்வது எப்படி ?

ஆசை எதன் மேல் வருகிறது ? இல்லாத ஒன்றின் மேல் ஆசை வருகிறது. அது வேண்டும் என்று  ஆசை வருகிறது.

ஆசை பொருளின் மேல் இல்லை, பொருள் தரும் சுகத்தில் , அனுபவத்தில் ஆசை.

ஆசை பெண்ணின் மேல் இல்லை, அவள் தரும் இன்பத்தில், அந்த அனுபவத்திற்கு ஆசை.

எனவே எல்லா ஆசையும் ஒரு புதிய அனுபவத்திற்குத் தான்.

கார் வேண்டும், வீடு வேண்டும், டிவி வேண்டும், நிலம் வேண்டும், நகை வேண்டும் என்று பலப் பல ஆசைகள். என்று இவை எல்லாம் நிறைவேறி நாம்  ஆசையை கடந்து செல்வது ?

சின்ன மொபெட் வேண்டும் என்று ஆசைப் படுபவனிடம் ஒரு பெரிய Benz காரைத் தந்தால் மொபெட் மேல் உள்ள ஆசை போய்விடும். பெரிய காரே கிடைக்கும்  என்றால் மொபெட்டுக்கு ஏன் ஆசைப் படவேண்டும் ?

அனுபவங்களின் உச்சம் தன்னைத் தான் அறிவது - ஆத்மா , இறை அனுபவம் என்று அதன் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

தன்னைத்தான் அறியும் போது , மற்றைய அனுபவங்கள் தானே மறைந்து போகின்றன.

கார் கிடைத்தவுடன் மொபெட் ஆசை மறைந்து போவது போல.

தன்னைத் தான் அறியும்போது இன்பம், துன்பம், நன்மை , தீமை, கோபம், வெறுப்பு என்பவை  மறையும்.

எப்படி ?

இன்பம் , துன்பம் என்பவை "நான்" என்ற ஒன்றோடு தொடர்பு கொண்டது.

எனக்கு பிடித்தது நடந்தால் இன்பம்,
எனக்கு பிடித்தது நடக்காவிட்டால் துன்பம்,
எனக்கு வேண்டியது நடந்தால் நல்லது, இல்லை என்றால் கெட்டது ....

இந்த "நான்" , "எனக்கு" என்பது என்ன ? இதை அறிவதுதான் தன்னைத் தான் அறிவது.

லட்டு தின்பது இன்பம் என்று நினைக்கிறேன். அதன் மேல் ஆசை படுகிறேன்.

என் உடம்புக்கு லட்டு நல்லது இல்லை என்று அறிந்து கொள்கிறேன். இப்போது லட்டு  உண்ணாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

தன்னைத் தான் அறிவது இன்ப துன்பங்களை கடந்து செல்லும் அனுபவத்தை தரும்.

உங்களுக்கு ஏன் சிலவற்றின் மேல் ஆசை வருகிறது ? உங்களுக்கு ஏன் சிலவற்றின் மேல் வெறுப்பு வருகிறது ? சிலரை பிடிக்கிறது ? சிலரை பிடிக்கவில்லை ? உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது ? எதன் மேல் கோபம் வருகிறது ?

உங்களை அறியுங்கள் . இவை எல்லாம் புரிபடும். இவை எல்லாம் புரிபட்டால் அது நிரந்தர இன்பத்தைத் தரும்.




No comments:

Post a Comment