Monday, September 14, 2015

கீதை - 13.15 - அது அசைகிறது, அசையாமல் இருக்கிறது - பாகம் 2

கீதை - 13.15 -  அது அசைகிறது, அசையாமல் இருக்கிறது - பாகம் 2 


बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥

ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச |
ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||


பஹிரந்தஸ் = பஹி + அந்தஸ் = வெளியே உள்ளே

ச = மேலும்

பூதாநாம் = அனைத்து உயிர்களிலும்

அசரம் சரம் = சரம் என்றால் அசைவது; அசரம் என்றால் அசையாதது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

ஸூக்ஷ்மத்வாத் = நுண்ணிய (சூக்ஷுமம் = நுண்ணியது)

தத்  = அது

அவிஜ்ஞேயம் = அறிய முடியாத

தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது

சா = மேலும்

அந்திகே = அருகில் உள்ளது

ச = மேலும் அது

அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது. அசைவது, அசையாதது. நுண்மையானது. அறிய முடியாதது. தூரத்தில் இருப்பது. அருகில் இருப்பது.


அது எப்படி ஒன்று அசையும் செய்யும் ? அசையாமலும் இருக்கும் ?

ஒன்று அசைகிறது என்று சொன்னால் , அது அசைய இடம். .அந்த இடம், அசையும் அந்த பொருளில் இருந்து வேறு பட்டதாய் இருக்க வேண்டும்.

எங்கும் நிறைந்த ஒன்று எப்படி அசையும் ? அது அசைத்து வேறு எங்கு போகும் ?

அது தான் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறதே.

முந்தைய பகுதியில், அது உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து இருக்கிறது என்று பார்த்தோம். அப்படி நிறைந்த ஒன்று அசைய முடியாது அல்லவா ?

சரி, அசைய முடியாது என்று ஏற்றுக் கொண்டால், பின் அசைகிறது என்றும் வருகிறதே. அது எப்படி ?

நீங்கள் ஒரு இரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அருகில் ஒரு அமர்ந்து இருக்கிறார். அவரைப் பொருத்தவரை நீங்கள் அசையாமல் அந்த இரயில் பெட்டியிலேயே இருக்கிறீர்கள். ஆனால், வெளியில் இருந்து பார்பவர்களுக்கு நீங்கள் இரயிலின் வேகத்தில் செல்வது போலத்தான் இருக்கும்.

இப்போது, நீங்கள் அசைகிறீர்களா ? அல்லது அசையாமல் இருக்கிறீர்களா?

இரண்டும் தான்...அது பார்ப்பவர் பார்வையைப் பொருத்தது அல்லவா ?

அது போல எங்கும் நிறைந்த அந்த ஒன்று, பார்ப்பவர் பார்வையை பொறுத்து அசைவது போலவும் இருக்கும். அசையாதது போலவும் இருக்கும்.

இந்த வரி மிக ஆழமான வரி. இதை சரியாகப் புரிந்து கொண்டால் இறைவன் என்றால் என்ன, ஏன் இத்தனை சமயங்கள், இத்தனை வழி பாடுகள், இத்தனை வழிபடும்  முறைகள் என்று நமக்குப் புரியவரும்.

எத்தனையோ சமய பெரியவர்கள் தோன்றி இருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று நாம் குழம்பிப் போகிறோம்.

எப்படி ஒன்றுக்கு ஒன்று முரணானவை , இரண்டும் சரியாக இருக்க முடியும் ? ஒன்று இது சரியாக இருக்க வேண்டும், அல்லது அது சரியாக இருக்க வேண்டும்.

அத்வைதம், த்வைதம், விஷிஷ்டாத்வைதம் என்று சொல்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. எப்படி எல்லாமே சரியாக இருக்க முடியும் ?

உருவ வழிபாடு சரியா இல்லையா ? இறைவன் ஒருவனா ? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவனா ?

இவை அனைத்திற்கும் இந்த ஒரு வரி தீர்வு சொல்கிறது.

எப்படி என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.








No comments:

Post a Comment