Tuesday, February 23, 2016

கீதை - 13.25 - குருவருள்

கீதை - 13.25 - குருவருள் 


अन्ये त्वेवमजानन्तः श्रुत्वान्येभ्य उपासते ।
तेऽपि चातितरन्त्येव मृत्युं श्रुतिपरायणाः ॥१३- २५॥

அந்யே த்வேவமஜாநந்த: ஸ்²ருத்வாந்யேப்⁴ய உபாஸதே |
தேऽபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ஸ்²ருதிபராயணா: || 13- 25||

அந்யே =  மற்றவர்கள்

து = மேலும்

ஏவம் = அப்படியாக

அஜாநந்த:= அறியாமையில், அறியாமல்

ஸ்ருத்வ = கேட்டு

அந்யே ப்ய = மற்றவர்களிடம் இருந்து

உபாஸதே = உபாசித்து, ஸ்ரைத்தையாகக் கேட்டு

தே = அவர்கள்

பி = இருப்பினும்

சா = மேலும்

அதிதரந்தி = கடக்க முடியும்

யேவ = நிச்சயமாக
ம்ருத்யும் = இறப்பை , மரணத்தை

ஸ்ருதி பராயணா: = கேட்டு மனனம் செய்து

இவற்றை அறியாதவர்கள், மற்றவர்களிடம் இருந்து கேட்டு அறிந்து கொண்டு அதன் படி வாழ்வாராயின், அவர்களும் மரணத்தை வெல்வார்கள். 

முந்தைய ஸ்லோகத்தில் புருஷன், பிரகிருதி மற்றும் குணங்கள் இவற்றை அறிந்து கொள்ள  மூன்று வழிகளை வியாசர் கூறினார்.

தியானம், யோகம், கர்ம யோகம்.

ஆழ்ந்து சிந்திக்க முடிந்தவர்கள் ஞான மார்கத்தில் சென்று இதனை அறிய முடியும்.

ஞான மார்க்கம் முடியாதென்றால், யோக மார்கத்தில் சென்றும் இதை அடையலாம்.

யோகமும் முடியாது, எனக்குத் தெரிந்ததெல்லாம் வேலை செய்வது மட்டும் தான் என்றால், அந்த வேலையையே யோகமாக மாற்றி கர்ம யோகத்தின் மூலம்  இவற்றை அறிய முடியும்.

சரி, இதுவும் முடியாது.

கர்ம யோகமும் குழப்பமாக இருக்கிறது, புரியவில்லை என்றால் என்ன செய்வது.

ஒரு தாய்க்கு சில குழந்தைகள் இருந்தால் எல்லாக் குழந்தையும் ஒன்று போலேவா இருக்கும் ? ஒன்று படிப்பில் சுட்டியாக இருக்கும், இன்னொன்று விளையாட்டில் திறமைசாலியாக இருக்கும் , இன்னொன்று பாடலில், நடனத்தில் என்று தன் திறமையைக் காண்பிக்கும்,

அது போல கீதை, ஒவ்வொருவருக்கும் ஒரு வழியைக் காட்டுகிறது.

கர்ம யோகமும் முடியாதவர்கள் என்ன செய்வது ?

அவர்கள், மற்றவர்கள் சொல்லக் கேட்டு, அதன் படி நடந்தால் அவர்களும் மரணமில்லா பெருவாழ்வு வாழலாம் என்கிறது கீதை.

யார் அந்த மற்றவர்கள் ?

மேலே கூறிய மூவர்கள் - ஞான, யோக, கர்ம யோகா மார்கத்தில் சென்று உண்மையை உணர்ந்து கொண்டவர்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு, அதன் படி வாழ்ந்தால், இந்த இறப்பு பிறப்பு என்ற இருமையில் (duality ) இருந்து விடுபடலாம்.

தனக்குத் தானே அறிந்து கொள்ள முடியாதவர்கள், ஆசாரியனிடம் கேட்டு தெரிந்து கொண்டு, அதன் படி வாழ வேண்டும்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

குருவை எங்கு போய் தேடுவது ? யார் உண்மையான குரு, யார் போலி என்று ஒன்றும் தெரியவில்லையே ? தவறான ஒருவரை பின்பற்றி விடக் கூடாதே என்ற பயம் இருக்கும்.

கவலைப் படாதீர்கள்.

நீங்கள் தயாராக இருக்கும் போது குருவருள் உங்களுக்குத் தானே கிடைக்கும்.

அறிவுத் தாகம் அளவுக்கு அதிகமாக இருந்ததால், ஒரு கல் குருவாக இருந்து அனைத்தையும் கற்றுத் தந்தது ஏகலைவனுக்கு. குரு நேரில் வர வேண்டும் என்று இல்லை. ஒரு கல் கூட உங்களுக்கு கற்று தரும். தந்தது.

பாதுகை பரதனை காக்கவில்லையா ?

தேடல் தான் முக்கியம்.

தேடுங்கள். கண்டடைவீர்கள்.








No comments:

Post a Comment