Wednesday, April 20, 2016

கீதை - 15.4 - தன்னைத் தான் அறிய

கீதை - 15.4 - தன்னைத் தான் அறிய 


ततः पदं तत्परिमार्गितव्यं यस्मिन्गता न निवर्तन्ति भूयः ।
तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी ॥१५- ४॥

தத: பத³ம் தத்பரிமார்கி³தவ்யம் யஸ்மிந்க³தா ந நிவர்தந்தி பூய: | 
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ || 15- 4||

தத: = பிறகு 

பதம் = இடம் 

தத் = அது 

பரிமார்கிதவ்யம் =  தேடி அடைய வேண்டும் 

யஸ்மிந் = எங்கு 

க³தா = சென்ற பின் 

ந = இல்லை 

நிவர்தந்தி = திரும்புவது 

பூய:= மீண்டும் 

தம் - அவனுக்கு 

ஏவ = நிச்சயமாக 

சா = மேலும் 

அத்யம் =  ஆதி

புருஷம் =புருஷன் 

ப்ரபத்யே = அடைக்கலம் அடைந்த பின் 

யத: = எப்போது 

ப்ரவ்ருத்தி: = செயல் 

ப்ரஸ்ருதா = விரிவடைகிறதோ 

புராணீ = பழமையான 

(அப்படி அந்த சம்சாரம் என்ற மரத்தை வெட்டிய பின்) ஒருவன் மீளா நிலையை அடைவான்.  எவனிடம் இருந்து ஆதித் தொழில் தொடங்கிற்ரோ  அந்த ஆதி புருஷனைச் சார்ந்து நிற்கிறான்.

சற்று கரடு முரடான சுலோகம்தான். 


மரம் தோன்றி, கிளைத்து, காய் கனிகள் தோன்றி அதில் இருந்து விதை தோன்றி மீண்டுமொரு மரம் தோன்றும் இந்த சக்கரம்  நிற்க வேண்டும் என்றால்  பற்றின்மை என்ற வாளால் அதை வெட்ட வேண்டும் என்றார். எப்படி வெட்ட வேண்டும் என்றால் மீண்டும் அது துளிர்க்காதபடி வெட்ட வேண்டும். 

சரி, அப்படி வெட்டினால் என்ன ஆகும் ?

நமக்கு என்ன இலாபம் ? 

யார் மேலும் எதன் மேலும் பற்றில்லாமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று நமக்குத் தோன்றும். 

அதெல்லாம் வெட்ட முடியாது. 

பற்றற்று இருப்பதனால் என்ன  பலன் என்று முதலில் சொல்...அப்புறம் பற்றை விடலாமா  வேண்டாமா என்று நான் யோசிக்கிறேன் என்று தான் சொல்லத் தோன்றும். 

ஒருவன் சாக்கடையில் விழுந்து விட்டான். ரொம்ப நாள் அங்கேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறான். அங்கேயே கல்யாணம் முடித்து, பிள்ளை குட்டிகள் எல்லாம் இருக்கின்றது. அவனை மேலே வா என்றால் " எதற்கு வர வேண்டும்...எங்கே சௌகரியமாகத் தானே இருக்கிறது ...மேலே வந்து என்ன செய்யப் போகிறேன்...அங்கு என்ன பெரிதாக இருந்து விடப் போகிறது...அங்கு என்ன இருக்கிறது என்று சொல் , பின்னால் யோசிக்கிறேன் வரலாமா வேண்டாமா என்று " என்றுதான் அவன் சொல்லுவான்.

நாம் இந்த சம்சாரத்தில் மிக நீண்ட நாட்களாக இருந்து வருகிறோம். நம் பெற்றோர், அவர்களின் பெற்றோர், அவர்களின் பெற்றோர் என்று எத்தனையோ தலை முறைகளாக இதில் கிடந்து உழல்கிறோம். 

இதைத் தவிர வேறு ஒன்று இருக்கிறது என்று சொன்னால் கூட நம்ப மறுக்கிறது மனம். 

அந்த ஆலமரத்தை வெட்டினால் என்ன நிகழும் என்றால், 

"எவனிடம் இருந்து ஆதித் தொழில் தொடங்கிற்ரோ அவனை சார்ந்து நிற்பான் "

இந்த பிறவிக்கு காரணம் என்ன, இந்த துன்பங்களுக்கு காரணம் என்ன, இது எங்கிருந்து வருகிறது, எதனால் வருகிறது என்று அறிவோம்.

எது நம்மைச் செலுத்துகிறது ? எதனால் நாம் உந்தப் பட்டு காரியங்களை செய்கிறோம் ? ஏன் நாம் ஆசைப் படுகிறோம் ? 

எது உண்மையான நாம் என்று அறிவோம். அதனை அறிந்த பின், அந்த உண்மையான என்னை நான் சார்ந்து நிற்பேன். 

இன்று எதை எதையோ சார்ந்து நிற்கிறேன். பெற்றோர் சொன்னது, ஆசிரியர் சொன்னது. ஆசாரியன் சொன்னது. புத்தகங்களில் படித்தது. டிவி மற்றும் ஊடகங்களில் கேட்டது பார்த்தது என்று ஆயிரம் வெளி உலக சங்கதிகளை சார்ந்து நிற்கிறோம்.

எப்போது பற்றற்ற வாளால் இந்த சம்சாரம் என்ற மரத்தை வீழ்துகிறோமோ அன்று உண்மையான நாம் யார் என்று அறிவோம். பின் அதனை சார்ந்து நிற்போம். 

தன்னைத் தான் அறிவது சுகம் இல்லையா ?

அந்த சுகம் எல்லோருக்கும் வாய்கட்டும்.



(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/154.html )

No comments:

Post a Comment