Saturday, September 12, 2015

கீதை - 13.15 - உள்ளும் புறமும், அருகிலும், தூரத்திலும் இருப்பது

கீதை - 13.15 - உள்ளும் புறமும், அருகிலும், தூரத்திலும் இருப்பது


बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥

ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச |
ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||


பஹிரந்தஸ் = பஹி + அந்தஸ் = வெளியே உள்ளே

ச = மேலும்

பூதாநாம் = அனைத்து உயிர்களிலும்

அசரம் சரம் = சரம் என்றால் அசைவது; அசரம் என்றால் அசையாதது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

ஸூக்ஷ்மத்வாத் = நுண்ணிய (சூக்ஷுமம் = நுண்ணியது)

தத்  = அது

அவிஜ்ஞேயம் = அறிய முடியாத

தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது

சா = மேலும்

அந்திகே = அருகில் உள்ளது

ச = மேலும் அது

அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது. அசைவது, அசையாதது. நுண்மையானது. அறிய முடியாதது. தூரத்தில் இருப்பது. அருகில் இருப்பது.

சரிதான். மண்டை குழம்ப வேறு எங்கேயும் போக வேண்டாம். கீதையில் இரண்டு சுலோகம்   படித்தால் போதும் போல் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

பொறுமையாக, ஒவ்வொரு சொல்லாக பிரித்துப் படித்தால் பொருள் விளங்கும்.

விளங்கிக் கொள்ள முயற்சிப்போம்.

அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது

அது எப்படி ஒன்று உள்ளேயும் வெளியேயும் இருக்க முடியும் ? சாஸ்வதமான
உண்மை உள்ளும் புறமும் இருக்கும் என்றால் புரியுமா ? புரியாது.

சரி, ஒரு எளிய உதாரணம் பார்போம்.

உங்கள் வீட்டில் தொலைக் காட்சி பெட்டி இருக்கிறது. அதில் பல நிலையங்களில் இருந்து ஒலி ஒளி அலைகள் வந்து சேர்கிறது. ஆனால் , அனைத்து நிலையத்திலும் உள்ள அலைகள் ஒரே நேரத்தில் தெரிகிறதா என்றால் இல்லை. நீங்கள் எந்த நிலையத்தை தேர்வு செய்கிறீர்களோ அந்த நிலையத்தின் அலை வரிசையில் உள்ளதை நீங்கள் காண முடியும். அனைத்து நிலையங்களின் அலைகள் எங்கும் நிறைந்து இருக்கின்றன. அவை தொலை காட்சி பெட்டிக்கு  வெளியேயும் இருக்கிறது. உள்ளேயும் இருக்கிறது. அது உள்ளே போய் விட்டால் , பின் வெளியே எப்படி இருக்கும் ? உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும்  அதே நிலையத்தின் ஒளி  பரப்பை பார்க்கிறார். உங்கள் பெட்டிக்கு உள்ளேயும்  இருக்கிறது. உங்கள் பெட்டிக்கு வெளியேயும் இருக்கிறது. அவர் பெட்டிக்கு உள்ளேயும் இருக்கிறது.

ஒன்று உள்ளேயும் வெளியேயும் இருக்க முடியும் என்பது புரிகிறது அல்லவா ?
இது தொலை காட்சி பெட்டிக்கு மட்டும் அல்ல.

வானொலிக்கும் பொருந்தும்.

அவ்வளவு ஏன் ?

ஒரு வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வது அனைத்து மாணவர்களின் காதிலும் விழுகிறது. அவர்களின் உடலுக்கு உள்ளே போகிறது. மூளையை சென்று அடைகிறது. அதே சமயம்,  முன் வரிசையில் உள்ள மாணவனின் மண்டைக்குள் சென்ற ஆசிரியரின் சொல் அந்த மாணவனுக்கு வெளியே   சென்று கடைசி வரிசையில் உள்ள மாணவனையும் சென்று அடைகிறது.

உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது.

அது போல, உண்மை  / ஆத்மா / உயிர் என்று சொல்லப்படும் அது அனைத்துக்கும் உள்ளேயும் இருக்கிறது. வெளியேயும் இருக்கிறது.

உங்களுக்கு உள்ளும் இருக்கிறது.

உங்களுக்கு வெளியேயும் இருக்கிறது.

எனக்குள்ளும் இருக்கிறது.

அதற்கு பெயர் என்னவேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

உண்மை, பிரமம் , சக்தி, உயிர் , ஆத்மா...பெயரில் என்ன இருக்கிறது. ஏதோ ஒன்று எங்கும் நிறைந்து இருக்கிறது.



அது அசைகிறது. அது அசையாமல் இருக்கிறது...

அது எப்படி ஒன்று அசையும் செய்யும், அசையாமலும் இருக்கும்...

சிந்திப்போம்...








No comments:

Post a Comment