Sunday, April 26, 2015

கீதை - 12.6 - பக்தியின் படிகள் - பாகம் 1

கீதை - 12.6 - பக்தியின் படிகள் - பாகம் 1 


ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः ।
अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते ॥१२- ६॥

யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா: |
அநந்யேநைவ யோகே³ந மாம் த்⁴யாயந்த உபாஸதே || 12- 6||

யே = அவர்கள்

து = மேலும்

ஸர்வாணி = அனைத்து

கர்மாணி = செயல்களையும்

மயி = எனக்கு

ஸந்ந்யஸ்ய =  அர்பணித்து

மத்பரா: |  = என்னையே பரம் என்று கொண்டு

அநந்யேந = வேறு எதிலும்

எவ  = நிச்சயமாக

யோகேந = யோகத்தில் இருந்து

மாம் = என்னில், என்னை

த்யாயந்த = தியானித்து

உபாஸதே = வழிபடுகிறார்களோ

http://bhagavatgita.blogspot.in/2015/04/126-1.html


யார் அனைத்து தொழில்களின் பலன்களையும் எனக்கு அர்பணித்து, என்னை பரமாகக் கொண்டு, வேறு எதிலும் நாட்டம் இல்லாமல் என்ன தியானம் பண்ணி வழி படுகிறார்களோ

என்ன இது பக்தி ரொம்ப கடினமான ஒன்றாக இருக்கும் போல் இருக்கிறதே. ஏதோ கோவிலுக்குப்  போனோமா , பஜனை செய்தோமா, நைவேத்தியம் செய்த  பிரசாதங்களை உண்டோமா என்று இல்லாமல் இது என்ன புதுக் கதையாக இருக்கிறதே !

அனைத்து செயல்களையும் எனக்கென்று அர்பணித்து ....
என்னையே பரம் என்று கொண்டு
வேறு எதிலும் மனதை செலுத்தாமல்
யோகத்தில் என்னையே தியானித்து வழிபட்டால்

இதை சற்று கூர்ந்து கவனித்தால் பக்தி யோகத்தினுள் கர்ம யோகம் பின்னி பிணைந்து இருப்பது  தெரியும்....

"அனைத்து செயல்களையும்"...பக்தியில் செயல் எங்கே வந்தது ?

செயல் வேறு பக்தி வேறு அல்ல.


அப்படி நினைப்பதால்தான் ஏதேதோ அயோக்கியத்தனங்களை செய்து விட்டு  கோவிலுக்குப்  போய் புண்ணியம் தேடிக் கொள்ளலாம் என்று பலர் நினைக்கிறார்கள்.

பக்தி வேறு, செய்யும் தொழில் வேறு அல்ல.

நாம் செய்யும் செயலையே பக்தியாக மாற்ற முடியும்.

எப்படி ?

நாம் தெருவில் வாகனத்தில் சென்று கொண்டு இருக்கிறோம்.  போக்குவரத்தை  ஒழுங்கு செய்யும் ஒரு constable நிறுத்து என்று கையைக் கட்டுகிறார்....நாம் நிறுத்துகிறோம்.

அவர் யார் நம்மை  நிறுத்த ? மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு constable தானே என்று  யாரும் நினைப்பது இல்லை...ஏன் ?

அவர் ஒரு தனி மனிதர் இல்லை.  அவர் இந்த நாட்டின் , இந்த அரசாங்கத்தின் ஊழியர்.  ஒரு சாதாரண மனிதன், ஆயிரம் வண்டிகளை ஒரு கையைக் காட்டி நிறுத்த முடிகிறது  . எப்படி ? அவர் ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருப்பதால். அப்படி இருப்பதால் அவருக்கு அளவு கடந்த அதிகாரம் , சக்தி கிடைக்கிறது.

அதே போல், நீங்கள் செய்யும் செயல்களை இறைவனின் செயல், இறைவனுக்காக  செய்யும் செயல் என்று நினைத்து செய்யுங்கள். உங்கள் ஆற்றல் அபரிமிதமாக வெளிப் படும்.

ஒரு குட்டி அரசாங்கத்தின் ஒரு கடை நிலை ஊழியனுக்கு இத்தனை  சக்தி என்றால்  ஒரு மிகப் பெரிய சக்தியின் ஊழியனாக இருந்தால் உங்களுக்கு எவ்வளவு  சக்தி இருக்கும் ?

சில பெரிய நிறுவனங்களில் பெரிய அதிகாரியின் உதவியாளர்  சில சமயம் பெரிய  அதிகாரியை விட சக்தி உள்ளவர் போல செயல் படுவார்.

அது அவருடைய உண்மையான சக்தி அல்ல. அது ஒரு பொய் தோற்றம்.

உண்மையான சக்தி அந்த உயர் அதிகாரியிடம் இருக்கிறது. அந்த அதிகாரிக்காக  செய்யும் போது ,  உதவியாளரும் அந்த சக்தியைப் பெறுகிறார்.

கண்ணன் சொல்கிறான் "அனைத்து செயல்களின் பலன்களை எனக்கு அர்பணித்து "

முதலில் ஒரு மாபெரும் சக்தியின் செயலை நீங்கள் செய்கிறீர்கள்.

அந்த செயலின் பலனை, அந்த சக்திக்கே நீங்கள் விட்டு விடுங்கள்.

இப்போது என்ன ஆகிறது ?

நீங்கள் மிகப் பெரிய ஆற்றல் உள்ளவர்கள் ஆகிறீர்கள்.

நீங்கள் மிகப் பெரிய சக்தியைப் பெறுகிறீர்கள்.

அதன் மூலம் செய்யும் செயல்களின் பலன்களுக்கு நீங்கள் பொறுப்பு எடுக்காததால்  உங்கள் மனம் லேசாகிறது. நல்லதோ கெட்டதோ அது அந்த உயர்  அதிகாரியின் பாடு. நான் என் வேலையைச் செய்கிறேன் என்று நீங்கள் இருப்பதால் மனதில் குழப்பம் இல்லை, சிக்கல் இல்லை, மனம் இலேசாகி சந்தோஷத்தில்   மிதக்கிறது.

இது பக்தி.


 "என்னையே பரம் என்று".

நான் அல்ல செய்வது...நான் ஒரு மிகப் பெரிய சக்தியின் ஒரு அங்கம்...அந்த சக்தி  என் மூலம் வெளிப் படுகிறது...நான் ஒரு கருவி அவ்வளவுதான் என்று நினைக்கும் போது , செயலின் விளைவுகள் உங்களை பாதிப்பதில்லை.

நாம் சில காரியங்களில் வெற்றி பெறாமல் போய் விடுகிறோம்...நினைப்பது நடப்பது இல்லை ....

ஏன் ?  நன்றாகத்தான் முயற்சி செய்கிறோம், கடினமாக உழைக்கிறோம்....இருந்தும்  வெற்றி சில சமயம் கை நழுவி போய் விடுகிறது ...

ஏன் ?

அதற்கும் இந்த ஸ்லோகதிற்கும் என்ன சம்மந்தம் ?

பக்தி யோகத்தில் அது எங்கிருந்து வந்தது....

காரணம் இருக்கிறதே....என்ன என்று நாளை பார்போம்



No comments:

Post a Comment