Sunday, May 8, 2016

கீதை - 15.12 - எல்லாம் ஆனந்தமே

கீதை - 15.12 - எல்லாம் ஆனந்தமே 


यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् ।
यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम् ॥१५- १२॥

யதாதித்யகதம் தேஜோ ஜகத பாஸயதேகிலம் |
யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம் || 15- 12||



யதா = எது

ஆதித்யகதம் = சூரியனில் இருந்து

தேஜோ = ஒளிர்கிறதோ

ஜகத் = உலகம் அனைத்தும்

பாஸயதே = ஒளிரச் செய்கிறதோ

அகிலம் = உலகம் அனைத்தையும்

யத் = எது

சந்த்ரமஸி = சந்திரனின் ஒளியில்

யத் = எது

ச  = மேலும்

அக்நௌ =  அக்கினியில்

தத் = அது

தேஜோ = தேஜோ மயமாக

வித்தி = அறிந்து கொள்

மாம் அகம்  = என்னுடையது என்று



சூரியன், சந்திரன், அக்னி இந்த மூன்றில் உள்ள ஒளியும் என்னுடையது என்றே உணர்.




பொருள் தெரிகிறது. அவற்றின் குணங்கள் தெரிகிறது. அவற்றை அனுபவிக்கும் போது ஏற்படும் அனுபவம் தெரிகிறது.

எனக்கும் , அந்த பொருளுக்கும் இடையே ஆன அந்த தொடர்பு எப்படி ஏற்படுகிறது ?

இது நல்லது, கெட்டது , இன்பம் , துன்பம், என்ற உணர்வு நமக்கு எப்படி ஏற்படுகிறது ?

சிலவற்றை நாமே நேரடியாக பார்த்து, தொட்டு, ருசித்து, முகர்ந்து அறிய முடியும் .

சிலவற்றை புலன்களால் நேரடியாக அறிய முடியாது ஆனால் மனதால் சிந்தித்து அறிய முடியும்.

சிலவற்றை , சிந்தித்தாலும் அறிய முடியாது. குழப்பம் தான் மிஞ்சும். அப்போது , அது பற்றி மற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள முடியும்.

பெற்றோரிடம், ஆசிரியரிடம், ஆசாரியனிடம், குருவினிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

இப்படி எந்த மூலம் அறிந்தாலும், இறுதியில் அறிதல் என்பது நமக்குள் நிகழ வேண்டும்.

பொருளை விளங்கச் செய்யும் ஒளி சூரியனில் இருந்து வரலாம், சந்திரனில் இருந்து வரலாம், அக்கினியில் இருந்து வரலாம் ஆனால் அந்த அனைத்து  ஒளியும் பிரகாசம் அடைவது நான் பார்க்கும் போது தான்.

எனக்குள் பார்த்து அறியும் ஞானம் இல்லை என்றால் சூரிய ஒளி  இருந்தாலும் இல்லாதது போலத்தான்.

ஒளியின் செயல் நமக்கு பொருள்களை தெளிவாக காண்பிப்பது. நமக்குள் அந்த தெளிவு வரவில்லை என்றால் , ஒளி இல்லை என்று தானே அர்த்தம். ஒளி இல்லாத போதும் பாம்பா கயிறா என்று தெரியவில்லை. ஒளி வந்தபின் அந்த தெளிவு வர வேண்டும் அல்லவா ? வரவில்லை என்றால் ஒளியும் ஒளி இன்மையும் ஒன்றுதானே.

தெளிவு ஒளியால் வருவது இல்லை. என் அறிவினால், ஞானத்தால் நிகழ்கிறது.  எனவே, அந்த ஒளியின் ஊற்று , ஒளியின் தன்மையை பூர்த்தி செய்வது நான்தான்.

எனவே, சூரிய, சந்திர, அக்கினியின் ஒளி எல்லாம் என்னுள் இருந்து வந்தது என்றே அறி என்றான்.

உலகமும் அது தரும் அனுபவமும் நமக்குள் இருந்தே எழுகிறது.

சூரிய ஒளி என்னுள் இருந்து எழுகிறது என்று சொன்னால் உடனே நான் தான் சூரியனை ஒளி விடச் செய்கிறேன் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது.

ஒளி என்பது நமக்கு பார்வை என்ற அனுபவத்தைத் தருகிறது.

ஒளி இல்லை என்றால் பார்வை என்ற அனுபவம் நிகழாது.

அந்த அனுபவம் பொருளில் இல்லை, பொருளின் குணத்தில் இல்லை..என்னுள் இருக்கிறது என்று சொல்கிறது கீதை.

இன்னொரு பொருள்;

இந்த உலகம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாகத் தெரிகிறது.

நண்பன் பகைவனாகத் தெரிகிறான்.

நல்லது கெட்டதாக மாறுகிறது.

இன்பம் தந்தது பின்னாளில் துன்பமாக மாறிப் போகிறது.

காலையில் இருந்தது போல மாலையில் இல்லை. மாலையில் இருந்தது போல இரவில் இல்லை. இரவில் இருந்தது போல மறு நாள் காலையில் இல்லை.

நேற்று போல இன்று இல்லை. இன்று போல நாளை இல்லை.

காலையில் சூரியன் நமக்கு ஒரு காட்சியைத் தருகிறது.

மாலையில் நாம் விளக்கு ஏற்றி வைத்து சிலவற்றை காண்கிறோம் .

இரவில் நிலவு ஒளி தந்து காட்சிகளை காண வைக்கிறது.

காட்சிகள் மாறுகின்றன. பொருள் மாறுவது இல்லை. ஒளியின் தன்மையால் அனுபவம் மாறுகிறது.

அனுபவம் என்னுள் இருந்து எழுகிறது.


உலகம் பலப் பலவாக இருக்கிறது.

ஆண் , பெண், இரவு பகல் என்று எத்தனையோ வடிவங்களில், உருவங்களில் இருக்கிறது.

இந்த வேற்றுமைகள் நமக்குள் எழுவது.

இதையே மணிவாசகர் சொல்கிறார்....



அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.


படித்துப் பாருங்கள். கரைந்து போகலாம்.

அனுபவத்தின் உச்சம்.

ஆனந்தத்தின் எல்லை.

இந்த உலகம்  ஆனந்தம் இன்றி வேறு இல்லை.

அந்த ஆனந்தத்தில் , குளிர்ந்த இந்த நீரோடையில் பாய்ந்து ஆட்டம் போடுவோம் என்கிறார்.

எல்லா அனுபவமும் ஆனந்தம் தான்.

கவலையை விடுங்கள்.

ஆனந்தம் என்றென்றும் உங்களோடு இருக்கட்டும்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/05/1512.html )

No comments:

Post a Comment