Tuesday, April 26, 2016

கீதை - 15.6 - அதுவே பரமபதம்

கீதை - 15.6 - அதுவே பரமபதம் 



न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः ।
यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ॥१५- ६॥

ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஸஸாங்கோ ந பாவக: |
யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம || 15- 6||


ந = இல்லை

தத்= அது

பாஸயதே = ஒளிரச் செய்வது

ஸூர்யோ = சூரியனோ

ந = இல்லை

ஸஸாங்கோ = சந்திரனோ

ந = இல்லை

பாவக: =நெருப்போ

யத் = எதை

கத்வா = சென்ற பின்

ந = இல்லை

நிவர்தந்தே = திரும்பி வருவது இல்லையோ

தத் = அது

தாம = வீடு , பதம்

பரமம் = பரம

மம  என்னுடைய


அதை சூரியனோ, சந்திரனோ, நெருப்போ ஒளி ஏற்றுவதில்லை. எதை அடைந்தபின் அவர்கள் மீளுவதில்லையோ, அதுவே என் பரம பதம்.


ஏதோ விடுகதை மாதிரி இருக்கிறது.


பரம பதம் என்றால் என்ன ? பரம பதம் என்றால் ஏதோ சொர்கம், இறந்த பின் , நல்லது செய்தால் அங்கே போகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதிலும் கூட பிரிவுகள் உண்டு. மனித மனம் எதைத்தான் பிரிக்காது ? பரம பதம், வைகுண்டம், கைலாயம், சொர்க்கம், என்றெல்லாம் பிரிவுகள் உண்டு. இதிலும் சில  உயர்த்து, மற்றது தாழ்ந்தது என்றும் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.

இந்த பரம பதத்தை பற்றி கீதை என்ன சொல்கிறது ?

பரம பதம் என்பது இறந்த பின் போகும் இடம் அல்ல. இறப்பதற்கு முன்பே பரம பதத்தை அடைய முடியும் என்கிறது கீதை.

அப்படிச் சொன்னால் நிறைய பேருக்கு சங்கடமாக இருக்கும்.

ஏன் ?

ஒருவேளை மற்றவன் எனக்கு முன் அதை அடைந்து விடுவானோ என்ற பயம். இறந்த பின் என்றால் ஒரு போட்டியும் இல்லை.

ஆனால் கீதை இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை.

பரம பதத்துக்கும் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

அப்படித்தான் கீதை சொல்கிறது.

சரி, அப்படி என்றால் எதுதான் பரமபதம் ?

பரம பதத்திற்கு இரண்டு குறிப்புகள் சொல்கிறது கீதை....

முதலாவது, எது சூரிய , சந்திர மற்றும் நெருப்பால் ஒளிஏற்றப் படுவது இல்லையோ....

அப்படி என்றால் என்ன அர்த்தம் ?

நாம் இந்த உலகில் உள்ள பொருள்களை பார்க்க இரண்டு விஷயங்கள் வேண்டும்.

ஒன்று, பார்க்கும் நம் கண். கண் நன்றாக வேலை செய்யவேண்டும். கண் இருந்தால் தான் பார்க்க முடியும்.

சரி, கண் மட்டும் இருந்துவிட்டால் பார்த்து விட முடியுமா ?

இருட்டில் எவ்வளவுதான் விழித்து விழித்துப் பார்த்தாலும் கண் தெரியாது. தட்டு தடுமாறுவோம்.

எனவே, பார்பற்கு கண்ணோடு கூட வெளிச்சமும் வேண்டும்.

வெளிச்சம் இரண்டு வகையில் வரலாம்.

இயற்கையான வெளிச்சம் - சூரியன் மற்றும் சந்திரனில் இருந்து வருவது.

இரண்டாவது செயற்கை வெளிச்சம் - நாம் மூட்டும் நெருப்பில் இருந்து வருவது.

இவற்றில் இருந்து வரும் வெளிச்சம் பொருள்கள் மேல் பட்டு நம் கண்ணை வந்து அடைகிறது. நம் கண் அவற்றை இனம் கண்டு கொள்கிறது.

வெளிச்சம் அனைத்து பொருள்கள் மேலும் விழும். அவற்றின் மேல் பட்டுத் தெறிக்கும்.

சூர்யனும், சந்திரனும், நெருப்பும் அனைத்து பொருள்களையும் ஒளியூட்டும்.

பரமபதம் என்பது இவற்றால் ஒளியூட்டப் படாதது என்கிறது கீதை.

எது இவற்றால் ஒளியூட்டப்படாதது ?

வெளியில் உள்ள எதன் மீதும் ஒளி விழும் என்றால், ஒளி விழாத ஒன்று வெளியில் இல்லை. அது நமக்குள்ளே இருக்கிறது.

நமக்குள் இருக்கும் ஒன்றை எப்படி சூரியன் ஒளியூட்ட முடியும் ?

அப்படி என்றால் பரம பதம் என்பது வெளியே இல்லை. அது நமக்குள் இருக்கிறது.

பாற்கடல், பனிமலை, பதும பீடத்து அந்நகர் என்று எங்கோ இருக்கும் உலகம் அல்ல பரமபதம்.

அது உங்களுக்குள்ளே இருப்பது.

சரி, அது சூரிய, சந்திர  மற்றும் நெருப்பால் ஒளியூட்டப் படுவது இல்லை என்றால் வேறு எதனால் என்ற கேள்வி எழும் அல்லவா.

இருட்டில் எப்படி அதை அறிய முடியும் ?

அறிவால் , ஞானத்தால் அதை அறிய முடியும்.

இது முதலாவது.

இரண்டாவது, எதை அடைந்தபின் மீள்வது இல்லையோ, அதுவே என் பரம பதம்.

அது என்ன அடைந்த பின் மீள்வது இல்லை ?

நாம் நிறைய படிக்கிறோம். படித்தவர் சொல்லக் கேட்கிறோம். பக்தியோடு இருக்கிறோம். பூஜை புனஸ்காரம் செய்கிறோம். தான தர்மங்கள் செய்கிறோம்.

நம் மனதில் சில சமயம் ஒரு நிம்மதி, ஒரு சாந்தி, ஒரு திருப்தி எழலாம்.

அது தான் பரமபதமா ?

நமக்குள் , நாம் உபாசிக்கும் இறைவன் இருப்பதாய் உணரலாம். அதுதான் பரமபதமா ?

எதை அடைந்தால் நீங்கள் மீள்வது இல்லையோ, அதுவே பரமபதம்.

ஒருமுறை அடைந்து விட்டால், அதை இழப்பது என்பது இல்லை. அது நிரந்தரமானது.

மீண்டும் ஒரு குறை, துன்பம், சந்தேகம், குழப்பம் இவை வந்தால் நீங்கள் உணர்ந்தது பரமபதம் அல்ல.

பரம பதம் என்றால் உயர்ந்த நிலை, உயர்ந்த இடம் அவ்வளவுதான்.

அது உங்களின் நிலை.

அது ஒரு இடமோ, கட்டிடமோ, கடலோ, மலையோ, இல்லை.

அதை வெளியில் தேடக் கூடாது. நீங்கள் வெளியில் எதையாவது காண முடியுமானால் , அது பரமபதம் அல்ல என்று அறிந்து கொள்ளுங்கள். அதன் மேல் ஒளி விழும் என்றால் அது அல்ல என்று அறிந்து கொள்ளுங்கள்.

அது உங்களுக்குள் இருக்கிறது.

வெளிச்சம் படாத இடத்தில் இருக்கிறது.

அதை அறிந்து கொண்டால், அதைப் பற்றிய சந்தேகம் மீண்டும் வராது.

அவ்வளவு சர்வ நிச்சயமான ஒன்று அது.

அந்த நிலையை நீங்கள் அடைய வாழ்த்துக்கள்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/156.html )

No comments:

Post a Comment