Wednesday, August 7, 2024

பகவத் கீதை - 2.63 - சினமே அழிவுக்குக் காரணம்

 பகவத் கீதை - 2.63 - சினமே அழிவுக்குக் காரணம் 

https://bhagavatgita.blogspot.com/2024/08/263.html

துன்பம் ஏன் வருகிறது?  


தவறான முடிவுகள், தவறான எதிர்பார்ப்புகள், போன்றவற்றால் நிகழ்கிறது. 


அதற்குக் காரணம் என்ன?


புத்தி தடுமாற்றம், புத்தியில் தெளிவு இன்மை, குழப்பம். இவற்றின் காரணமாக மனிதனுக்கு துன்பமும், அழிவும் வருகிறது. 


கீதை ஐந்து விதமான காரணங்களைக் கூறுகிறது. 


முந்தைய ஸ்லோகத்தில் எப்படி பற்று மனிதனுக்கு துன்பம் விளைவிக்கிறது என்று பார்த்தோம். 


அர்ஜுனனுக்கு அரசின் மேல் பற்று இல்லை. ஆனால், அவனுடைய பற்று உறவுகளின் மேல். "ஐயோ, என் தாத்தாவை, குருவை, உறவினர்களை எப்படி கொல்லுவேன்" என்று அவர்கள் மேல் வைத்த பற்று அவனுக்கு துன்பத்தைத் தருகிறது.


பற்று வைப்பது தவறா? கணவன்/மனைவி மேல், பெற்றோர் மேல், பிள்ளைகள் மேல், உறவுகளின் மேல் பற்று வைப்பது எப்படி தவறாகும். 


தவறு பற்றின் மேல் அல்ல. 


அந்தப் பற்று கடமைக்கு குறுக்கே வரும்போது குழப்பம் வருகிறது. பற்றா, கடமையா என்று. 


கடமை என்றால் ஏதோ அலுவலகத்தில், வேலையில், உள்ள கடமை என்று நினைத்து விடக் கூடாது. 


கீதை காட்டும் கடமை ஸ்வதர்மம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடமை இருக்கிறது. அந்தக் கடமை அவன் பிறப்பதற்கு முன் தோன்றி அவனுக்காக காத்து இருக்கும். 


அந்த  ஸ்வதர்மத்தை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். 


ஏன் பிறந்தோம், ஏன் வளர்கிறோம் என்று தெரிய வேண்டாமா?  


சரி, அது ஒரு புறம் இருக்கட்டும், இன்றைய ஸ்லோகத்துக்கு வருவோம். 


மனிதனின் மனக் குழப்பத்துக்கு இரண்டாவது காரணம் - கோபம். 


கோபம் என்றால் ஏதோ காப்பியில் சர்க்கரை சரி இல்லை என்றால் வரும் கோபம், போக்கு வரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு வரும் கோபம் மட்டும் அல்ல. அவை எல்லாம் வெளிப்படையான கோபங்கள். 


நமக்குள் பல கோபங்கள் உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருக்கின்றன. நமக்கே கூட தெரியாது. 


நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன், நான் ஏன் குள்ளமாக இருக்கிறேன், குண்டாக இருக்கிறேன், கறுப்பாக இருக்கிறேன், ஏன் என் பிள்ளைகள் மட்டும் படிக்க மாட்டேன் என்கிறது, ஏன் இன் கணவன்/மனைவி இப்படி இருக்கிறார்கள், ஏன் எனக்கு மட்டும் இந்த மாதிரி சோதனைகள் வருகிறது என்று பல கோபங்கள் நம்மை அறியாமல் நமக்குள் நாளும் கனன்று கொண்டு இருக்கிறது. 


யாரிடம் போய் கோபப் படுவது? விதியின் மேலா, இறைவனின் மேலா, கோபப்படக் கூட ஆள் இல்லை. ஆனால், கோபம் மட்டும் நிற்கிறது. இந்தக் கோபம் மனதை தடுமாற வைக்கும். 


நம்மை விட அழகான ஆள் மேல் தேவை இல்லாமல் கோபம் வரும். அவர் நமக்கு ஒன்றும் செய்து இருக்க மாட்டார். கோபம் பொறாமையாக வெளிப்படும். அவனுக்கு மட்டும் எல்லாம் நல்லா அமைகிறது என்று. சுய பச்சாதாத்தில் கொண்டு விடும். "என் விதி இப்படி ஆகி விட்டது" என்று. 


இப்படி கோபம் மனத்தைக் குழப்பும். குழப்பத்தால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஒரு தடுமாற்றம் வரும். மனம் தவறான பாதையில் செல்லும். அழிவு வரும். 


பாடல் 



क्रोधाद्भवति सम्मोहः सम्मोहात्स्मृतिविभ्रमः।

स्मृतिभ्रंशाद्बुद्धिनाशो बुद्धिनाशात्प्रणश्यति॥६३॥


க்ரோதா⁴த்³ப⁴வதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்⁴ரம:|

ஸ்ம்ருதிப்⁴ரம்ஸா²த்³பு³த்³தி⁴நாஸோ² பு³த்³தி⁴நாஸா²த்ப்ரணஸ்²யதி ||2-63||


பொருள் 


க்ரோதாத் பவதி = கோபம் வருவதால் 

ஸம்மோஹ: = புத்தி தடுமாற்றம் வரும் 


ஸம்மோஹாத் = புத்திக் குழப்பத்தில் இருந்து  


ஸ்ம்ருதிவிப்ரம:| = நினைவு , ஞாபகம் தடுமாறுகிறது. மறதி வருகிறது. 


ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் = ஞாபக மறதியால் 


புத்திநாஸோ = புத்தி நாசம் அடைகிறது 


புத்திநாஸாத்  = புத்தி நாசத்தால் 


ப்ரணஸ்யதி = ஒருவனுக்கு அழிவு வருகிறது 


ஞாபக மறதியில் இருந்து அழிவு எப்படி வரும்?


நாம் எவ்வளவோ படிக்கிறோம், கேட்கிறோம். 


கோபம் வரும் போது, படித்தது, கேட்டது எல்லாம் ஞாபகம் வருகிறதா?  எல்லாம் மறந்து போகிறது அல்லவா?  


"அவ்வளவு படிச்ச ஆளு, அவரா அப்படிச் செய்தார்" என்று மக்கள் வியப்பதை கண்டு இருக்கிறோம். 


கோபம் வந்தால், நல்லது கெட்டது மறந்து போகும். 


உள்ளுக்குள் தேடுங்கள். உங்கள் கோபம் எங்கே இருக்கிறது என்று. யார் மேல். எதன் மேல் என்று. கோபம் விலக வேண்டும். இல்லை என்றால் அழிவு நிச்சயம். 



1 comment: