Monday, August 12, 2024

பகவத் கீதை - 2.66 - யோகமும் மன நிம்மதியும்

பகவத் கீதை - 2.66 - யோகமும் மன நிம்மதியும் 



மனிதனின் துன்பங்களுக்கான காரணங்களை சொல்லிக் கொண்டு வருகிறது. 


முதலில், கோபம் 


இரண்டாவது, பற்று 


மூன்றாவது,  திருப்தி அடையாத மனம்.


அடுத்ததாக இன்று நாம் காண இருக்கும் ஸ்லோகத்தில், யோக நிலை அடையாதவனுக்கு இன்பம் இல்லை என்கிறது கீதை. 


யோகம் இல்லை என்றால் புத்தி இல்லை. 


புத்தி இல்லை என்றால் மனோபாவம் இல்லை 


மனோபாவம் இல்லை என்றால் சாந்தி இல்லை 


சாந்தி இல்லை என்றால் இன்பம் இல்லை. 


என்கிறது கீதை. 


பாடல் 


नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना।

न चाभावयतः शान्तिरशान्तस्य कुतः सुखम्॥६६॥


நாஸ்தி பு³த்³தி⁴ரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பா⁴வநா|

ந சாபா⁴வயத: ஸா²ந்திரஸா²ந்தஸ்ய குத: ஸுக²ம் 


பொருள் 


நாஸ்தி  = இல்லை 


புத்திர் = புத்தி 


அயுக்தஸ்ய = யுக்தி என்றால் இணைப்பது. யோகம். அ+யுக்தச்ய = யோகம் இல்லாமல் இருப்பது. யோகம் இல்லை என்றால் புத்தி இல்லை.  


ந சா = இல்லை 


யுக்தஸ்ய = யோகம் 


பாவநா| = குறிக்கோள், மனதை ஒரு நிலைப் படுத்துதல், நிலையான புத்தியை அடைதல் 


ந  சா = இல்லை 


பாவயத: = பாவனை. பாவனை இல்லை என்றால் 


ஸாந்தி = சாந்தி, மன அமைதி 


அஸா²ந்தஸ்ய = மன அமைதி இல்லாவிட்டால் 


குத: = எப்படி ?


 ஸுக²ம் = சுகம், இன்பம் வரும் ?


யோக நிலையை அடையவில்லை என்றால் புத்தி ஒழுங்காக வேலை செய்யாது. அப்படி சரியாக வேலை செய்யாத புத்தி இருந்தும் இல்லாத மாதிரிதான். 


புத்தி இல்லை என்றால், மனதை ஒருமுகப் படுத்த முடியாது (concentration, meditation ).


மனம் ஒருநிலைப் படாவிட்டால் மன அமைதி கிடைக்காது. 


மனம் அமைதி அடையாவிட்டால் இன்பம் வராது.


பின்னால் இருந்து போவோம்.


இன்பம் வேண்டும் என்றால் முதலில் மனம் அமைதி அடைய வேண்டும். இன்பம் என்பது பொருளில் இல்லை. வெளி உலகில் இல்லை. நம் மனதில் இருக்கிறது. அதுவும், அமைதியான மனதில் இருந்து இன்பம் பிறக்கிறது. அது வேண்டும், இது வேண்டும், அது என்ன ஆகுமோ, இது இப்படி ஆகி விடுமோ என்று பயத்திலும், கோபத்திலும், தாபத்திலும், பற்றிலும் கிடந்து அலைகழியும் மனம் அமைதியாக இருக்க முடியாது. மனதை முதலில் சாந்தமாக்க வேண்டும். 


எப்படி?


அதற்கு மனதை ஒருநிலைப் படுத்த வேண்டும். "மனோபாவம்" என்கிறது கீதை. மனம் ஒன்றில் நிலைத்து நிற்க வேண்டும். ஒரு நிமிடத்துக்குள் நாலு தொலைபேசி அழைப்பு, அஞ்சு whatsapp செய்தி, அஞ்சு ஆறு செய்தித் துணுக்குகள், நடுவில் இரண்டு sms , facebook update, இடையில் டிவியில் யார் பதக்கம் பெற்றார்கள், எங்கே வெள்ளம் வந்தது, யார் கொள்ளை அடித்தார்கள் என்ற செய்தி....இத்தனை புயல்களுக்கு நடுவில் மனம் எப்படி ஒருநிலைப் படும்?   


இவற்றை எல்லாம் விடுத்தால் மனம் ஒருநிலைப் படும், அப்போது அது சாந்தி அடையும். 


இந்த சிக்கல்களில் இருந்து எப்படி விடுபடுவது?  


யோகம். யோகம் என்பது ஏதோ youtube இல் செய்து காட்டும் உடற் பயிற்சி அல்ல. இப்போதெல்லாம் யோகம் என்றால் உடம்பை வளைத்து நெளித்து செய்யும் உடற் பயிற்சி என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். 


"யோகா கிளாஸ் க்கு போயிட்டு வந்தேன்" என்பது ஒரு பெருமை.


யோகம் என்பது அது அல்ல. 


யோகத்தின் நோக்கம் உடற் பயிற்சி அல்ல. மனதை ஒருமுகப் படுத்தி சமாதி நிலையை அடைவது. 


இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரதிக்யாகாரம், தியானம், தாரணை, சமாதி என்ற எட்டு அங்கங்களைக் கொண்டது யோகம். அதைப் பயிற்சி செய்யாதவனுக்கு மனம் கட்டுக்குள் நிலைக்காது. சிதறிய மனத்தில் அமைதியும், சாந்தியும், இன்பமும் இல்லை. 


எனவே, இன்பம் அடைய வேண்டும் என்றால், யோகப் பயிற்சி செய்ய வேண்டும். உடற் பயிற்சி அல்ல. 





 


No comments:

Post a Comment