Monday, April 13, 2015

கீதை - 12.3 - ஆத்ம வழிபாடு

கீதை - 12.3 - ஆத்ம வழிபாடு 




ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते ।
सर्वत्रगमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम् ॥१२- ३॥

யே த்வக்ஷரமநிர்தே³ஸ்²யமவ்யக்தம் பர்யுபாஸதே |
ஸர்வத்ரக³மசிந்த்யம் ச கூடஸ்த²மசலம் த்⁴ருவம் || 12- 3||


யே து = எவர்

அக்ஷரம் = அழியாததும்

அநிர்தேஸ்யம் = விளக்க முடியாததும், கருத முடியாததும் (அ + நிர் + தேச்யம் = காண்பிக்க முடியாதது)

அவ்யக்தம் = வெளிப்பட்டுத் தெரியாததும், புலன் படாததும்.

பர்யுபாஸதே = பர் + உபாசிதே = வழிபடுகிறார்களோ

ஸர்வத்ரகம் = எல்லா இடத்திலும் இருப்பதும் (சர்வத்ர கம் )

அசிந்த்யம் = சிந்தனைக்கு கட்டுப் படாததும்

ச = மேலும்

கூடஸ்த = அனைத்திற்கும் மேலானதும், அனைத்திற்கும் அடிப்படையானதும் 

அசலம் = சலனம் இல்லாததும்

த்ருவம் = நிலையானதும்

அழிவில்லாததும், விளக்க முடியாததும், புலன்களுக்கு அப்பாற்பட்டதும், சிந்தனைக்கு வெளியே இருப்பதும், அனைத்துக்கும் மேலானதும்,  அசைவற்றதும்,நிலையானதுமான அதை வழிபடுகிறார்களோ.....

அழிவில்லாதது - எது அழிவில்லாமல் இருக்க முடியும் ? தோன்றிய எதுவும் அழியும். எனவே, அழிவில்லாதது என்றால் அது தோன்றாதது என்று அர்த்தம். தொடக்கம் இருந்தால்  முடிவு இருக்கும். முடிவு இல்லை என்றால் தொடக்கமும் இல்லை.

ஆதியும் அந்தமும் இல்லா  அருட் பெருஞ் சோதியை 

என்பார் மணிவாசகர்.

அநிர்தேஸ்யம் - விளக்க முடியாதது. பொருளை , செயலை விளக்க முடியும். குணத்தை  விளக்க முடியாது. லட்டு என்றால் என்ன என்று விளக்க முடியும். இனிப்பு என்றால் என்ன என்று விளக்க முடியாது.  குடை என்றால் என்ன என்று விளக்க முடியும். கருப்பு என்றால் என்ன என்று விளக்க முடியாது. குணங்களை  உணர முடியும். விளக்க முடியாது. லட்டை வாயில் போட்டால் இனிப்பு என்றால்  என்ன என்று உணர முடியும். ஆத்மா என்பதை உணர முடியும்.  விளக்க முடியாது.

 ஸர்வத்ரகம் = எல்லா இடத்திலும் இருப்பதும் (சர்வத்ர கம் )

எது எங்கும் நிறைந்து இருக்கும் ? ஒரு குறிப்பிட்ட உருவம் உள்ளது ஒரு இடத்தில்  இருக்கும். அது எங்கே இருக்கிறது என்று சொல்லிவிடலாம். உருவம் இல்லாதது   எங்கும் இருக்கும். எனவே, அது உருவம் இல்லாதது என்று நாம் யூகிக்கிறோம்.

அசிந்த்யம் = சிந்தனைக்கு கட்டுப் படாததும்

நம் சிந்தனை , நம் புலன்கள் மூலம் உருவாவது. புலன்கள் அறிவுக்கு செய்திகளை அனுப்பிக் கொண்டே  இருக்கின்றன.நம் அறிவு/மனம் அவற்றை உணர்ந்து, அறிந்து சித்தனை உருபெறுகிறது. புலன்களுக்கு அப்பாற்பட்டதை சிந்தனையால் அறிய முடியாது. கண் இல்லாதவன் நிறம் என்றால் என்ன என்று எவ்வளவு   சிந்தித்தாலும் அறிய முடியாது. சிந்தனையில் அறிய முடியாதது , புலன்களுக்கும் அப்பாற்பட்டது. 


கூடஸ்த = அனைத்திற்கும் மேலானதும், அனைத்திற்கும் அடிப்படையானதும்  

அனைத்திற்கும் மூலம் அது. அதிலிருந்துதான் எல்லாம் தோன்றின. 

போற்றி என் வாழ் முதலாகிய பொருளே 

என்பார் மணிவாசகர் 



அசலம் = சலனம் இல்லாததும் 

எங்கும் நிறைந்து இருப்பது எங்கே போகும் ? நகர்வது என்றால் ஒரு இடத்தில் இருந்து  இன்னொரு இடத்திற்குப் போக வேண்டும். எங்கும் நிறைந்தது எங்கிருந்து  எங்கு போகும் ?

இதை வழிபடுபவர்கள் ....என்று இந்த ஸ்லோகத்தை நிறுத்துகிறார் வியாசர். அடுத்த  ஸ்லோகத்தில் இது முடிவு பெறும்.


மேலும் சிந்திப்போம்....


No comments:

Post a Comment