Saturday, August 10, 2024

பகவத் கீதை - 2.65 - துன்பங்களை அழிப்பது எப்படி?

 பகவத் கீதை - 2.65 - துன்பங்களை அழிப்பது எப்படி?



துன்பம் வரத்தான் செய்யும். என்ன செய்தாலும், ஏதோ ஒஉர் மூலையில் இருந்து துன்பம் வரும். அதைத் தடுக்க முடியாது. 


வந்த துன்பத்தை எப்படி எதிர்கொள்வது? அதை எப்படி வெல்வது? அதை எப்படி அழிப்பது ?


இதுதான் நமது குறிக்கோள். துன்பத்தை தடுப்பது அல்ல. வந்த துன்பத்தை வென்றெடுப்பது. 


கீதை மிக ஆழமாக சிந்தித்து ஒரு வழி சொல்கிறது. 


அனைத்து துன்பங்களுக்கும் மனம்தான் காரணம். 


உடனே நமக்கு என்ன தோன்றும்?  எனக்கு அடி பட்டு கால் போய் விட்டது. அது துன்பம் இல்லையா? அதுக்கு எப்படி மனம் காரணமாக இருக்க முடியும்?


தொழிலில் பெரிய இழப்பு வந்துவிட்டது. அதற்கு எப்படி மனம் காரணமாக இருக்க முடியும்?


நேசிக்கும் ஒருவருக்கு ஒரு நோய் அல்லது அவர் இறந்து விடுகிறார். அந்த இழப்பு உண்மையில்லையா?  அதற்கு எப்படி மனம் காரணமாக இருக்க முடியும். 


இதெல்லாம் சும்மா தத்துவம் சொல்ல, கேட்க்க நன்றாக இருக்கும். உண்மையில் சில துன்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன.  அவை மனம் சார்ந்தவை அல்ல....என்று நமக்குத் தோன்றும். 


சற்று சிந்திப்போம். 


கால் போய் விட்டது....காலே இல்லாமல் எத்தனையோ பேர் மகிழ்ச்சியாக இல்லையா?  உடல் ஊனமுற்றோர் ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்கிறார்கள். இரண்டு காலும் இல்லாமல் இமய மலை ஏறுகிறார்கள். பிறவியில் இருந்தே இரண்டு கண்ணும் இல்லாதவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்க மாட்டார்களா?  ஊனம் ஒரு காரணம் அல்ல. எனக்கு கால் போய்விட்டதே, முன்னாடி இருந்ததே, இப்ப இல்லையே என்ற மனம்தான் காரணம். 


பணம் போய் விட்டது. உங்களை விட ஏழ்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள். உங்கள் துன்பத்துக்கு காரணம் பணம் அல்ல. உறவினர்கள் முன், நண்பர்கள் முன் வாழ்க்கை தரம் தாழுமே என்ற கவலை. அது மனம் சார்ந்தது. 


இப்படி எதைச் சிந்தித்தாலும், துன்பத்தின் மூல வேர் மனம்தான் என்று புரியும். 


அந்த மனம் தெளிவாக, சாந்தமாக இருந்தால் வந்த துன்பம் எதுவாக இருந்தாலும் அது வீரியம் குன்றி அழிந்து விடும். 


பாடல் 


प्रसादे सर्वदुःखानां हानिरस्योपजायते।

प्रसन्नचेतसो ह्याशु बुद्धिः पर्यवतिष्ठते॥६५॥


ப்ரஸாதே³ ஸர்வது³:கா²நாம் ஹாநிரஸ்யோபஜாயதே|

ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு² பு³த்³தி⁴: பர்யவதிஷ்ட²தே


பொருள் 


ப்ரஸாதே =  பிரசாதம் என்ற சொல்லுக்கு திருப்தி அடைவது, அமைதி கொள்வது, தெளிவு அடைவது என்று பல பொருள் இருக்கிறது. அதாவது எது வந்தாலும் அதில் திருப்தி அடைவது, அமைதி கொள்வது. எது வந்தாலும், பத்தாது, இன்னும் வேணும், இன்னும் வேணும் என்று அலையாமல் இருப்பது. 


ஸர்வ = அனைத்து 


து:காநாம் = துன்பங்களுகுக்கும் 


ஹாநிரஸ்ய = அவை அழிகின்றன 


உயோபஜாயதே = உதிக்கின்றது 


ப்ரஸந்ந = எவன் ஒருவன் மனம் போதும் என்று திருப்தி கொள்கிறதோ 


சேதஸோ = மனம், புத்தி 


ஹி = அதனால் 


அஸு = உடனடியாக 


 புத்தி: = புத்தி, மனம் 


பர்யவதிஷ்டதே = நிலையாக நிற்கிறதோ 


துன்பம் ஏன் வருகிறது?  


முதலில் காமம்,


அடுத்தது கோபம்,


அடுத்தது புலன்களின் பிடியில் சிக்கி அவற்றின் பின்னால் ஓடுவது


அடுத்து இங்கே சொல்கிறார், துன்பத்துக்கு இன்னொரு காரணம் மனம். போதும் என்று திருப்தி கொள்ளாத மனம். எவ்வளவு தந்தாலும், போதாது போதாது என்று அலை பாயும் மனம். 


ஒரு இலட்சம் உள்ளவன், ஒரு கோடி இருந்தால் போதும். அப்புறம் வாழ்வில் வேறு எதுவும் வேண்டாம் என்று நினைக்கிறான். ஒரு கோடி வந்த பின், பத்து கோடியாவது வேண்டும் என்று நினைக்கிறான். பத்து கோடி உள்ளவன் நிம்மதியாக இருக்கிறானா என்றால் இல்லை. அவன் நூறு கோடி கனவில் இருக்கிறான். 


எது வந்தால் நிம்மதியும் சந்தோஷமும் வரும் ஒரு காலத்தில் நினைத்தாயோ, அவை இன்று இருக்கின்றன. எங்கே அந்த நிம்மதியும் சந்தோஷமும். இன்று வேறு ஏதோ கனவில். மிக உறுதியாகச் சொல்ல முடியும், இன்றைய கனவு மெய்ப்பட்டாலும், நிம்மதியும், சந்தோஷமும் வராது. நூறு சதவீதம் உண்மை. 


நிம்மதியும், அமைதியும், சந்தோஷமும், பொருள்களில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் வெளியே உள்ள வேறு எதிலும் இல்லை.


இவளை கைப் பிடித்தால் வாழ்க்கை சொர்கமாக இருக்கும் என்று நினைத்து திருமணம் செய்த எவ்வளவோ பேர் மிகக் குறுகிய காலத்தில் விவாகரத்து வேண்டி நீதிமன்றங்களை நாடுவதை காண்கிறோம். 


இன்பம் அந்தப் பெண்ணில் இல்லை. பொருளில் இல்லை. உறவில் இல்லை. 


உள்ளே இருக்கிறது. 


அதை அறிந்து கொள்ளும் வரை, நிம்மதியும், இன்பமும் இல்லை. 


அறிவோம். 




1 comment:

  1. அருமையான விளக்கம்🙏

    ReplyDelete