Wednesday, February 24, 2016

கீதை - 13.26 - இந்த உலகம் எப்படி உருவானது ?

கீதை - 13.26 - இந்த உலகம் எப்படி உருவானது ?


यावत्संजायते किंचित्सत्त्वं स्थावरजङ्गमम् ।
क्षेत्रक्षेत्रज्ञसंयोगात्तद्विद्धि भरतर्षभ ॥१३- २६॥

யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தா²வரஜங்க³மம் |
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகா³த்தத்³வித்³தி⁴ ப⁴ரதர்ஷப⁴ || 13- 26||


யாவத் = எவ்வளவு பெரியதாய் , உயர்ந்ததாய் இருந்தாலும்

ஸஞ்ஜாயதே = ஒன்றாக உருவானது

கிஞ்சித் = எவ்வளவு சிறியதாய் இருந்தாலும் (கிம் = எது, எவ்வளவு; சித் = துகள்)

ஸத்த்வம் = இருப்பவை

ஸ்தாவர ஜங்க³மம் = நகர்பவை, நகராதவை

க்ஷேத்ர = அறியப் படுவது

க்ஷேத்ரஜ்ஞஸம் = அறிவது , அறியும் அறிவு

யோகாத் = இணைந்தது

தத் = அது

வித்தி =அறிந்து கொள்வாய்

பரத ர்ஷப  =பாரத காளையே

அசைவது, அசையாதது என்று நிறைந்த இந்த உலகம் க்ஷேத்திரம் மற்றும் க்ஷேத்திரக்ஞன் என்ற இரண்டும் சேர்ந்ததால் உண்டானது என்று அறிவாய் பாரதக் காளையே 

இந்த உலகம் என்பது என்ன ? சுகம், துக்கம், இன்பம், துன்பம், என்று எல்லாம் கலந்து இருக்கிறது.  ஒரு நாள் நன்றாக இருக்கிறது. அடடா, இதுவல்லவோ வாழ்கை என்று   இருக்கிறது. இன்னொரு நாள், இதுவா வாழ்கை, எங்காவது கண் காணாத இடத்துக்கு ஓடிப் போய்  விடலாமா என்று தோன்றுகிறது. மற்றொரு நாள் இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை ஏதோ போகிறது.

இதில் எது உண்மை, எது நிரந்தரம், எதனால் இவை எல்லாம் நிகழ்கின்றன ?

இவற்றிற்கு எல்லாம் நான் மட்டும் தான் காரணமா ? என் எண்ணங்கள், என் மன நிலை,என் குண நலன்கள்  இவை மட்டும் தான் காரணமா ?

அல்லது

எனக்கு வெளியே உள்ள இந்த உலகம், அதில் உள்ள பொருள்களும் மக்களும் காரணமா ?

கீதை சொல்கிறது, இரண்டும்தான், இரண்டும் இல்லைதான்.

இது என்ன புதுக் குழப்பம் ?

இரண்டும்தான் என்றால் இந்த இரண்டும் சேர்ந்த கலவைதான் இந்த உலகம்.

இரண்டும் இல்லைதான் என்றால் தனித் தனியே இவை காரணம் இல்லை.

புருஷனும், பிரகிரிதியும் அல்லது

க்ஷேத்ரமும், க்ஷேத்ரஞனும் சேர்வதால் உண்டாவது தான் இந்த உலகம்.

எப்போதும் சொல்லும் உதாரணம்தான்.

இரவில், தனிமையில், அரை இருட்டில் சாலையில் ஒரு பாம்பு கிடக்கிறது. பயத்துடன் அருகில் சென்று பார்த்தால் அது பாம்பு இல்லை ஒரு பூ மாலை என்று தெரிகிறது.

பாம்பு என்று நினைத்ததற்கு நானும் ஒரு காரணம் , அந்த பூ மாலையும் ஒரு காரணம். அருகில் உள்ள குப்பைத் தொட்டியை நான் பாம்பு என்று நினைக்க மாட்டேன். பூ மாலை பாம்பாகத் தெரிவதற்கு என் பயமும், சந்தேகமும் ஒரு காரணம் என்றால், பாம்பு போலக் கிடந்த அந்த பூ மாலையும் ஒரு காரணம்.

நான் மட்டுமா காரணம் என்றால் இல்லை - எப்படி இல்லை என்றால், நான் எல்லாவற்றையும் பாம்பாகப் பார்ப்பது இல்லை.

பூ மாலை மட்டுமா காரணம் என்றால் இல்லை - பகலில் அது பாம்பாகத் தெரிவது இல்லை.

அந்தப் பொருள், அந்த சூழ்நிலையில் (வெளியே உள்ளது), என் மனம் (உள்ளே உள்ளது) என்ற இந்த இரண்டும் சேர்ந்ததுதான் இந்த உலகம்.

உலகம் அது பாட்டுக்கு இருக்கிறது. நல்லது கெட்டது , சரி தவறு என்றெல்லாம் அதில் இல்லை. நாம் தான் நடக்கும் நிகழ்வுகள் மேல் நம் எண்ணங்களை ஏற்றி இது சரி, இது தவறு, இது இன்பம், இது துன்பம் என்று நினைத்துக் கொண்டு அலைகிறோம் .

சரி, அதனால் என்ன ?

இந்த உலகும் அதைப் பற்றிய என் எண்ணங்களும் தேவைதானே. அவை இல்லாமல் நாம் எப்படி வாழ்வது.

நெருப்பு சுடும் என்பது என் எண்ணம். சூடு பட்டால் வலிக்கும் என்று நான் நினைத்து அதை விட்டு தள்ளி நிற்பது நல்லது தானே ? இது என்ன பெரிய விஷயமா ? இதைப் போய் வேலை மெனக்கெட்டு சொல்லுவானேன் ?

காரணம் இருக்கிறது.

இந்த நான் மற்றும் இந்த உலக கலப்பு என்பது நிரந்தரமான, பிரிக்க முடியாத ஒன்று அல்ல.

இவை சேரும், பிரியும்.

இப்படி ஒவ்வொரு முறை சேரும் போதும் பிரியும் போதும் ஏதாவது தோன்றிக் கொண்டே இருக்கும்.

இந்த  சேர்வதும் பிரிவதும் நிரந்தரமானது அல்ல என்றால், இந்த உலகமும் நிரந்தரமானது அல்ல.

அது ஒரு செய்தி.

இரண்டாவது செய்தி, இந்த உலகம் மற்றும் நான் என்ற இரண்டு கூறுகளில், உலகம் என்பது என்னால் கட்டுப் படுத்த முடியாத ஒன்று. நான் சொல்லி, நான் நினைத்து ஒன்றும் மாறப் போவது இல்லை. ஆனால், என் மனம் என் கட்டுக்குள் இருக்கிறது. இருக்க வேண்டும். என் மனதை மாற்றுவதன் மூலம், நான் இந்த உலகை மாற்ற முடியும். குறைந்த பட்சம், இந்த உலகம் எனக்கு எப்படி இருக்கிறது என்பதை என்னால் மாற்ற முடியும்.

மூன்றாவது, மனம் அல்லது அறிவு மாறினால் உலகம் மாறுகிறது என்று கொண்டால், உலகம் என்ற ஒன்று தனியாக இருக்கிறதா ? என்னைத் தவிர்த்து, இந்த உலகம் என்று ஒன்று தனியாக கிடையாது. நான் தான் இந்த உலகை தோற்றுவிக்கும் பிரம்மா, என்னால் இந்த உலகம் நிலைக்கிறது, என்னோடு இந்த உலகம் அழிகிறது.

நான்காவது, மிக முக்கியமானது, நான் என்ற என் மனம், என் அறிவு, என் அனுபவம், என் நினைவுகள் ஒரு புறமும் உலகம், அதில் உள்ள பொருள்கள் மற்றும் உயிர்கள்  மறுபுறமும் சேர்ந்து உலகை உருவாக்குகிறோம் என்று சொன்னால் , அப்படி உருவான உலகை அறிந்து கொள்ளும் நான் யார் ? மனதை மாற்றினால் உலகம் மாறும் என்றால், மனதை மாற்றுவது எது ?

ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயம்.

கீதை பாதையை காட்டி இருக்கிறது. பயணம் செய்வதும், செய்யாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.

கீதை காட்டிய வழியில் பயணித்துப் பாருங்கள்.













No comments:

Post a Comment