கீதை - 12.2 - பக்தியே சிறந்த யோகம்
श्रीभगवानुवाच
मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते ।
श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः ॥१२- २॥
ஸ்ரீப⁴க³வாநுவாச
மய்யாவேஸ்²ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே |
ஸ்²ரத்³த⁴யா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: || 12- 2||
ஸ்ரீபகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்
மயி = என்னில்
ஆவேஷ்ய = முழுவதும் ஆழ்ந்து
மநோ = மனம்
யே = அவர்கள்
மாம்= என்னை
நித்யயுக்தா = எப்போதும் என்னை நினைத்து
உபாஸதே = உபாசனை செய்து
ஸ்ரத்தயா = சிரத்தையுடன்
பரயோ = உயர்ந்த
உபேதாஸ்தே = கூடியவர்களாக
மே யுக்ததமா மதா: =என்னால் யோகிகளில் சிறந்தவர்களாக கொள்ளப் படுவர்
ஸ்ரீ பகவான் சொல்கிறான், என்னிடம் மனதைச் செலுத்தி , நிதமும் யோகத்தில் ஆழ்ந்து, உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர், யோகிகளில் சிறந்தவர் என்று என்னால் கருதப் படுவர்.
ஆத்மா தரிசனம்.
விஸ்வரூப தரிசனம் என்று இரண்டு இருக்கிறது.
அது போக,
ஞான மார்க்கம்
கர்ம மார்க்கம்
பக்தி மார்க்கம் என்று மூன்று வழிகள் இருக்கிறது.
எது நல்லது, எதில் போவது, எப்படி போவது ?
குழப்பம்தான் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதில் இருந்து எப்படிதான் தெளிவு அடைவது ?
இந்த அத்யாயத்தில் பக்தி யோகம் பற்றி கண்ணன் கூறுகிறான்.
பக்தி என்றால் பல பேர் ஏதோ கோவிலுக்குப் போவது, அர்ச்சனை செய்வது, உண்டியலில் பணம் போடுவது, வீட்டில் இரண்டு வேளை விளக்கு ஏற்றி சில பல பாடல்களை பாடுவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதுவா பக்தி ?
சொல்லப் போனால், ஞான மார்க்கம், கர்ம மார்கத்தை விட பக்தி மார்க்கம் கடினமாக இருக்கிறது, கண்ணன் சொல்வதை வைத்து பார்க்கும் போது.
பக்தி அவ்வளவு எளிமையானதாகத் தெரியவில்லை.
பக்தி மூன்று இலக்கணங்கள் சொல்கிறான் கண்ணன்.
முதலாவது, முழுவதும் ஆழ்ந்து. "ஆவேஷ்ய" என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு முழுவதும் ஆழ்ந்து, ஊடுருவி (penetrate ) என்று பொருள். அனைத்து புலன்களும் ஒன்று பட்டு, மிக தீவிரமாக ஆராய்தல் பக்தி. ஏதோ மேலோட்டமாக, நேரம் கிடைத்தபோது செய்வது அல்ல பக்தி.
இரண்டாவது - புலனடக்கத்துடன். உபாசனா என்ற சொல்லுக்கு ஆராதித்தல், ஒன்று படுதல் என்று பொருள்.
மூன்றாவது, உயர்ந்த நம்பிக்கையுடன். "சிரத்தை" என்ற சொல்லுக்கு வெறும் நம்பிக்கை என்று அர்த்தம் கொள்ள முடியாது. ஒன்றை அடைய வேண்டும் என்று கொள்ளும் நம்பிக்கை சிரத்தை என்று பெயர்.
இப்படி, முழுவதும் ஆழ்ந்து, புலனடக்கத்துடன், அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் செய்யப்படும் செயலுக்குப் பெயர் பக்தி.
அப்படி பக்தி செய்பவர்கள் சிறந்த யோகிகள் என்கிறான் கண்ணன்.
அப்படி என்றால் ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் போன்றவற்றில் செல்பவர்கள் சிறந்தவர்கள் இல்லையா ?
சிந்திப்போம்
No comments:
Post a Comment