Friday, April 8, 2022

பகவத் கீதை - 2.55 - ஸ்திதப்ரஜ்ஞன் என்றால் யார் ?

பகவத் கீதை - 2.55 - ஸ்திதப்ரஜ்ஞன்  என்றால் யார் ?


 श्रीभगवानुवाच

प्रजहाति यदा कामान्सर्वान्पार्थ मनोगतान्।

आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते॥५५॥


ஸ்ரீப⁴க³வாநுவாச

ப்ரஜஹாதி யதா³ காமாந்ஸர்வாந்பார்த² மநோக³தாந்|

ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ததோ³ச்யதே ||2-55||



பொருள் 


https://bhagavatgita.blogspot.com/2022/04/255.html


 (pl click the above link to continue reading)




ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான், கண்ணன், சொல்கிறான் 

ப்ரஜஹாதி = துறக்கிறான் 


யதா³ = அப்போது 


காமாந் = ஆசைகளை, விருப்பங்களை 


ஸர்வாந்  = அனைத்தையும் 


பார்த = பார்த்தனே 


மநோக³தாந் = மனோ + கதன் = மனதில் உள்ள, மனதில் சென்ற , மனதில் தோன்றிய 


ஆத்மந்  = தன்னுள் 


யேவ = உறுதியாக 


ஆத்மநா = தனக்காக 


துஷ்ட: = அமைதி அடைந்து, சாந்தி அடைந்து 


ஸ்தி²தப்ரஜ்ஞஸ் = உறுதியான சித்தத்தை உடையவன் 


ததா = அப்போது 


உச்யதே  = சொல்லப் படுகிறது ||2-55||


ஸ்திதப்ரஜ்ஞன் என்பவன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்தையும் துறந்து, தன்னுள் தானே மகிழ்ந்து, அமைதி கொண்டு இருப்பான் ஸ்திதப்ரஜ்ஞன் என்பவன். 


இது ஒரு முக்கியமான ஸ்லோகம். .மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஸ்லோகமும் கூட. 


ஸ்திதப்ரஜ்ஞன் என்பவன் மனதில் உள்ள அனைத்து ஆசைகளையும் துறந்து விட்டவன் என்பது முதல் கூறு. 


ஹா...கீதை எல்லோரையும் சாமியாராகப் போகச் சொல்கிறது என்று ஆரம்பித்து விடுவார்கள். இன்பங்களை அனுபவிப்பது என்பது வேறு. இன்பங்களுக்கு ஆசைப் படுவது என்பது வேறு. 


இன்பம் எதில் இருக்கிறது?


சிறு பிள்ளையாக இருக்கும் போது பொம்மைகளில் ஆசை. அதை வைத்து விளையாடுவதில் இன்பம். புது புது பொம்மைகள் வாங்குவது இன்பம். அது அப்படியே இருக்கிறதா?


கொஞ்ச காலம் சென்ற பின், வேறு ஒன்றின் பின் மனம் செல்கிறது. 


வாலிப வயதில் எதிர்பாலரின் மேல் ஆசை. அவர்களோடு பேசுவது, பழகுவது போன்றவறில் இன்பம். 


அப்புறம், பணம், சொத்து, பிள்ளைகள், அதிகாரம், என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் மனம் ஏதோ ஒன்றின் பின் போகிறது. 


எதன் மேலும் மனம் உறுதியாக நிற்பது இல்லை. 


பொம்மை தந்த இன்பம் என்ன ஆனது? அது எங்கே போனது?


இன்பம் பொம்மையிலா இருக்கிறது? அப்படி என்றால் எல்லோருக்கும் அதில் இன்பம் வர வேண்டுமே? எல்லா காலத்திலும் இன்பம் வர வேண்டுமே?


மகிழ்ச்சி, இன்பம் என்பது வெளியில் உள்ள பொருளில் இல்லை என்று தெரிகிறது அல்லவா?


ஆனாலும், ஒரு காலத்தில் பொம்மை வைத்து விளையாடிய போது இன்பம் இருந்ததே? காதலியின் கண் பார்வையில் உடல் எல்லாம் புல்லரித்ததே? எப்படி அதில் இன்பம் இல்லை என்று சொல்ல முடியும்? 


சரி, அதில் இன்பம் இருப்பதாகவே கொள்வோம். அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டாகி விட்டது.


ஒரு வருடம் கழித்து அதே புல்லரிப்பு இருக்குமா?


ஐந்து வருடம் கழித்து ? பத்து வருடம்? இருபது வருடம், நாற்பது வருடம்?


இன்பம் போய் விடுகிறது. 


இன்பம் பொருளில் இல்லை. இன்பம் வெளியில் இல்லை. இன்பம் தனக்குள்ளே இருக்கிறது. அதை முதலில் கண்டு கொள்ள வேண்டும். 


நல்ல இசை கேட்கும் போது கண் ஏன் மூடிக் கொள்கிறது? இன்பம் உள்ளே இருக்கிறது. உள்ளே உள்ள இன்பத்தை வெளியில் உள்ள பொருள்கள் கொண்டு வருகின்றன. 


நல்ல சுவையான இலட்டை வாயில் போட்டவுடன், "ஹ்ம்ம்ம் ...என்று கண்ணை மூடி இரசிக்கிறோம்". ஏன்?  இன்பம் உள்ளே எங்கேயோ இருக்கிறது. 


வெளியில் இன்பம் இருக்கிறது என்று ஓடிக் கொண்டு இருக்க மாட்டான் ஸ்திதப்ரஜ்ஞன். இன்பம் வெளியில் இல்லை என்றால் அதற்கு ஏன் ஆசைப்பட வேண்டும்? 


எத்தனையோ பொருள்களை இன்பம் தரும் என்று தேடி ஓடினோம். அவை இன்பம் தரவில்லை. மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இருக்கிறதா? 


எனவே "அவன் மனதின் ஆசைகளை முற்றுமாக துறந்து விட்டவன்" என்கிறது கீதை. 


சரி, ஆசையே இல்லாமல் ஒரு ஜடம் போல இருப்பானா என்றால் இல்லை, தனக்குள் இன்பத்தைக் கண்டு கொண்டவன் அவன். அவனுக்குத் தெரியும் இன்பம் தனக்குளே இருக்கிறது என்று. 


எனவே, எல்லோரையும் விட அவனே மிகவும் சந்தோஷமாக இருக்கிறான். 


வெளியில் உள்ள பொருள்கள் வந்தால் வரட்டும். அதைத் தேடி அவன் ஓடுவதில்லை. அவற்றின் மேல் ஆசை கிடையாது. நாளை அவை விட்டுப் போனாலும் கவலை இல்லை. 


இது புரிந்து விட்டால் அனைத்து குழப்பங்களும் தெளியும். மனம் எல்லையற்ற இன்பத்தில் திளைக்கும். 


யோசித்துப் பாருங்கள். புரிந்தால் நல்லது. 

1 comment:

  1. அருமையான விளக்கம். நன்றி

    ReplyDelete