Saturday, May 14, 2016

கீதை - 15.14 - அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்

கீதை - 15.14 - அன்னத்தை ஜீரணமாக்குகிறேன் 




अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः ।
प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् ॥१५- १४॥

அஹம் வைஸ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஸ்ரித: |
ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம் || 15- 14||


அஹம் =நான்
வைஸ்வாநரோ = அனைத்து உயிர்களிலும்

பூத்வா = சேர்ந்து

ப்ராணிநாம் = உயிர் வாழ்வனவற்றில்

தேஹம் = உடல்

அஸ்ரித: = அடைந்த பின்

ப்ராணா = பிராண

அபாந = அபான

ஸமாயுக்த: = சமமாக சேர்த்தபின்

பசாம் = சமைக்கிறேன்

அன்னம் = உணவை

சதுர் விதம் = நான்கு விதமாக



நான் வைசுவாநரனாய், உயிர்களில் உடலை சார்ந்து இருக்கிறேன். ; பிராணன் அபானன் என்பவற்றைக் கொண்டு நான்கு விதமாக உணவை ஜீரனமாக்குகிறேன். 

வைஸ்வநரா என்றால் உணவை ஜீரணிக்கும் அக்னி என்று பொருள் சொல்கிறார்கள். நான்கு விதமாக உணவை என்றால் என்ன ? நாம் உணவை நான்கு  விதமாக உட்கொள்கிறோம்.

அவையாவன

போக்ஷியம் - கடித்து அரைத்து உண்பது
போஜ்யம் - கடிக்காமல் உண்பது. அதாவது விழுங்குவது
லேஹியம் - நக்குவது (தேன் , பஞ்சாமிர்தம் போன்றவற்றை)
கோஷ்யம் - உறிஞ்சுவது (நீர் ஆகாரங்களை - பால், மோர் போன்றவற்றை)

பிராணன், அபானன் - பிராணன் என்றால் வாயுவை மேல் நோக்கி இழுப்பது. அபாணன் என்றால் வாயுவை கீழ் நோக்கி விடுவது.  மூச்சு விடுவது என்று சுருக்கமாக சொல்லலாம்.

சரி, இது என்ன கீதை பாட்டுக்கு ஏதோ மருத்துவ புத்தகம் மாதிரி போய்க் கொண்டு இருக்கிறதே என்று நாம் நினைக்கலாம்.

கண்ணன் உணவைப் பற்றியா சொல்கிறான் ? உணவு என்பது ஒரு குறியீடு.

இன்றைய சமுதாயத்தில் சிக்கல் என்ன என்றால் அனைத்தையும் அறிவியல் பூர்வமாக நிரூபணம் பண்ணிக் காட்டு என்று கேட்பது தான்.

அனுபவங்களைக்  கூட அறிவியல் பூர்வமாக நிரூபணம் பண்ண முடியுமா என்று கேட்கும் ஒரு தலை முறை வந்துவிட்டது.

தாயன்பு, காதலியின் முத்தம், குழந்தையின் அரவணைப்பு, பாசம், கருணை, பக்தி, நம்பிக்கை, என்பதெல்லாம் நிரூபனங்களுக்கு அப்பாற்பட்டவை.


நாம் விரும்புகிறோமோ இல்லையோ, நமக்கு வேண்டி இருக்கிறதோ இல்லையோ, நம்மையும் அறியாமல் நாம் உண்மையைத் தேடிக் கொண்டுத்தான் இருக்கிறோம்.

சிலவற்றை அலசி ஆராய்ந்து, ஒன்றுக்கு பலமுறை சரி பார்த்து ஏற்றுக் கொள்கிறோம். கடித்து, அரைத்து உண்பது போல. இது அறிவியல் சார்ந்த உண்மை.

சிலவற்றை, அனுபவத்தால் அறிய முடியாது. அறிவால் அறிய முடியும். பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தால் அடிபட்டு உயிர் போய் விடும் என்பதை குதித்து பார்த்து அறிந்து கொள்ள முடியாது. அறிவினால் , சரி பார்க்காமல் ஏற்றுக் கொள்கிறோம். உணவை அப்படியே விழுங்குவதைப் போல.

சிலவற்றை, கொஞ்சம் அனுபவத்தால் அறிய முடியும். முழுவதும் அறிய முடியாது.  கையில் பிடிக்க முடிக்காது. ஒரு கணம் இருக்கும். மறு கணம்   போய் விடும். அந்த ஒரு கணத்தில் அதன் தன்மை புரியும். அதிலிருந்து நாம் மேற்கொண்டு அறிந்து கொள்ள வேண்டியதுதான். தேன் ஒரு தேக்கரண்டி வாயில் விட்டால் , தித்திக்கும். அதை வாயில் வைத்துக் கொண்டு இருக்க முடியாது. வழுக்கிக் கொண்டு ஓடி விடும். ஒரு ஒரு துளி இவ்வளவு இனிப்பாக இருக்கிறது என்றால் முழவதும் எப்படி இருக்கும் என்று உணர்ந்து கொள்ளலாம்.

சிற்றின்பம் சில வினாடி தான். தன்னை மறந்த அந்த ஒரு நொடி இருக்கும். அதை அனுபவமாக மாற்றி அறிவுக்கு கொண்டு செல்வதற்குள் மறைந்து விடும். சிற்றின்பம் இப்படி என்றால், பேரின்பம் எப்படி இருக்கும் என்று உணர்ந்து கொள்ள வேண்டியதுதான்.

சிலவற்றை அனுபவத்தால் கொஞ்சம் அறிய முடியும். ஆனால் அதை முழுவதும் பிரித்து ஆராய முடியாது. சில உணவை உறிஞ்சி உண்பது போல. வாயில் இருக்கும். தேன் போல வழுக்கிக் கொண்டு போகாது. ஆனால் கடித்து, அரைத்து, நாவால் துழாவி அறிய முடியாது. மோர், பால் இவற்றைப் போல.

சரி, உண்மைகளை பல விதங்களில் அறிகிறோம். அது சரிதான். அதனால் என்ன ?

இதை தெரிந்து நமக்கு என்ன பலன் ?

இப்படி நமக்கு கிடைக்கும் உண்மைகளை, அறிவை, அனுபவங்களை நம் வாழ்க்கைக்கு ஏற்றவற்றை நாம் தேர்வு செய்து கொள்ள வேண்டும். வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றை  விட்டு விடவேண்டும்.

இனிய சங்கீதத்தை கேட்கும் போது நாம் மெய் மறந்து விடுகிறோம்.

மது போன்ற வஸ்த்துக்களை அருந்தும்போதும் மெய் மறந்து விடுகிறோம்.

நல்லதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாதவற்றை தள்ளி விடவேண்டும்.

மூச்சு விடும் போது அனைத்து வாயுக்களும் நமக்குள் செல்கின்றன. தேவையான பிராண வாயுவை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை வெளியே விட்டு விடுகிறோம் அல்லவா. அது போல.

சரி, எது நல்லது எது கெட்டது என்று எப்படி அறிந்து கொள்வது ?

அதை செய்யும் செயலாக நான் இருக்கிறேன் என்கிறான் கண்ணன். நான் என்றால் ஏதோ கண்ணன் வந்து ஒவ்வொருவரிடமும் வந்து இது இது இப்படி என்று சொல்லிக் கொண்டு இருப்பதாக அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது.

"நான் வைஸ்நரவாக இருந்து உணவை ஜீரணம் செய்கிறேன்" என்கிறான்.

உடலில் உள்ள வைஸ்நரா -அக்னி என்பது ஒரு குறியீடு. உணவை அக்னி ஜீரணிப்பது போல, அனுபவங்களை ஜீரணித்து நல்லதை ஏற்றுக் கொண்டு, அல்லதாவற்றை விட்டு விட வேண்டும் எனப் பொருள் கொள்ள வேண்டும். பிராணனை ஏற்று, அபாணனை வெளி விடுவது போல.

திருவிளையாடலில் நரியை பரியாக்கிய கதை ஒன்று உண்டு. மனிவாசகருக்காக , சிவா பெருமான் காட்டில் உள்ள நரியை எல்லாம் குதிரையாக செய்து கொண்டு வந்தாராம்.

மிகப் பெரிய கடவுளுக்கு இதுதான் வேலையா ?

அவர் நினைத்து இருந்தால் மணி வாசகருக்கு நேரே முக்தி கொடுத்து இருக்க முடியாதா ?

நரி எப்போதும் கீழ் நோக்கி மூச்சு விடும் பிராணி. ஓடும் போது தலையை கீழ் நோக்கி வைத்து கொண்டே ஓடும்.

குதிரை மேல் நோக்கி மூச்சை இழுக்கும் பிராணி.

பிராணனை இழுத்து அபானானை விடும் இந்த சூக்குமம் தெரிந்தால் ஞானம் பிறக்கும் என்று சொல்லாமல் சொன்ன கதை அது.

சிந்தியுங்கள்,

இந்த வாழ்வு ஒரு வேள்வி. ஞான வேள்வி. நாளும் ஞானம் தேடித்தான் இந்த ஓட்டம்.

அந்த உயர்ந்த ஞானம் உங்களுக்கு கிட்ட என் வாழ்த்துக்கள்.







No comments:

Post a Comment