Thursday, April 7, 2016

கீதை - பதினான்காம் அத்யாயம் - ஒரு தொகுப்பு

கீதை - பதினான்காம் அத்யாயம் - ஒரு தொகுப்பு 


1. ஞானங்களில் உயர்ந்த ஞானமான குணத்ரய விபாக யோகம் இந்த அத்யாயத்தில் சொல்லப் பட்டது.

2. இந்த ஞானத்தை அடைந்த முனிவர்கள் இந்தப் பிறவியிலேயே உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள்.

3. இந்த ஞானத்தைப் பெற்றோர், பிறப்பு, இறப்பு என்ற சுழலில் வருந்த மாட்டார்கள்.

4. இந்த உலகம் நம் கற்பனையால், எண்ணங்களால் உருவாவது. வெளியில் உள்ளவவைகளும் நம் எண்ணங்களும் சேரும்போது உலகம் பிறக்கிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து குழந்தை பிறப்பது போல.

5. இந்த உலகுக்கும், அதில் உள்ளவற்றிற்கும் நாம் ஒரு அர்த்தத்தை கற்பிக்கிறோம். நம்மால் அவை உயிர் பெறுகின்றன.

6. சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற இந்த முக்குணங்கள் நம்மை பிணிக்கின்றன . கட்டிப் போடுகின்றன.

7. சத்வ குணம்  தூய்மையானது (நிர்மலம்) , ஒளி பொருந்தியது, ஆரோக்கியமானது. அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.

8. ரஜோகுணம் விரும்பும் இயல்பு உடையது.   ஆசையின் சேர்க்கையால் பிறப்பது. தொழிலின் சேர்க்கையால் நம்மை கட்டுப் படுத்துகிறது.

9. தமோகுணம் அறிவீனத்தில் பிறக்கிறது.  இது அனைத்து உயிர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி, தவறு, சோம்பல் மற்றும் உறக்கத்தால் கட்டுப் படுத்துகிறது.

10. சத்வம் குணம் இன்பத்தின் மூலம் நம்மை பிணைக்கிறது.  ரஜோகுணம் செய்கையின் மூலம் நம்மை பிணைக்கிறது. தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து  மயக்கத்தில் பிணிக்கிறது.

11. இந்த மூன்று குணங்களும் ஒவ்வொரு சமயத்தில் ஒரு குணம் மற்ற குணங்களை  தாண்டி உச்சம் பெற்று நிற்கிறது.  அப்படி ஒரு குணம் மற்ற குணங்களைத் தாண்டி உச்சம் பெறும் போது , அந்த உச்சம் பெற்ற குணத்தின் இயல்பபை நாம் பெறுகிறோம்.

12. புலன்கள் அறிவின் கட்டுக்குள் இருக்கும் போது சத்வ குணம் உச்சம் பெற்று இருக்கிறது  என்று அறிந்து கொள்ளலாம்.

13. பேராசை, முயற்சி, தொழிலை தொடங்குவது,  அமைதியின்மை, பொறாமை அல்லது ஏக்கம்  இவை ரஜோ குணம் வலிமை பெற்று இருக்கும் போது தோன்றுகிறது.

14. தமோ குணம் ஓங்கி இருக்கும்போது ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம் என்பவை  பிறக்கும்.

13. சத்வ குணம் உயரும் போது , தானாகவே உயர்ந்தவர்கள் மற்றும் நல்லவர்களின் தொடர்பு நிகழும். ரஜோ  குணம் உயரும் போது கர்மத்தில் பற்று உடையவர்களின் தொடர்பு நிகழும். தமோ குணம் உயரும் போது மூடர்களின், சோம்பேறிகளின் தொடர்பு நிகழும்.

14. சத்வ குணத்தின் பலன்   நிர்மலத் தன்மை.  ரஜோ குணத்தின் பலன்  துன்பம். தமோ குணத்தின் பலன்  அறிவின்மை

15. சத்வ குணத்தில் இருந்து ஞானம் பிறக்கிறது;
ரஜோ குணத்தில் இருந்து பேராசை பிறக்கிறது
தமோ குணத்தில் இருந்து  தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் பிறக்கின்றன

16, சாத்வீக குணம் உடையவர்கள் மேல் நோக்கிப் போகிறார்கள்.
ரஜோ குணம் உடையவர்கள் இடையில் நிற்கிறார்கள்.
தமோ குணம் உடையவர்கள் கீழ் நோக்கிப் போகிறார்கள்.

17. குணங்கள் தான் நம்மை செலுத்துகின்றன. எது குணங்களை செலுத்துகிறதோ, அதை அறிந்து கொண்டால் இறைத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

18. இந்த மூன்று குணங்களில் இருந்து விடுபட்டவன் பிறப்பு, மூப்பு, இறப்பு என்ற  துன்பங்களில் இருந்து விடுபடுவான்.

19. நமக்குள் ஒவ்வொரு குணம் உயரும் போதும் , தாழும் போதும் அவற்றை பற்றி விருப்பு வெறுப்பு இன்றி இருந்தால், குணங்களின் பிடியில் இருந்து விடுபடலாம்.

20. குணங்கள் வருவதும் போவதும் இயல்பானது என்று அறிந்து அவற்றிற்காக  சலனப் படாமல் இருந்தால் அவற்றின் பிடியில் இருந்து விடுபடலாம்.

21. குணங்களைக் கடந்தவன் உயர்வு தாழ்வு, நண்பன் பகைவன், செல்வம் வறுமை என்ற வாழ்வின் பல்வேறு வேறுபாடுகளை ஒன்றாகக் காண்பான்.

22. தன்னலமற்ற நினைவோடு எப்போதும் தொண்டு செய்வதே குணங்களின் பிடியில் இருந்து விடுபட வழி.

23. கற்பனையான பிரிவினைகளை மறந்து , இரவல் ஞானங்களை துறந்து தெளிந்த மனதோடு இருப்பதே உயர்ந்த இன்பம்.


அந்த இன்பம் எங்கும் எல்லோருக்கும் நிறைவாக இருக்கட்டும் !!

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/blog-post_7.html )

No comments:

Post a Comment