கீதை - 11.18 - அறியத்தக்கதில் உயர் தனி இடம் நீ
त्वमक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परं निधानम् ।
त्वमव्ययः शाश्वतधर्मगोप्ता सनातनस्त्वं पुरुषो मतो मे ॥११- १८॥
த்வமக்ஷரம் பரமம் வேதி³தவ்யம் த்வமஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் |
த்வமவ்யய: ஸா²ஸ்²வதத⁴ர்மகோ³ப்தா ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே || 11- 18||
த்வம் = நீயே
அக்ஷரம் = அழிவற்றவன் (க்ஷரம் = அழியக் கூடியது. அக்ஷரம் = அழிவற்றது)
பரமம் = உயர்ந்தவன்
வேதிதவ்யம்= அறியத்தக்கதவன்
த்வம் = நீ
அஸ்ய = இந்த
விஸ்வஸ்ய = இந்த பிரபஞ்சத்தில்
பரம் = ஆதி, உயர்ந்தது
நிதாநம் = உறைவிடம்
த்வம் = நீயே
அவ்யய: = மாறாத
ஸாஸ்வத = நிரந்தரமான
தர்ம = தர்மத்தின்
கோப்தா = காவலன்
ஸநாதந = நிரந்தரமான, அழிவற்ற
த்வம் = நீயே
புருஷோ = புருஷன்
மதோ மே = என்று நான் நினைக்கறேன்
நீயே அழிவில்லாதவன், அறியதக்கவற்றில் உயர்ந்தவன் நீ, என்றும் உள்ள அறத்தினை காக்கும் புருஷன் நீ.
எது அழிவில்லாதது ?
பிறக்கும் எதுவும் அழியும்.
தோன்றும் எதுவும் மறையும்.
எனவே அழிவில்லாதது பிறக்காத, தோன்றாத ஒன்றாக இருக்க வேண்டும்.
பிறக்காத, தோன்றாத என்றால் எப்போதும் அது நிரந்தரமாக இருக்க வேண்டும்.
எது அது ?
அது பொருளாக இருக்க முடியாது. பொருள் என்றால் தோற்றுவிக்கப் பட்டிருக்க வேண்டும்.
அது எந்த ஒரு உயிராகவும் இருக்க முடியாது. உயிர் என்றால் பிறந்திருக்க வேண்டும்.
பின் எது அது ?
இந்த உலகை நடத்திச் செல்லும் அறம் அல்லது உண்மை.
எந்த உண்மை, எந்த விதி, எந்த அறம் என்றும் நிலைத்து நிற்கிறதோ அதுவே நீ என்று அர்ஜுனன் அறிகிறான்.
அதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்த மாதிரி.
ஒரு உதாரணம் பார்ப்போம்.
பொருள்கள் கீழே விழுகின்றன. ஆப்பிள் விழுகிறது, கல் விழுகிறது, இல்லை விழுகிறது, மழை விழுகிறது...ஒவ்வொன்றுக்கும் ஒரு விதி இருக்கிறதா ? இல்லை அனைத்தையும் இயக்கம் ஒரு விதி இருக்கிறதா ?
ஒரு விதி அனைத்தையும் கட்டுப் படுத்துகிறது. அந்த விதி சாஸ்வதமானது. என்றும் உள்ளது. அழிவில்லாதது.
அதை அறிந்தால், கீழே விழும் பொருள்கள பற்றிய அனைத்தையும் அறிந்த மாதிரி.
இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு விதி இருக்கிறதா அல்லது கீழே விழுவது, மேலே எழுவது, பக்கவாட்டில் நகர்வது என்று எல்லாவற்றிக்கும் சேர்த்து ஒரு விதி இருந்தால் எப்படி இருக்கும் ?
அதை அப்படியே இன்னும் விரிவாக்கினால், மனிதர்களின் எண்ணங்களை, செயல்களை, இவற்றை கட்டுப் படுத்தும் ஒரு விதி இருக்கும் என்றால் அதை அறிவது எவ்வளவு முக்கியம். அந்த விதியை இறைவனாக காண்கிறான் அர்ஜுனன்.
No comments:
Post a Comment