Saturday, February 13, 2016

கீதை - 13.19 - பிரக்ரிதி, புருஷன்

கீதை - 13.19 - பிரக்ரிதி, புருஷன்


प्रकृतिं पुरुषं चैव विद्ध्यनादी उभावपि ।
विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसंभवान् ॥१३- १९॥


ப்ரக்ருதிம்  புருஷம் சைவ வித்³த்⁴யநாதீ³ உபா⁴வபி |
விகாராந்ஸ்²ச கு³ணாந்ஸ்²சைவ வித்³தி⁴ ப்ரக்ருதிஸம்ப⁴வாந் || 13- 19||


ப்ரக்ருதிம் = பிரக்ரிதி

புருஷம் = புருஷம்

ச = மேலும்

எவ = அதனால்

வித்தி = அறி

அநாதீ = ஆரம்பம் இல்லாதது

உபா = இரண்டும்

அபி = இப்போது

விகாராந்ஸ் = விகாரங்கள், வேறுபாடுகள்

ச  = மேலும்

குணாந்ஸ் = குணங்கள்

ச எவ = மேலும்

வித்தி = அறி

ப்ரக்ருதி = பிரகிரதியில் இருந்து

ஸம்பவாந் = சம்பவிக்கிறது.



பிரக்ரிதியும், புருஷனும் ஆரம்பம் இல்லாதது. வேறுபாடுகளும், குண மாற்றங்களும் பிரக்ரிதியில் இருந்து பிறக்கின்றன. 

உலகில் துன்பமற்று இன்பமாக வாழ வேண்டும் என்றால் , இந்த உலகைப் பற்றி  நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகம் எதனால் ஆனது, இன்பமும் துன்பமும் எதனால் உண்டாகின்றன ? துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழ்வது எப்படி என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகம் பிரக்ரிதி மற்று புருஷன் என்ற இரண்டால் ஆனது.

பிரக்ரிதி மற்றும் புருஷன் என்றால் என்ன ?

க்ரு என்றால் உருவாக்குவது. ப்ர என்பது உபசர்க்கம். உயர்வுச் சொல். பிரக்ரிதி என்றால்  உருவாக்கப்பட்டது. அல்லது உருவானது. இந்த உருவானவை என்ற சொல்லுக்குள் நாம், நம் புலன்கள்,  நம்மைச்  சுற்றியுள்ள அனைத்து பொருள்கள் மற்றும்   உயிர்கள் அனைத்தும் அடங்கும்.

என்னுடைய கண் , கண் செய்யும் செயலான பார்வை,
என்னுடைய காது, அது செய்யும் செயலான கேட்பது என்று புலன்களும், அவை செய்யும் செயல்களும் அடங்கும்.

நான் பார்க்கும் பொருள்கள், நான் கேட்கும் ஒலிகள் என்று புலன்களால் அறியப்படும் புற உலகும் இந்த பிரக்ரிதியில் அடங்கும்.

சரி, அப்படி என்றால் புருஷன் என்பது என்ன ?

 என் புலன்கள், என் புலன்கள் செய்யும் செயல்கள், அவை உணரும் இந்த உலகம்  என்று எல்லாம் பிரகிரிதியில் அடங்கும் என்றால் மிஞ்சி இருப்பது எது ?

புருஷன் என்பது என்ன ?

இவற்றை அறியும் அறிவு, இவற்றை அறியும் நான் என்ற அந்த உள்ளுணர்வு, அதுதான் புருஷன்.

இந்த ப்ரகிர்தி மற்றும் புருஷன் இரண்டும் சேர்ந்துதான் இந்த உலகம்  பிறக்கிறது.

இதில் எது முதலில்  பிறந்தது,எது இரண்டாவது பிறந்தது என்ற கேள்விக்கு வசிட்டர் விடை தருகிறார்.

இரண்டுமே அநாதியானது. இரண்டுக்குமே பிறப்பு என்பது  எல்லை.இரண்டும் எப்போதுமே ஒன்றாகவே இருக்கின்றன.

"என்று நீ, அன்று நான் " என்று தாயுமானவர் கூறியதைப்  போல.

இந்த உலகம் எத்தனையோ வேறுபாடுகளை கொண்டு இருக்கிறது....

 சூடு, குளிர்ச்சி, உயர்வு , தாழ்வு, பள்ளம் , மேடு, ஏழை ,  பணக்காரன்,அறிஞன், முட்டாள், பலசாலி, பலவீனன், ஆண் , பெண் என்று எத்தனையோ வேறுபாடுகளை உள் அடக்கி  இருக்கிறது.

இந்த வேறு பாடுகள் எங்கிருந்து வருகின்றன ? பிரக்ரிதி என்ற புற உலகில் இருந்தா  இருந்தா ? அல்லது புருஷன் என்று கூறப்படும் என் அகத்தில் இருந்தா ?

குணங்களும், வேறுபாடுகளும் பிரக்ரிதியில் இருந்து தோன்றுகின்றன என்கிறது  கீதை.

அப்படி என்றால் புருஷனின் பங்கு என்ன ?

அது அடுத்த ஸ்லோகத்தில்  வருகிறது.

 


No comments:

Post a Comment